மதி, மழை சாரலை வேடிக்கை பார்த்துக்கொண்டு வராண்டாவில் காபி குடித்துக்கொண்டிருந்தார். மழையும், மலையும், சாரலும், ஆவி பறக்கும் காபியும் மனதை ததும்பச் செய்து கொண்டிருந்தபோது, கீழிருந்து மேலே ஏறி வரும் வளைவில் கல்யாணி ஏறி வந்து கொண்டிருந்தாள். தன் நினைவாகவும், சுவாசமாகவும் ஆகிவிட்டவளை, எதிர்பார்த்தும் எதிர்பாராத தருணத்தின் வெடிப்பும், அவளை எப்போது பார்க்கும்போதும் தன்னுள் ஒருங்கே எழும் சந்தோஷமும் துக்கமுமாய் குபீரென பரவியது அவருள்.

 கல்யாணி, செருப்பை உதறி விடுவித்து, கீழே உட்கார்ந்து நிதானமாய் ஆரம்பித்து ஜோராய் அழுதாள். மதி, அவள் அருகில் சென்று தன் கையில் உள்ள காபியை நீட்டினார். "குடிச்சுட்டு அழு". அவள் காபியை வாங்கி வெளியில் விசிறி அடித்தாள். மதி, உள்ளே போய் தண்ணீர் கொண்டுவந்து நீட்டினார். கல்யாணி அதை விசிறி எறிந்ததும் மறுபடி இன்னொரு டம்ப்ளரை நீட்டினார். அவள் அழுது கொண்டே சிரித்தாள்.

"மதி, என்னை கொன்னுடு, இல்ல, நீயாவது சாகு".

மதி பெருமூச்சுடன், "என்ன பிரச்சனை ?" என்றார்.

"சுமியை நான்கு நாளா காணலை".

"அவ குழந்தை இல்ல, கல்யாணி".

"அவ குழந்தை இல்ல மதி, அதுதான் பிரச்சனை".

நெற்றியை சுருக்கி, "காதல்?" என்றார்.

"ம்ம்".

"கல்யாணிக்கு இல்லாத தைரியம் அவ பொண்ணுக்கு இருக்கட்டும்". கல்யாணி கண்களில் இருந்து பொலபொலவென கொட்டும் கண்ணீரை துடைத்தாள். அந்த முகத்தின் வலியை பார்த்து மதி, "ஒரு நாளாவது என்னை திருப்பி கேளேன்" என்றார்.

"கொஞ்ச நாளாவே சந்தேகமா இருந்தது மதி. தம்பி கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்னு வீட்டில் ரொம்ப பிரச்சனை".

"இப்ப அடிக்கிறதில்லையா உன்னை?".

கல்யாணியின் முகம் அவமானத்தில் கருத்ததை பார்த்து, "சாரி" என்றார்.

"யாரு என்னன்னு சுமிகிட்ட பேச என்ன?".

"பயமாயிருந்தது மதி".

அவர் வெறுப்புடன் அவளை பார்த்தார். "அப்படி பார்க்காதே. ஒவ்வொரு நிமிஷமும் என்ன நடக்கும்னு தெரியாத வீட்டில் உயிர் வாழ நீ மட்டும்தான் ஆசுவாசம்".

"சரி, இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லு".

"திட்டாதே. ஜாதகம் பார்க்க போகணும்".

மதி தலையில் அடித்து கொண்டார். "முதலில் சுமி பிரெண்ட்ஸ் யாரையாவது பிடி கல்யாணி".

"உபயோகம் ஒண்ணும் இல்ல. பாத்துட்டேன். கடைசிதான் இது".

"வீட்டில் என்ன சொல்லிட்டு வந்திருக்க?".

"பாட்டி வீட்டுக்குன்னு. பாட்டிக்கு இங்க வந்தது தெரியும்".

"இப்போ இங்க உன்னை அனுப்பி குற்ற உணர்வை கழிச்சுக்கறாங்களா உன் பாட்டி?". கல்யாணி எழுந்தாள்.

வேதனையுடன், மதி மவுனமாகி விட்டவளை, "ம்ம் சொல்லு" என்றார். அவள் தன் பர்ஸ் எடுக்க குனிந்தபோது புடவை நெகிழ்ந்து இடுப்பில் தீயினால் சுட்ட பச்சை ரணம். மதி பதறி "என்ன இது?" என்று அருகில் வந்தார். கல்யாணி, அவரை நிமிர்ந்து பார்த்தாள். முகத்தை எப்போதும் ஏங்கி கேட்பது போல, இரண்டு கைகளால் ஏந்தவா என்று கைகள் நூலளவு எல்லையில் நின்றது. எப்போதும் போல, உனக்கு அதுதான் வேணும்னா எடுத்துக்கொள் என்ற பாவனை. அவர் கைகள் அங்கிருந்தும் அவள் தொடமுடியாதவள் என்றும் எப்போதாவது பொங்கி அழவேண்டும் என்று ஏற்படும் துக்கம் அப்போதுமாய் .கல்யாணி மதியை பார்த்தாள். "இந்த ஒரு இடம்தான், என் இடம், அந்த கதவும் எனக்கு மூடிக்கனுமா?" வார்த்தை இல்லை. கண்தான் பேசியது. மதி பின் நகர்ந்தார்.

