ஒன்றிற்கு இரண்டு தடவை ஊரிலிருந்து வந்த தந்தியை பிரித்துப் படித்தாயிற்று. "பாட்டிக்கு உடம்பு சுகமில்லை. உடனே வரவும்". அப்பாதான் அனுப்பியிருந்தர். நான் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து பத்து நாட்கள் கூட ஆகியிருக்காது. அப்பாவிற்கும் அது தொ¢யும். ஊரை விட்டுக்கிளம்பும் போதே பாட்டி சுகவீனமாகத்தான் இருந்தாள். "வெறும் அஜீரணாம்தான். பாட்டியை நாங்க பத்திரமா பாத்துக்கறோம். நீ தைரியமாக கிளம்புடா முரளி" என்று அம்மாதான் தைரியம் கூறி வழி அனுப்பினாள். அவசரம் இல்லாமல் அப்பா அப்படி ஒரு தந்தியை நிச்சயம் அனுப்பியிருக்க மாட்டார். மனது எதையெதையோ கற்பனை செய்தது.

பாட்டி அவ்வளவாகப் படிக்கவில்லை. அந்த காலத்து திண்ணை பள்ளிக்கூடம்தான். பதிமூன்று வயதிலேயே திருமணம். அடுத்த வருஷம் அம்மா பிறந்திருக்கிறாள். அதற்கடுத்த வருஷம் இரண்டு நாள் காய்ச்சலில் தாத்தாவும் இறந்து போனார். அன்றிலிருந்து சாம்பல் நிறப்புடவையும், வழித்த தலையுமாகத்தான் வளைய வந்திருக்கிறாள். பிடிப்பேதும் இல்லாத விதவை வாழ்க்கை ஒரு புறம். பெண் குழந்தைக்காக வாழ வேண்டிய நிர்பந்தம் மறு புறம். எதிர் நீச்சல் போட்டே வாழ்ந்திருக்கிறாள். தனிமை வாழ்க்கை பாட்டிக்கு நிறையவே கற்றுக்கொடுத்திருந்தது. இருந்த நகைகளை விற்று வீட்டிலேயே முதலில் ஐந்து பேருக்கு சாப்பாடு போடும் அளவிற்கு மெஸ் ஒன்றை ஆரம்பித்தாள். செக்கடித்தெருவில் கோமதி மாமி மெஸ் என்றால் மிகவும் பிரபல்யம். தனிமையை மறக்க கடுமையாக உழைத்தாள். அம்மாவை நன்றாகப்படிக்கவைத்து நல்ல இடத்தில் கலியாணமும் செய்து கொடுத்தாள். நானும் தங்கை மீனுவும் பிறந்த பிறகுதான் பாட்டி மீண்டும் வாழ ஆரம்பித்திருக்கிறாள் . இப்படியாக உறவுகளை தன்னைச்சுற்றி பிணைத்து தன் பழைய வாழ்க்கையிலிருந்து தன்னை மெல்ல மீட்டுக்கொண்டாள்.

அப்பா அம்மாவைப்பார்க்கிலும் பாட்டிமேல்தான் எனக்கும் என் தங்ககை மீனுவுக்கும் பிரியம் அதிகம். எங்களுக்கென்று சின்ன சின்ன விஷயங்களை பார்த்துப்பார்த்து பாட்டிதான் செய்வாள். நான் நிலாச்சோறு வேண்டுமென்றவுடன் அடுத்த நிமிடமே மொட்டைமாடி களைகட்டிவிடும். அப்பா, அம்மா, மீனு, நான் எல்லோரும் பாட்டியைச்சுற்றி உட்கார்ந்து கொள்வோம். தழையத்தழைய தாளித்த தயிர் சாதத்தில் மாதுளை முத்துக்களை உதிர்த்து போட்டு, நாவில் சிக்காத அளவிற்கு பச்சை மிளகாயை பொடிதாக அரிந்து, சிறிய உருண்டைகளாகப்பிடித்து, கட்டைவிரலால் சீராகக்குழிபறித்து , அதில் சிறிய நார்த்தை துண்டை வைத்துத்தருவாள். ஐந்து உருண்டைகளிலேயே முழுப்பசியும் அடங்கிவிடும். எங்களையும் அறியாமல் மேலும் இரண்டு மூன்று உருண்டைகளை அதிகமாக சாப்பிடவைத்துவிடுவள். பிறை நிலாக்காலங்களில் கூட எங்கள் பாட்டியின் கைகளில் முழு நிலவிருக்கும். எனக்கோ தங்கை மீனுவிற்கோ புரையெறினால் கூட வீட்டையே இரண்டு படுத்தி விடுவாள். பொதுவாக அடுக்களைக்காரியங்களை அம்மாதான் கவனித்துக்கொள்வாள் என்றாலும் சில சமயங்களில் பாட்டியே இழுத்துபோட்டுக்கொண்டு அடுக்களை வேலைகளை எல்லாம் தனியாகவே செய்வாள். அன்றைக்கெல்லாம் சமமையலில் எனக்குப்பிடித்த உருளக்கிழங்கு வருவலும் தயிர் பச்சடியும் நிச்சயம் இருக்கும்.

