கட்டிங்குகள்... தமிழகத்தில் மிக பிரபலமான வார்த்தை இப்போது இது மட்டுமே. கட்டிங்குகள் இல்லாத வீடுகளே இல்லை என்பது சந்தேகமில்லாமல் கலைஞரின் சாதனையே. ஏனெனில் கட்டிங்குகள் இல்லாமல் அவர் கட்சியினர் எதையும் செய்வதில்லை என்பதை மக்கள் தவறாக பேசிவிடக்கூடாதல்லவா. இந்த ஊரில் கரண்ட் எப்போ கட்டாகும்? எத்தனை முறை கட்டாகும்? வர வேண்டிய டயத்துக்கு கரெக்டா வந்துருமா?எந்த ஊருக்கு மக்கள் சென்றாலும் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை அறிவு இது தான். மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது, எனவே, அனைத்து ஊர்களுக்கும் சம மின் தடை அளவில் அரசு வழங்கிட வேண்டும் என நீதிமன்றத்திற்கு வழக்கு செல்லும் அளவிற்கு மக்கள் அனுபவித்தது மின் தடையே.

காற்றடிக்கவில்லை, மழை பெய்யவில்லை என்று வானிலை அறிக்கையை வாசித்துக்கொண்டிருந்த மின் துறை அமைச்சர் கடைசிவரை நம்பிக்கொண்டிருந்தது தனியார் மின் உற்பத்தியை மட்டுமே. வள்ளலாய் பெயர் வாங்குவதற்காக பல்லாயிரம் கோடிகளை செலவழித்த கலைஞர் மக்களை இருட்டிலிருந்து மீட்டெடுக்க ஏதும் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியதே...இவர் வள்ளல் என பேர் வாங்குவதற்காக தமிழ்நாட்டை ஒரு லட்சத்து 1,541 கோடி ரூபாய் கடன்கார மாநிலமாக மாற்றியதுதான் மிச்சம்.

இதற்காக ஒரு வருடத்திற்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியாக கட்டவேண்டும். ஒரு நாளைக்கு 20 கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டும். 2006 ல் தி.மு.க. அரசு பதவி ஏற்ற போது தமிழக அரசின் கடன் சுமை 57,457 கோடி ரூபாய். இது 31.3.2009 அன்று கூட ரூ74,858 ஆகத்தான் இருந்தது. 2010ல் ஒராண்டில் மட்டும் ரூபாய் 26,683 உயர்ந்துள்ளது. அதாவது கலைஞரின் ஐந்தாண்டு ஆட்சியில் தமிழகக் கடன் ரூபாய். 44084 கோடிகள் உயர்ந்துள்ளது. செய்ததையெல்லாம் மக்களிடம் சொல்லுகிற இவர் இதை ஏன் சொல்லவில்லை?

மிகப்பெரிய நாடான அமெரிக்காவின் கடன் 592 லட்சம் கோடி என்றும், அனைத்து மாநிலங்களும் கடன் வாங்குவதாக இவர் பதில் கூறுகிறார். மாத சம்பளத்தை வாங்கி ஆடம்பரமாக செலவு செய்துவிட்டு அல்லது டாஸ்மாக்கில் குடிச்சிட்டு, அரிசி வாங்கவும், உப்பு வாங்கவும் ஒருவர் ஊரெல்லாம் போய் குழந்தைகள் பட்டினியாக இருக்கு என்று சொல்லி கடன் வாங்கினால் அவரை என்ன சொல்வோம் நாம்? அதைத்தான் இவரும் செய்கிறார், மக்களையும் செய்ய வைத்திருக்கிறார்.

டாஸ்மாக் நிறுவனம் ரூபாய் 14,200 கோடி லாபத்தில் இயங்குவதாக தி.மு.க.அரசு சொல்கிறது. அது ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம். இப்படி சொன்னது வேறு யாருமல்ல. சாட்சாத் டாக்டர்.ராமதாஸ் தான், அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது அல்ல. 2010 ஜனவரியில் சொன்னது தான். அதுமட்டுமல்ல டாக்டர். ராமதாஸ் கூறிய மற்றுமொரு தகவல் மிக அதிர்ச்சியானது.இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் இருப்பது தமிழகத்தில்தான், காரணம் மது விற்பனையே என்று கூறுவது மட்டுமல்ல வேறு பல அதிர்ச்சியான சில தகவல்களும் இப்போது வந்துள்ளன.தமிழகத்தில் தினசரி மது அருந்துவோரின் எண்ணிக்கை 60 லட்சம் என்பதும், அவர்களின் சராசரி வயது 28லிருந்து 13 ஆக குறைந்துள்ளது என்பதும் மிக அதிர்ச்சியாக உள்ளது.