அவர்கள் ஜாதகம் பார்ப்பவரின் வீட்டை தேடியபோது அவர் வீடு மாறி இருந்தார். "இப்போ இப்படி தேடி நீ என்ன பண்ண போறேன்னு புரியலை கல்யாணி".

"இல்ல, எனக்கு உறுதியா ஒரு விஷயம் தெரியணும்"

"அப்புறம்?"

"அப்புறம் எப்படி வீட்டில் உதை வாங்கறதுன்னு தைரியம் பண்ணிக்கலாம்". இதை அவள் சாதாரனமாய்தான் சொன்னாள். மதிக்கு நெஞ்சை பிழிந்தது. "கல்யாணி, இருக்கிறதிலேயே கஷ்டமான விஷயம் என்ன தெரியுமா?கையால் ஆகாத்தனம்தான்". கல்யாணி அந்த ஒண்டு குடித்தன வீட்டுக்குள் லாவகமாக புகுந்தாள். மரத்தடி, பெட்டிக்கடை எல்லாம் கேட்டு கேட்டு பிடித்துவிட்டாள். ஜோசியரின் மனைவி மெல்லிய குரலில், "அவருக்கு ஜுரம், ஏலாது". கல்யாணி, "அம்மா, தயவு பண்ணுங்க" மெதுவாய் அவள் முகம் பிதுங்கியது. மதி, சட்டென உள் வாசலின் கதவை திறந்தார். முதியவர், "உள்ள வாங்க" என்றார்.

கல்யாணியை பார்த்தார். மதியிடம், "என்னை தூக்குங்க" என்றார். மதி அவரை உட்கார வைத்தார். "வாசலுக்கு கூட்டி போங்க" மனைவியை அழைத்தார். அவர் உதவியுடன் தண்ணீரை தலையில் கொட்டிக்கொண்டார். மதி திக்கென்று பார்த்துக் கொண்டிருக்க, கல்யாணியும், மூதாட்டியும் அவரை துடைத்து, வேட்டியை உடுத்தி உட்கார வைத்தார்கள். கல்யாணி ஜாதக நோட்டை எடுக்க போகும்போது, தடுத்துவிட்டு, "உன் ரத்தம் உனதில்லை இனிமே". கல்யாணி ஐயோ என்று, எதுவும் வழி இல்லையா? என்று ஏங்கி அழுதாள். "இல்லம்மா, பொண்ணு போனது போனதுதான்" என்றார்.

 தரையில் உட்கார்ந்து கலங்கி அழும் கல்யாணியை மதி இதயம் நடுங்க பார்த்தார். ஒட்டி உலர்ந்திருந்த முதியவர், ஓரத்தில் கிடந்த சுவடிகள், அந்த சிறிய அறையின் சுத்தம், எங்கிருந்து என்று தெரியாமல் காற்றில் வரும் துளசியின் வாசம், தண்ணீர் ஏந்தி வரும் மூதாட்டி எல்லாமும் ஒரு நிமிடம் பொய் போல் தோன்றியது. மதி, கல்யாணியை எழுப்பினார். முதியவரிடம் பணம் தர முயற்சித்தபோது, அவர் சைகையால் மறுத்தார்.

கல்யாணியை கைத்தாங்கலாய் பிடித்து எழுப்பியபோது, முதியவர், அம்மா ........என்றார். கல்யாணி சட்டென, "அய்யா" என்று அவரருகில் போனாள். அவர் மதியையே பார்த்து கொண்டு இருந்தார். கல்யாணி மதியை திரும்பி பார்த்தாள். அவரிடம் குனிந்தாள். அவர் பார்வை மதியிடமே கூர்ந்திருந்தது.

அவர் கல்யாணியிடம் தன்னை திருப்பினார். அவள் தலையில் கை வைத்து எடுத்தார். குனிந்திருந்த அவள் முகவாயை தொட்டு, மதியை நோக்கி விரல் சுட்டி, "இந்த குழந்தை பத்திரம்" என்றார். அவர் பின்னால் மாட்டி இருந்த சாமி படத்தில் இருந்த செம்பருத்தி பூ கீழே விழுந்தது.

- இந்திரா பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.(