1

‘நேத்து உனக்கு எத்தன தடவ போன் பண்ணினேன். கெடைக்கவே இல்ல’ கடைக்குள் நுழையும்பொழுதே சொல்லிக்கொண்டு வந்தவர் சாமியின் எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்தார்.

Sad woman‘என் போன் பழுதா இருக்கு. அதான் செய்ய கடையில குடுத்துருக்கேன். ஏன்? என்ன விஷயம் ராஜா?’ சூடான மைலோவுக்கு ஆர்டர் தந்துவிட்டு சாமியிடம் திரும்பினார்.

‘நம்ம மூணு முருகேசன் ரொம்ப சீரியஸா ஆஸ்பிட்டலுல இருக்காரு. அத சொல்றதுக்குதான்..’ ராஜாவின் முகத்தில் கவலை இளையோடியதைக் கவனிக்கமுடிந்தது.

‘ஆமாவா? முந்தா நாளுதான நம்மகூட ஒக்கார்ந்து சாப்பிட்டாரு. ஏன்? என்னாச்சி? ஆக்ஸிடெண்டா?’

‘இல்ல சாமி, நேத்து விடியகாலையில ரொம்ப முடியாம போச்சாம். நெஞ்சு வலிக்கறாப்பல இருக்குதுனு சொன்னவரு மயக்கம் போட்டு உழுந்துட்டாராம். அவரு சின்ன மகன் மெடிக்கல் சென்டர்ல போய் சேத்திருக்காரு. நான் போய் நேத்து பார்த்தேன். ஐ. சி. யூல இருக்காரு. இன்னும் கண்ணு தொறக்கல. ஆஸ்திரேலியாவுல படிச்சிக்கிட்டு இருக்கிற அவரு பெரிய மகனுக்கு சொல்லிட்டாங்களாம். நேத்து ராத்திரி வந்துருப்பாருனு நெனக்கறேன்’ சுருக்கமாக சொல்லி முடித்தார் ராஜா.

‘ரொம்ப நல்ல மனுஷன். டாக்டருங்க என்ன சொன்னங்களாம்?’ மூணு முருகேசனின் நிலை கேட்டு தவித்தவராய் சாமி இருப்பதை அவரின் பதற்றத்தமான வார்த்தைகள் காட்டின.

‘மாரடைப்பு மாதிரிதான். ரத்தக் கொதி, இனிப்பு நீரு, கொலஸ்ரால் எல்லாம் அளவுக்கு மீறி போச்சாம். அவரு மகன்தான் சொன்னாரு’

‘மூணு முருகேசனின் இயற்பெயர் முருகேசன் மட்டுமே. ‘மூணு’ எனும் அடைச்சொல் அவராகவே சேர்த்துக் கொண்டது. மற்றவர்களுக்கும் ‘மூணு’ எனும் அடைச்சொல்லுடன் கூப்பிட்டால்தான் அவரைத் தெரியும். இந்த ‘மூணு’ எனும் சொல் ‘மூன்று’ என்ற எண்ணிலிருந்து திரிந்து சுருங்கியது. இந்த சொல்லுக்குப் பின்னால் முருகேசனின் வாழ்க்கையில் பெரிய வரலாற்றைக் கொண்டிருந்தது. 20 வருடங்களுக்கு முன்பு அவர் திருமணம் செய்த புதிதில் ஒரு தாடிச் சாமியாரைத் தற்செயலாக வழியில் சந்தித்தாராம். மூன்றாம் எண் இவருக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என சாமியார் காதில் ஓதியுள்ளார். முதலில் அரைகுறை மனதுடன் ஏற்றுக்கொண்டவர், விளையாட்டாக 3333 என தான் எழுதிய நான்கு நம்பர் மறுநாளே முதல் பரிசை வென்றபோது முழுதாய் தன் வாழ்க்கையை அதிர்ஷ்ட எண்ணான மூன்றிடம் சமர்ப்பித்தார். பரிசு பணத்தைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட புது கடை வரிசையில் மூன்றாம் எண் கொண்ட கடையை வாங்கி ‘கெடாய் ருன்சிட் நொம்பொர் தீகா’ (மூன்றாம் எண் மளிகை கடை) என்ற மளிகை கடையை ஆரம்பித்தபொழுது பெருத்த லாபம்.

அதிர்ஷ்ட எண்ணிடம் தன்னையும் தன் வாழ்க்கையையும் சமர்ப்பணம் செய்ததில் சிறிதளவும் தவறில்லை என தொடர்ந்து வந்து  குவிந்த லாபங்கள் தெளிவாக்கிக் கொண்டிருந்தன. அடுத்ததாக வாங்கிய இரு கடைகளின் எண்கள் மூன்றாம் எண்ணாக இல்லாத பட்சத்திலும் அந்த கடைகளின் பெயர் மூன்றாம் எண்ணையே தங்களின் பெயராக கொண்டிருந்தன. ‘கெடாய் ருன்சிட் நொம்பொர் தீகா’ மளிகைகடைகளின் வழி மலாய், சீன இனத்தவரும் இவரைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தனர். காரின் எண், வீட்டின் எண் என எல்லாவற்றையும் மூன்றாம் எண் கைப்பற்றியிருந்தது. வழங்கும் நன்கொடைகளைக் கூட 3 ரிங்கிட், 33 ரிங்கிட், 333 ரிங்கிட், 3333 ரிங்கிட் என நிர்ணயம் செய்திருந்தார். இவ்வாறாக அவர் புகழ் மூன்றாம் எண்ணோடு சேர்ந்து பரவியிருந்தது.