பூரண மதுவிலக்கு என்ற பா.ம.க.வின் தேர்தல் அறிவிப்பெல்லாம் கதைக்குதவாத வெறும்பேச்சு எனவும், மது பயன்பாட்டை உடனே நிறுத்திட இயலாது எனவும் அனைவரும் அறிவர். இருப்பினும்,16 வயது வரை இலவசக்கல்வி தரவேண்டிய அரசு, அவ்வயதினருக்கு குடிப்பழக்கம் ஏற்படும் வகையில் தன் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக்கொள்வதை எவ்வகையில் நியாயப்படுத்த இயலும்?

தமிழகத்தில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.9147 கோடி மட்டுமே. உயர்கல்விக்கோ வெறும் ரூ.1463 கோடி மட்டுமே. அதாவது வாங்கிய கடனுக்கு நமது வரிப்பணத்தில் இருந்து கட்டும் வட்டிப்பணத்தை கல்விக்கு ஒதுக்கினால் போதும். தமிழகத்தில் இன்று மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் இலவசக்கல்வியை அரசே தன் முழுச்செலவில் வழங்கமுடியும். இரண்டு கோடி பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு. போராட்டங்களுக்கு தீர்வு காண முடியும். ஏன் செய்யவில்லை?

சமச்சீர் கல்வி மூலம் ஒரே கல்வி வாரியம், ஏற்றத்தாழ்வற்ற கல்வி என அறிவித்தனர். இப்போது சமச்சீர் கல்வியை அமல்படுத்திவிட்டதாக சாதனை பேசுகின்றனர். ஆனால், தமிழ்-ஆங்கிலம் வழிக்கல்வி, மெட்ரிக் பள்ளிகளிலேயே வசதி படைத்தவனுக்கு ஒரு பள்ளி, வசதி குறைந்தவனுக்கு ஒரு பள்ளி எனத் தொடரும் ஏற்றத்தாழ்வுகள் ஒழியவில்லை. 70 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதை நிரப்பிடவில்லை. அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வசதிகளை ஏற்படுத்தவில்லை.மேலும், தனியார் பள்ளிக்கட்டண ஒழுங்கு படுத்தும் சட்டம் மூலம் பள்ளியின் வசதிக்கேற்ப கல்விக்கட்டணம் என்றுதான் அமல்படுத்த முயற்சித்தாரே தவிர, சமச்சீரான ஒரே விதமான கல்விக்கட்டண முறையை அறிமுகப்படுத்த முயற்சிக்கவில்லையே! அது ஏன்? அதுவும், சட்டம் போட்டதோடு சரி.

மேலும்,சமச்சீர் கல்வியை சட்டமாக்கிட கூட முயலாமல், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவே இறுதி வரை செயல்பட்டாரே அதை ஏன் சொல்லவில்லை மக்களிடம்?2011 தேர்தலிலும், சமச்சீர் கல்வியை முழுமைப்படுத்துவது குறித்தோ அல்லது தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவது குறித்தோ ஏதும் பேசவில்லை கலைஞர். ஒருவேளை சொல்லாததையும் செய்வோம் என நினைத்து விட்டுவிட்டார்களோ என்னவோ.