2

பாட்டியிடம் கதை கேட்பதென்பது ஒரு சுவையான அனுபவம். இரவு சாப்பாடு முடிந்த கையுடன் நானும் தங்கையும் திண்ணையில் ஆஜராகி விடுவோம். வெறும் தரையில் உட்கார்ந்தால் எங்களுக்கு சளி பிடிக்கும் என்று ஒரு சின்ன பாயை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, வலது கையில் கா¢ பிடித்த சிறிய லாந்தரை பிடித்துக்கொண்டு வருவாள். அதிக பட்சம் புராணக்கதைகளைத்தான் கூறுவாள். கதையின் போக்கிற்கேற்ப அவளின் முக பாவனைகள் அரையிருட்டில் அழகாக நிழற்படம் போலத்தொ¢யும். கதையைக்கூறும் போது அவள் தனக்கென்று ஒரு பாணியை கடைபிடித்திருந்தாள். மகாபாரதத்திலோ அல்லது ராமாயணத்திலோ ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் கதையைச்சொல்லும் போது முடிந்த அளவு கிளைக்கதைகளை அளவாக நறுக்கி அந்த காதாபாத்திரத்திற்கேற்ப கதையை நகர்த்திக்கொண்டு போவாள். கதையை கூறும் முன் ஒருமுறை மனதளவில் ஒத்திகை பார்த்துவிடுவாள். எங்களின் முக பாவத்தை மிகவும் உன்னிப்பாகக்கவனித்து அதற்கேற்ப கதையை மேலும் விருவிருப்பாக்குவாள். அன்றைக்கு வீட்டில் நடந்த ருசிகரமான விஷயங்களைக்கூட கதையின் களத்திற்கு திறமையாக புகுத்திடுவாள். புராணக்கதைகள் என்றாலும், தர்மா¢ன் கதையில் ஒன்று விட்ட பொ¢யப்பா வருவார். நகுலன், சகாதேவன் கதையில் கல்கத்தாவில் இருக்கும் சித்தப்பாவின் இரட்டையர்கள் நிச்சயம் வருவார்கள். பீஷ்மரைப்பற்றி குறிப்பிடும்போதெல்லாம். கோயில் வாசலில் விபூதிக்கடை நடத்தும் எண்பது வயது பரணி தாத்தா வருவார். கோயில் குளக்கரைப்படிக்கட்டுகளில் மீனிற்கு பொறி போட்டுக்கொண்டே அவள் வாழ்ந்த நாட்களை ஒரு திரைப்படக்கதை போலச்சொல்லுவாள். பள்ளிக்கூட நாட்களை விட வார விடுமுறை நாட்களில் கதையின் கால அளவு அரைமணி நேரம் கூடுதலாக எங்களுக்குக்கிடைக்கும்.

தாத்தா இறந்த பிறகு தனக்கு போட்ட வெள்ளி நகைகளை உருக்கி ஒரு சிறிய கும்பா செய்துகொண்டாள். காலை பத்துமணிக்கு அந்தக்கும்பாவில்தான் சாதம் சாப்பிடுவாள். அவ்வளவுதான். இரவு படுப்பதற்கு முன் ஒரு ரஸ்தாளி. இடையில் காப்பி டீ என்று எதையும் சாப்பிடமாட்டாள். இருந்த இரண்டு சாம்பல் நிறப்புடவைகளை மாற்றி மாற்றி கட்டிக்கொள்வாள். எனக்கு விபரம் தொ¢ந்த பிறகுதான் மூன்று வேளையும் எங்களுடனேயே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு வீடு திரும்பும் நேரம் செக்கடியில் இருக்கும் பொட்டைத்திடலில் பொ¢ய மேடை அமைத்திருந்தார்கள். பொ¢யார் அன்று மாலை பேசப்போகிறார் என்று மைக்கில் ஒலிபரப்பிக்கொண்டே இருந்தார்கள். மேடை, மைக் என்று இடமே அமளிபட்டது. எங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் கடையின் மாடியில் ஒரு ஒலிபெருக்கியை கட்டியிருந்தார்கள். கடவுள் மறுப்பு, விதவைத்திருமணம் என்று பல விஷயங்களை தொட்டுவிட்டு நகர்ந்துகொண்டிருந்தது பொ¢யாரின் சுவாரசியமான பேச்சு. பாட்டியும் கூடத்துத்தூணில் சாய்ந்து கொண்டு முழுச்சொற்பொழிவையும் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருந்தாள். அம்மா சாப்பிடக்கூப்பிட்டு சிறிது நேரம் கழித்துத்தான் பாட்டி அடுக்களைக்கு வந்தாள். நீண்ட நேரம் அமைதியாக இருந்தவள் அம்மாவைப்பார்த்து " கோமதி, அடுத்த தடவை எனக்கு புடவை வாங்கும் போது அரக்கு நிறத்தில் அழுத்தமான பார்டர் போட்ட சேலை வாங்கிடு" என்றாள். அன்றைக்கு எங்கள் வீட்டிற்கும் பொ¢யார் வந்திருந்தார். அப்படித்தான் நான் அடுத்த நாள் பள்ளி நண்பர்களிடம் கூறி பெருமைப்பட்டுக்கொண்டேன்.  

