தனது இனத்துடன் வனங்களில் திரிந்து கொண்டிருந்தவளிடம் பிரேமைகொண்டு பட்டமகிஷியாக்கிக் கொண்டான் அரசன். மலைநாட்டுக்காரி ராணியாகி விட்டாள். அவள் இங்கே வரும்போது சீதனமாகப் பாடல்களைக் கொண்டு வந்திருந்தாள்; ஏராளமான பாடல்கள். அவள் பாடத்தொடங்கிய கணத்திலேயே நறுமணம் கமழ்ந்தது. துரிதமாக வளர்ந்து பூத்தன செடிகளெல்லாம். அவள் வருகைக்குப் பின்னர் அந்தப்புரத்திற்கு விதவிதமான பறவைகள் வரத்துவங்கின. புதுப்புது வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் காணக்கிடைத்தன.

வேட்டைக்குப் போனவன் இப்படி மணக் கோலத்துடன் திரும்பி வருவானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சூன்யக்காரி என்று குமைந்தார் கிழட்டு மந்திரி. ஒரு மலைநாட்டுக்காரி கீர்த்திமிக்க இந்நாட்டின் மகாராணியாவதை அவருடைய மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அரச வம்சத்தில் இதுவரை எப்போதும் சம்பவிக்காத ஒரு இழுக்காக இதைக் கருதி வருந்தினார்.

ஒரு குழந்தையைப்போல இயல்பு கொண்டவனான அரசனோ மிதமிஞ்சிய ஆர்வத்தில் காரியங்களைச் செய்து விடுபவனாகவும் இருந்தான். மந்திரியின் வார்த்தைக்குச் செவிசாய்ப்பவன் தான் என்றாலும் இது இராஜ்ய விஷயமல்லவே.

அரசனை நீண்ட இரவுகளில் வைத்து தாலாட்டினாளவள். காதல் போதையில் மூழ்கிக்கிடந்தான் அவன். இப்படியாக நாட்கள் நகர்ந்தன. அரசனின் சிறுபிள்ளைத்தனமான காதல் விளையாட்டுகள் அவளுக்கு சீக்கிரமே திகட்டிப் போனது. வழி வழியாக அரசர்களின் பத்தினிகள் உலவிவந்த அந்தப்புரத்தில் தான் கொண்டுவந்து வைத்திருப்பது ஒரு காட்டாறு என்று உணராதது அவனுடைய பிசகுதான். சரசங்களில் லயித்துப் போயிருந்தானேயல்லாது அவளிடம் எழுந்த வேட்கை வரம்புகளைக் கடந்து பரவக்கூடியது என்பதை அறிந்தானில்லை. அவளுடைய பாடல் சரீரத்திலிருந்து எழுந்தது என்பதையும் அவள் அவனிடம் வேண்டிநின்றது  பரவசத்தையல்ல, வலியை என்பதையும் அவன் உணரத்தவறிவிட்டதன் விளைவு, அவள் வேறு ஆடவர்களுடன் நாட்டம் கொள்பவளானாள்.

மரகதம் போன்று ஒளி வீசும் பத்துக் கிளிகளை அரசன் அவளுக்காகப் பரிசளித்திருந்தான்.  அந்தக்  கிளிகளை கொடிகளாலான ஒரு அழகிய கூண்டு செய்து தனது சயன அறையில் வளர்த்து வந்தாள் அவள். அவற்றில் இரண்டைக் கொன்று எறிந்துவிட்டு அதற்குப் பதிலாக இரண்டு படைவீரர்களைக் கிளிகளாக்கி கூண்டுக்குள் வைத்துக்கொண்டாள்.  தான் விரும்பிய போதெல்லாம் அவர்களை மானுடர்களாக்கி கூடிக் களித்து வருவது நடந்தது.

அரண்மனையின் பாதுகாப்போ கிழட்டு மந்திரியின் கையில். அவருடைய உளவாளிகளின் கண்கள் அரண்மனைக்குள் எங்கும் நீண்டு உளவு பார்த்து வந்ததை அரண்மனைக்குப் புதியவளான ராணி அறிந்து கொள்ளாதது அவளுடைய துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