தமிழை செம்மொழியென புதிய பெயர்சூட்டி 500 கோடி ரூபாய் செலவில் ஒரு மாநாடு நடத்தியதன் மூலம் முத்தமிழ் வித்தகராக தான் மாறியது எப்படியெனவும், தன்னுடைய எழுத்தில் எந்த தமிழ் உயர்ந்த தமிழ் எனவும் ஒரு பட்டி மன்றத்தை நடத்தியுள்ளார் கலைஞர். இன்றுவரை மெட்ராஸ் ஐகோர்ட் என்ற பெயரும் மாறவில்லை தமிழில் வழக்காடவும் இயலவில்லை. டால்மியா புரத்திற்கு கல்லக்குடி என்று பெயர் வைப்பதற்காக காவல்துறை தடையையும் மீறி, தொண்டர்களுடன் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து போராடிய கலைஞர் ஐந்து முறை முதல்வராக இருந்த பின்பும் இன்றுவரை தமிழுக்கு தமிழகத்தில் கிடைத்த அங்கீகாரம் என்ன? இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத மெட்ரிக் பள்ளிகள் தமிழகத்தில் தான் உள்ளன. தமிழே படிக்காமல் ஒருவர் உயர் கல்வி வரை செல்ல முடியும் என்ற அவலநிலை. 7000 தமிழாசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. 96 உயர்நிலை பள்ளிகளில் 772 மேல்நிலை பள்ளிகளில் முதுகலை தமிழாசிரியர்களே இல்லை. அரசு கலைக் கல்லூரிகளில் சுமார் 400 தமிழ் பேராசிரியர் பணியிடங்கள் காலியென தமிழகத்தில் தமிழ் கற்று கொடுப்பதற்கு கருணையும், நிதியும் இல்லாத அரசு தான் கருணாநிதி அரசு. அரசு உத்தரவுகள், சட்டங்கள் இன்றுவரை தமிழில் இல்லை. தமிழில் அர்ச்சனை செய்வதற்கு பயின்ற அர்ச்சகர்களுக்கு வேலையும் தரப்படவில்லை.

விலைவாசியை குறைக்கமுடியாது, மக்கள் அதிகமான பொருள்களை வாஙகுவதால் தான் விலை கூடிவிட்டது என்று சொன்னவர்கள் இன்று திடீரென, விலைவாசியை குறைக்க முயலுவோம் என்று மட்டுமல்ல, ஒரு படி மேலே போய். ஊக பேர வணிகத்தை கட்டுப்படுத்துவோம் என்றும் வாய் கூசாமல் வாக்களிக்கின்றனர். ஐந்து ஆண்டுகளில் ஒரு நாளாவது பேசாத கட்சி, மத்திய அரசில் இணை நிதி மந்திரி பதிவியை உடைய தி.மு.க கட்சி காங்கிரஸ் தலைமையிடம் இதுவரை பேசாமல் தேர்தலில் மட்டும் பேசுவதன் மர்மம் மக்களை ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை.

கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் 2010ல் மடடும் அரசு பணம் ரூ.750.28 கோடியை 702 மருத்துவமனைகளுக்கு தாரை வார்த்திருக்கிறார். ஆனால் மக்களுக்கு என்ன கிடைத்தது? ஸ்டார் ஹெல்த் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரீமியம்) கடந்தாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி! ஆனால், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடி. மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம்.

கால் சுளுக்கு என்றால் கூட மூட்டெலும்பு அறுவை சிகிச்சை செய்யலாமா என முயற்சித்த மருத்துவமனைகளால் தமிழகத்தில் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை பெருகிய அவலத்தை சாதனை என எப்படிச் சொல்ல? 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் இத்திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு தங்கள் சொந்த பணத்தை செலுத்தியுள்ளனர். உலக வங்கியின் அறிக்கைப்படி இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடியே, 40 லட்சம் மக்கள் மருத்துவமனைகளுக்கு செலவழித்தே ஏழைகளாக மாறுகிறார்கள். இதில் கணிசமானோர் தமிழர்கள் என்பதே இத்திட்டத்தின் பலன்.

கலைஞர் வீட்டுவசதித்திட்டமும் ஒரு மோசடி திட்டமே. 1967ல் தி,மு,க அரசு தான் குடிசை மாற்று வாரியத்தை துவக்கியது. அதாவது குடிசைகளை அரசே தன் செலவில் வீடாக மாற்றித்தரும் என்பதே பழைய திட்டம். ஆனால் இப்போது பழைய திட்டத்தை மாற்றி, நமக்கு நாமே திட்டம் போல அரசு ரூபாய் ஒரு லட்சம் தருமாம். மிச்சத்தை குடிசைவாசியே செலவிட்டுக்கொள்ள வேண்டுமாம். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் ரூபாய் 32 முதல் 82 வரை மட்டுமே கூலியாக வழங்கப்பட்டுள்ளது. ஐந்து வருடமாக விவாசயக்கடன் தரப்படவில்லை. விவசாயிகள் 3737 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கிராமப் பொருளாதாரம் ஒடிந்து போயுள்ள இச்சூழ்நிலையில் குடிசைவாசிக்கு வீடுகட்ட பணம் எங்கிருந்து வரும்? இதுவும் குடிசையாவது உள்ளவர்களுக்கு மட்டும்தான். குடிசை கூட இல்லாதவர், சொந்த வீடு, நிலம் என எதுவும் இல்லாதவர் என உள்ள சுமார் 40 லட்சம் மக்களுக்கு எத்திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