எல்லாரும் ‘மூணு முருகேசன்’ என்றே அழைக்கத் தொடங்கியிருந்தனர். அந்தத் தாடிச் சாமியாரை அதன் பின்னர் சந்திக்கவே இல்லை என பல முறை வருத்தப்பட்டுக் கொள்வார். வழியில் எந்தச் சாமியாரைப் பார்த்தாலும் உற்றுப் பார்ப்பார். என்றாவதொருநாள் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்பிக்கை அவரிடம் இருந்தது. அவரின் வரலாறு தெரிந்தவர்கள் அந்தச் சாமியாரைப் பற்றி வினவுவதுண்டு. மூன்றாம் எண் பணத்தைக் குவித்தாலும் பந்தா இல்லாமல் பழைய நண்பர்களுடன் கலந்துறவாடுபவராகவே இருந்தார். ராஜாவும் சாமியும் அவரின் உற்ற நண்பர்கள். ஊர் நடப்பு தொடங்கி உலக நடப்பு வரை விவாதிக்கவும் பேசவும் ஏற்ற திண்ணையாக அமைந்திருந்தது ‘கோவிந்த் கறி ஹவுஸ்’.

‘ஏன் முருகேசா.. நாங்களெல்லாம் இனிப்பு இல்லாம தண்ணி, எண்ணெய் சேக்காத சப்பாத்தி, இடியாப்பம்னு பாத்து பாத்து சாப்பிடறோம். நீ என்னான்னா கொஞ்சம் கூட கொன்ரொல் இல்லாம இனிப்பு, கோழி, எறச்சினு வெளுத்து கட்டற. இனிப்பு நீரு, ரத்த கொதிப்பு பத்தி எல்லாம் பயமில்லயா உனக்கு?’

‘எனக்கு அத பத்தில்லாம் கவலயே இல்ல சாமி. என்னை காப்பாத்த மூணாம் நம்பர் இருக்கு. என்னை சுத்தி இருக்கிற மூணாம் நம்பரு எந்த சீக்கையும் எங்கிட்ட வர உடாது’ பலமாக சிரித்துக் கொண்டார் மூணு முருகேசன்.

‘அதிர்ஷ்டம் வேற, ஒடம்பு ஆரோக்கியம் வேற. 40 வயச தாண்டிட்டாலே சாப்பாட்டு விஷயத்துல கவனமா இருக்கணும். நமக்கெல்லாம் இப்ப 60 வயசுகிட்ட ஆவ போவுது. மறந்துறாத. இன்னும் 30 வயதுனு ஒன் மூனாம் நம்பர நெனச்சிக்காத’ கேலியாக சாமி சொன்னதைக் கேட்டு மேசையில் இருந்த அனைவரும் சிரித்துக் கொண்டனர்.

‘சாமி சொல்றது உண்மைதான் முருகேசன். அடிக்கடி டாக்டருகிட்ட போயி சுகர், பிரஸ்ஸர் செக் பண்ணிக்கிட்டா நல்லது’ ராஜாவும் கூற முருகேசன் தலையாட்டிக் கொண்டாரே தவிர காதில் வாங்கி கொள்ளவேவில்லை. அவருக்கு மூன்றாம் எண்ணின் மீது வைத்திருந்த தீரா நம்பிக்கை நாளுக்கு  நாள் வளர்ந்து கொண்டிருந்தது.

ஒரு முறை மூணு முருகேசனின் சின்ன மகன் இதைத் தொட்டுப் பேச முயற்சி செய்த போது, ‘என்னடா? ஆஸ்பத்திரி, மெடிக்கல் செக் அப்னு கூப்படற? எனக்கு மூனாம் நம்பர் இருக்கு. எந்த சீக்கும் வராது தெரிஞ்சிக்க..’

‘அப்பா, சும்மா சும்மா மூணாம் நம்பருனு சொல்லிகிட்டு இருக்காதீங்க. ஏதோ மொத தடவ நம்பர் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் உழுந்துடுச்சுனு இப்படி ஒரேடியா மூட நம்பிக்கையா இருக்காதீங்க. பணம் தேட உழைப்புதான் முக்கியம், நம்பர் இல்ல. நம்ம உடம்ப நம்பரு காப்பாத்தும்னு சொல்றதும் முட்டாள்தனம்ப்பா’

‘ரொம்ப படிச்சிட்டல, அதான் மூட நம்பிக்கைனு பேசற. நம்மல தூக்கி உட்ட நம்பருடா அது. அத மறந்துட்டு தவறா பேசாத’ கோபத்தில் உச்சத்தில் இருந்தார் மூனு முருகேசன்.

‘ஓகேப்பா, விடுங்க. இனிமே நான் உங்கள மெடிக்கல் செக் அப் கூப்படல’ அப்பாவின் கோபத்தைக் கண்டு பேச இயலாதவனாய் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான். எளிதாக கோபம் வராதவர் மூன்றாம் எண்ணுக்காக கோபப்பட்டது அவரது மகனையும் வியப்பில் ஆழ்த்தவே செய்தது.

காலையில் குறுந்தகவல் ஒலி உறக்கதிலிருந்து சாமியையும் ராஜாவையும் தட்டி எழுப்பியது. அதிகாலை மூன்று மணிக்கு முருகேசன் காலமானதைத் தாங்கி வந்த செய்தி அது. அன்றைய தினம் மூன்றாம் தேதியென இருவருக்குமே ஞாபகம் இருந்தது.

- க.ராஜம்ரஞ்சனி, மலேசியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)