சென்னை பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரை சூட்டுவதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூட்டணி கட்சியான காங்கிரசை திருப்திப்படுத்துவதற்காக அறிவித் துள்ளார். பெயர் சூட்டுவது, விருதுகள் வழங்குவது எல்லாம் தகுதிகளுக்கான மதிப்புகளை இழந்து விட்டன. அரசியல் கூட்டணிகளை திருப்திப்படுத்தவும் துதி பாடிகளை மகிழ்விக்கவும் முதலமைச்சர் வாரி வழங்கும் பரிசுகளாகி விட்டன.

தி.மு.க.வுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் காங்கிரஸ்காரர்களில் ஒருவரான ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன், சென்னை பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரை சூட்டக் கோரி, சில மாதங்களுக்கு முன் வலியுறுத்தினார். உடனே கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சென்னை பொது மருத்துவமனைக்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது. அப்போது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குள் ‘விரிசல்’ வெடித்திருந்த காலம். இப்போது கூட்டணி பேரங்கள் முடிந்த நிலையில் சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்சு கோரிக்கை வைத்தவுடன், உடனே கலைஞர் கருணாநிதி ஏற்றுக் கொண்டு மருத்துவ மனைக்கு ராஜீவ்காந்தி பெயரை சூட்டி விட்டார். ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியபோது அதை மறுத்து, பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்று அறிக்கை விடுத்த கி.வீரமணி, இப்போது வழக்கம் போல வாயை மூடிக் கொண்டு விட்டார்.

ஏற்கனவே சென்னை நகரத்தின் முக்கிய சாலை களில் ஒன்றான பழைய மகாபலிபுரம் சாலைக்கு ராஜீவ்காந்தி பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்போது சென்னை பொது மருத்துவமனைக்கு பெயர் சூட்ட தமிழ்நாட்டில் தகுதியான தலைவர்கள் இல்லையா? உ.பி.யிலே, பீகாரிலே, ராஜஸ்தானிலோ, அங்கே உள்ள அரசு நிறுவனங்களுக்கு தமிழகத் தலைவர்கள் பெயர்களை சூட்டுகிறார்களா? தமிழ்நாட்டின் பெயரைக்கூட ராஜீவ்காந்தி நாடு என்று மாற்ற வேண்டும் என்று எவராவது ஒரு காங்கிரசார் கோரிக்கை வைத்தால், அதைச் செய் வதற்குக்கூட கலைஞர் கருணாநிதி தயாராகிவிடுவார் போலிருக்கிறது.

மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் சூட்டப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களையெல்லாம் நீக்கியது, இதே கலைஞர் கருணாநிதிதான். அப்போது கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றில் இந்தக் கோரிக்கையை வைத்தார். உடனே கலைஞர் கருணாநிதி ஏற்றுக் கொண்டார். இப்போதும் காங்கிரஸ் கூட்டணிக்காக பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்பட்டுவிட்டது. அன்று தன் பங்குக்கு இந்திய ராணுவத்தை ஈழத்துக்கு அனுப்பி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் பிணமாக்கியதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி.

இன்று - இந்திய ராணுவ உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி, ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்யக் காரணமாக இருந்தவர் அவரது மனைவி சோனியா காந்தி. தமிழர்களைக் கொன்று குவித்த குடும்பத்துக்கு, தமிழ்நாட்டில் பெருமை செய்து மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார் - கலைஞர் கருணாநிதி. அந்தோ, தமிழா, உனது தாழ்நிலையைப் பார்த்தாயா?

Pin It