கிராமத்திலிருந்து நகரங்களுக்கு இக்கால கட்டத்தில் சுமார் 60 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் குடிசைகளில்தான் வாழ்கின்றனர். சென்னை குடிசைகளின் நகரமாகத்தான் உள்ளது என்று டாக்டர்.ராமதாஸே கூறியுள்ளார். திமுகவின் ஆட்சியில்தான் சென்னையில் தேர்வு காலகட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடிசைகள் இடிக்கப்பட்டு விரட்டப்பட்டுள்ளனர். குழந்தைகளின் கல்வியைக் கூட யோசிக்கவில்லை அரசு.

வேலைவாய்ப்பிலும் தி.மு.க. அரசு தரும் தகவல்கள் உண்மைக்கு மாறாக உள்ளது மட்டுமல்ல. ஒரு புதிய வேலைவாய்ப்பைக் கூட அரசுத்துறையில் உருவாக்கவில்லை என்பதே உண்மையாகும். ஏற்கனவே உள்ள அரசு காலிப்பணியிடங்களில் கால் வாசி கூட நிரப்பாமல் இன்றும் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வரை காலியிடங்கள் உள்ளன.அதுமட்டுமல்ல, கிராமப்புற வேலைவாய்ப்புகளையும் பாதிக்கும் வகையிலேயே நடந்துகொண்டனர். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின்படி நூறு நாள் வேலை தரவேண்டிய அரசு, இவ்வாண்டு இதுநாள்வரை வேலை அளித்தது வெறும் 37 நாட்கள் மட்டுமே. அனைத்து குடும்பங்களுக்கும் டிவியை வழங்கியதாக கூறும் அரசு, அதன் மூலம் எத்தனை அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர்?

மணல் திருட்டு ஆளும் கட்சிக்காரர்கள் ஆதரவுடன் ஆண்டுக்கு சுமார் பத்தாயிரம் கோடி வரை கனஜோராக நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்தின் இதர இயற்கை வளங்கள் மூலம் அரசு தொழிற்சாலைகள் உருவாக்கியிருக்கலாமே ஏன் திட்டமிடவில்லை? மீனவர்கள் கடத்தப்படுவதற்கும், படுகொலை செய்யப்படுவதற்கும் முடிவு கட்டியதற்காக ஒரு பாராட்டு தீர்மானத்தையும், தி.மு.க.வின் நன்றியை தெரிவிக்கும் வாழ்த்துப்பா பாடலையும் தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் கலைஞர் நிறைவேற்றிய சில நாளிலேயே 106 மீனவர்கள் கடத்தப்பட்ட செய்தி அவரின் முகவிலாசத்தை எடுத்துக் காட்டும் துயரமான சம்பவமாகும்.

காலை நடைபயிற்சி நேரத்துக்குள்ளாகவே ஒரு உண்ணாவிரதம் இருந்து ஒரு நாட்டின் இனப்படுகொலையையே தடுத்து கின்னஸ் சாதனை படைத்தவர் கலைஞர் தான். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இவரை பாராட்டி இவரே தீர்மானம் போட்டுக்கொள்வது இவர் உரிமை. ஆனால் இலங்கையில் தமிழ்மக்கள் மீதான போர்நிறுத்தம் என இலங்கையைப் பற்றி இவராக அறிவிக்க என்ன அதிகாரம் இருக்கிறது. இலங்கை பிரச்சனையில் கலைஞர் தமிழினத்திற்கு துரோகம் செய்துவிட்டார். பதவிக்காக காங்கிரஸுடன் பணிந்துவிட்டார் என சொன்னவர் ராமதாஸ்தான். நாமல்ல.