 3

இரவு முழுவதும் பாட்டியின் நினைவாகவே இருந்தது. லேசாகக்கண்ணயரும் போது ஊர் வந்துவிட்டது. டிரைவா¢டம் கூறி செக்கடியிலேயே இறங்கிக்கொண்டேன். வீட்டிற்கு ஐந்து நிமிட நடைதான். அம்மாதான் வாசலில் நின்றிருந்தாள். அப்பா கூடத்தில் இருக்கும் அண்டாவில் தண்ணீரை நிறைத்துக்கொண்டிருந்தார். அம்மா சுறுக்காமாகக் கூறினாள். "வாந்தி வர மாதிரி இருக்குன்னு கொல்லைப்புறத்துக்கு கூட்டிட்டு போகச்சொன்னா. இரண்டடி கூட கால் வெச்கிருக்க மாட்டா, என் மேலேயே சா¢ஞ்சிட்டா. பேச்சு மூச்சில்லை. டாக்டர் பாத்துட்டுப்போனா. பாட்டி கொஞ்சம் கொஞ்சமா நினைவிழந்து கோமா நிலைக்கு போயிக்கிட்டு இருக்காளாம். ரொம்ப வயசானவா வேரே. நினைவு திரும்பரத்துக்கும் கொஞ்சம்தான் வாய்ப்பிருக்காம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யாராவது பாட்டிக்கிட்டே பேசிக்கிட்டிறுக்கச்சொன்னார். தண்ணி ஆகாரமாத்தான் கொடுத்துக்கீட்டிருக்கோம்" அதற்குமேல் அம்மாவால் பேச முடியவில்லை. முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அமைதியாக அழ ஆரம்பித்துவிட்டாள். அம்மாவை என்னால் சமாதானம் செய்யவே முடியவில்லை.

பாட்டி இருந்த அறையை மெல்லத்திறந்தேன். பிழிந்த துணியாகக்கிடந்தாள். மனதைப்பிசைந்தது. மீனுதான் பாட்டியின் கால் மாட்டில் உட்கார்ந்துகொண்டு கதை சொல்லிக்கொண்டிருந்தாள். பாட்டி ஏற்கனவே சொல்லியிருந்த கதைதான் என்றாலும் மீனு சிறிது நேரம் கதை சொல்வதும் பிறகு விசும்புவதுமாக இருந்தாள். சிறிது நேர விசும்பலுக்குப் பிறகு கதையத்தொடர நினைத்த மீனு என்னைப் பார்த்ததும் "அண்ணா" என்று என்னை இறுகக்கட்டிப்பிடித்துக்கொண்டு கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்து விட்டாள். பாட்டியின் அருகில் சென்றேன். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. மீனு விட்ட இடத்திலிருந்து மீண்டும் கதையை நான் தொடர்ந்தேன். பாட்டியின் கைவிரல்கள் லேசாக அசைந்ததைப் பார்த்ததுமே மீனு தன்னையுமறியாமல் "அண்ணா" என்று சத்தம் போட்டு அழைக்க அம்மா பதறிக்கொண்டு உள்ளே வந்தாள். பாட்டியின் இமைகளின் கீழ் விழிகள் பதறியது. மிகுந்தபோராட்டத்துடன் கண்களைத்திறந்தாள். அவளின் கைகளை நானும் மீனுவும் இறுகப் பற்றிக் கொண்டோம். பாட்டியுடன் சேர்ந்து பௌர்ணமி நிலாச்சோறு சாப்பிட இன்னும் பத்து நாட்கள் மீதம் இருந்தது.