அப்படியெனில் கலைஞர் ஆட்சியில் எந்த துறையும் முன்னேறவில்லை என அர்த்தமில்லை. தமிழக கலைத்துறையில் இவரின் குடும்ப உறுப்பினர்கள் அடைந்த முன்னேற்றத்தால் திரைத்துறைக்கு மட்டுமே பலன் கிடைத்தது என்பதே உண்மையாகும்.பரம்பரையாக திரைத்துறையில் உள்ளவர்களெல்லாம் ஒரு நேரத்தில் ஒரு படத்தை மட்டுமே தயாரிக்கும் சூழ்நிலையில் கலைஞரின் பேரன்கள் மூவரும் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களை தயாரிக்கும் அளவுக்கு செல்வாக்குடன் இருப்பதை பார்க்கையில் சந்தேகம் வராமல் இருக்க வாய்ப்பே இல்லை. தமிழில் பெயர் வைத்தால் திரைப்பட கேளிக்கை வரிவிலக்கு என்கிற உத்தரவு இவர் குடும்பநலனுக்கே போடப்பட்டது என்பதை வ குவார்ட்டர் கட்டிங் படத்தில் தமிழகம் நன்கு அறிந்துகொண்டது.

ஆனால் தாறுமாறான கட்டணம் உயர்த்தப்பட்டபோது கலைஞர் அரசு அது அவர்களின் அதிகாரம் என ஒதுங்கிக்கொண்டதால், தமிழக மக்கள் சினிமா செலவெல்லாம் ஒரு குடும்பத்திற்கு வரவாய் போனது மட்டுமல்ல. அரசுக்கு வரவேண்டிய பணம் சுமார் ரூபாய் 1000 கோடி வரை கேளிக்கை வரி சலுகையால் இழக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.400 கோடி ஆக இருந்த கேளிக்கை வருமானம் தற்போது ரூ.1000 கோடியாக மாறியிருக்க வேண்டும். ஆனால், 2010ல் வெறும் ரூபாய் பத்து கோடி மட்டுமே வருமானம் எனில் இழப்பு சுமார் 990 கோடி ரூபாய் ஆகும். இலவச டிவி மக்களுக்கு ஆனால் இதன் மூலம் குடும்ப மாத வருமானம் ரூ.3000 கோடி ஆகும். இலவச ஆம்புலன்ஸ் என அறிவித்த திட்டத்தில் அரசின் பொதிகை டிவிக்கு கூட விளம்பரம் அளிக்கப்படவில்லை. ஆனால் குடும்ப டிவிக்களுக்கு ரூபாய் ஒரு கோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மன்னராட்சி காலத்தை விடவும் மிக அதிக சர்வாதிகாரம் படைத்த குடும்ப ஆட்சி தற்போதுதான் நடைபெறுகிறது. மன்னராட்சி காலத்தில் மன்னர் மட்டுமே அதிகாரம் செலுத்துவார். அவருக்கு பின்னரே அவரது வாரிசுகளில் ஒருவர் மன்னராக அதிகாரம் செலுத்த துவங்குவார். அமைச்சர், தளபதி, வியாபாரி என மற்றப்பணிகளில் மன்னர் குடும்பம் ஈடுபடாது. ஆனால், இன்று ஜனநாயக ஆட்சி என்னும் பேர்வையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், மத்தியமைச்சர், எம்.பி., என பல வியாபாரங்கள் பல துறைகளிலும் ஒரு குடும்பம் அதிகாரம் செலுத்துவதை வேறெங்கும் நாம் காண இயலாது.

"பொது வாழ்வில் ஊழலுக்கு எதிராக அவர் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1969-லேயே சட்டமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் தனது ஆண்டு சொத்துக்கணக்கை சட்டமன்றத்தில் வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியவர் கலைஞர். 1973-இல் தி.மு.கழகத்தின் ஆளுகையிலிருந்த சென்னை மாநகராட்சி மீது ஊழல் புகார் வந்தபோது தனது கட்சி என்று கருதாமல் மாநகராட்சியை கலைத்து கட்சியைவிட களங்கமற்ற ஆட்சிக்கே முதலிடம் அளித்தார். முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்கள், முன்னாள், இன்னாள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் புகார்கள் வந்தால் அதனை விசாரிக்க பொது வாழ்வில் ஈ.டுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு மசோதாவை கலைஞர் அவர்களே சட்டமன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்றினார். முதலமைச்சரையும் மசோதாவின் கீழ் கொண்டுவந்த ஒரே அரசு,இந்தியாவிலேயே கலைஞர் அரசுதான்” திமுகவின் இணைய தளத்தில் இன்று வரை உள்ள வரிகள்தான் அவை.

ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன் என்று சொன்ன கலைஞர் ஆட்சியில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றல்ல இரண்டல்ல. ஆனால் அவருடைய நிலைபாடு ஊழலுக்கு ஆதரவாகவும், அதிகப்படுத்துவது போன்றுமே இன்று வரை உள்ளது. 2ஜி ஊழலில் கைது செய்யப்பட்ட பின்பும் ராசாவை ஆதரித்து தீர்மானம் வாசிக்கிறார்கள். காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடக்கும் அதே நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் தயாளுஅம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோருடன் சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது.

தி.மு.க அரசால் ஊழல் வழக்கு தொடரப்பட்ட மாஜி அமைச்சர்கள் இந்திரகுமாரி. செல்வகணபதி, கண்ணப்பன், ரகுபதி, முத்துச்சாமி ஆகியோர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தப் பின்னர் போதிய சாட்சியங்களை அரசு(சாட்சாத் கலைஞர் அரசு தான்) சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி, நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.. வீட்டு வசதித் துறையில் தாறுமாறாக முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்தவுடன், இனி ஒதுக்கீடு கிடையாது என்கிறார். ஆனால் வீட்டைப் பெற்றுள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மருமகள் பிருந்தா செழியன், அரசு கொரடா எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ,யசோதா, சோழவந்தான் எம்.எல்.ஏ. மூர்த்தி, உட்பட முதல்வரின் பாதுகாப்பு அதிகார்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவான அதிகாரிகள் மீது ஏன் பாயவில்லை நடவடிக்கைகள். அமைச்சர்களின் சொத்துக்கணக்குகளை ஆண்டு தோறும் சட்டமன்றத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை. சொன்னதையெல்லாம் செய்ததாக சொல்பவர் இதை ஒரு முறையேனும் செய்யவில்லையே ஏன்?

நாங்கள் பதவிக்காக ஒன்று சேர்ந்தவர்கள் அல்ல. ஒத்த கருத்துக்களுடைய கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள கொள்கைக்கூட்டணி என்று கலைஞர் இன்று கூறுகிறார். அருகில் ராமதாஸும், தங்கபாலுவும் உட்கார்ந்துள்ளனர். மேற்கண்ட பல பிரச்சனைகளில் டாக்டர். ராமதாசால் பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டவர் தான் கலைஞர். ஆனால் இன்று தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக பா.ம.க வால் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரசுடனும், திமுகவிடனும்தான் பாமக கூட்டு சேர்ந்துள்ளது என்பது வேடிக்கையாக உள்ளது. ஊழலுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் கூட்டணி குறித்து மட்டுமே பேசி அரசியல் நடத்தும் பாமக இவர்களுடன் சேர்ந்தது எம்.எல்.ஏ பதவிக்கு மட்டுமே என்பதை மக்கள் அறிவார்கள். இம்மூன்று கட்சிகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை குடும்பமும், கட்சியும், அரசு அதிகாரமும், பிரிக்க முடியாதவை என்பதில் உள்ள நம்பிக்கையேயாகும். ஆட்சியதிகாரம், ஊழலில் பங்கு என்பதைத்தவிர இக்கூட்டணியின் நோக்கம் வேறு என்னவாக இருக்கமுடியும்?

இதற்கு மாற்றாக உள்ள மற்றொரு கூட்டணி திடீரென உருவானதல்ல. விலைவாசி உயர்வு. சமச்சீர் கல்வி, சட்டம் ஒழுங்கு, சினிமாத்துறை சுதந்திரம். என அவ்வப்போது எழுந்த பிரச்சனைகளில் ஒத்த கருத்துடன் போராட்டம் நடத்திய அதிமுக. தேமுதிக.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.சிபிஐ போன்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த ஒன்று சேர்ந்துள்ளனர். மக்கள் இவர்களுடன் இணைந்து, இச்சக்திகளை ஆதரித்தால் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல தமிழகத்தில் விடிவும் சாத்தியம்.

Pin It