செத்து விறைத்துப்போயிருந்த கிளிகள் இரண்டும் மந்திரிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தன. அந்தப்புர மதில்சுவருக்கு வெளியே கிடைத்ததாகச் சொல்லி உளவாளிகளில் ஒருவன் அவைகளைக் கொண்டுவந்து அவரிடம் சேர்த்திருந்தான்.  விசாரித்ததில் கிளிகள் இரண்டும் அரசன் ராணிக்கு பரிசாகக்கொடுத்தவை என்பது அவருக்குத் தெரியவந்தது. அந்தப்புரத்தில் வளரும் கிளிகளைக் கணக்கிட்டு வரும்படி ஆளனுப்பினார். திரும்பி வந்தவனோ எல்லாக் கிளிகளுமே கூண்டில் பத்திரமாக இருக்கிறதென்று சொன்னான். கண்களை மூடி யோசனை பண்ணிப்பார்த்த மந்திரி சூட்சுமம் புரிந்து சிரித்தார். அவருக்குப் புரிந்து விட்டது, அவளுடைய காதல் பாடல்களுக்கு செவியை அறுத்துக் கொடுத்துவிட்ட அரசனுக்கு எங்ஙனம் புரியவைப்பது? அதனால் அவளுடைய சதியைத் தானே தகர்த்தெறிவது என்ற முடிவுக்கு வந்தார்.

மந்திரியின் உத்தரவுப்படி ஏவலன் வந்து கிளிகளை கணக்கிட்டதுமே ராணிக்கு விளங்கிவிட்டது. சற்றே கலக்கமடைந்தாள். விபரீதம் உணராமல் கொன்ற கிளிகளை வெளியே ஏன் எறிந்தோம் என்று தன்னையே நொந்துகொண்டாள். அந்தப்புரத்துத் தோட்டதிலேயே மண்ணில் போட்டு புதைத்துவிட்டிருக்கலாம். தன்னுடைய துரோகம் அரசனுக்குத் தெரியவருமானால் நிகழப்போகும் பின்விளைவுகள் என்னவோ என்று அச்சம் கொண்டாள். சிறிது நேரத்திலேயே இந்த அச்சம் அவளை விட்டு அகன்றது. தன்னைச் சுதாகரித்துக்கொண்டுவிட்டாள்.

அந்தி மங்கிய நேரத்தில் அரசன் அந்தப்புரத்திற்கு வந்தான். வழக்கமாக அவனை வரவேற்கும் பாடலை அவள் பாடவில்லை. பேசிய இரண்டு மூன்று வார்த்தைகள் கூட உற்சாகமில்லாமல் வெளிவந்ததைக் கண்ட அரசன் அவளிடம் சொன்னான், “உன்னுடைய வருத்தம் எனக்குப் புரிகிறது கண்ணே. உனக்கு நான் அன்புடன் பரிசளித்த கிளிகள் பிரச்சினைக்குரியதாக மாறுமென்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? அந்நிய நாட்டு உளவாளிகள் கிளிகளாக உருமாறி கூண்டுக்குள் பதுங்கியிருப்பதாக மந்திரி சந்தேகப்படுகிறார். இது நாட்டின் பாதுகாப்புக்கே வந்திருக்கும் அச்சுறுத்தல் அல்லவா? அதனால்தான் அவற்றைக் கண்டுபிடித்து கொன்று விடும்படி மந்திரிக்கு உத்தரவு வழங்கிவிட்டு வந்திருக்கிறேன். உன்னதமான நம் காதலை முன்னிட்டு என்னை நீ மன்னிக்க வேண்டும். அந்தக் கிளிகளுக்குப் பதிலாக வேறு கிளிகளை உனக்கு வாங்கித் தந்துவிடுகிறேன்’’ என்றான்.

“வினோதமாகத்தான் இருக்கிறது மந்திரியின் சந்தேகம். அந்தப்புரத்தில், அதிலும் நம் சயன அறையில் இப்படி ஒரு சதி நடக்குமென்று நீங்கள் நம்புகிறீர்களா?’’ என்று கேட்டாள் ராணி.

“அதற்கு வாய்ப்பு இல்லைதான், இருந்தாலும் மந்திரி ஆதாரமில்லாமல் சந்தேப்படமாட்டார். அதிலும் என் அன்புக் கண்ணாட்டிக்குப் பரிசளித்த கிளிகள் மேல் அவருக்கென்ன விரோதம் இருக்கப்போகிறது சொல்’’ என்று சொல்லி அவளைத் தழுவினான்.

தனது புகைச்சலை மறைத்தபடியே அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் ராணி. ஆனால் முன்பு அவளிடம் இருந்த உற்சாகத்தைக் காணாத அரசன், “இன்னும் என்ன வருத்தம் ராணி? கிளிகளைக் கொல்லப்போகிறார்களே என்றா? எனக்கு மட்டும் வருத்த மில்லையா என்ன? அதிலும் கிளி நமது நாட்டின் தேசியச் சின்னமாயிற்றே. ஆனால் கொல்லப்பட இருக்கும் கிளிகள் அந்நிய நாட்டு உளவாளிகள்தானே?’’

“அப்படியிருந்தால் எனக்கென்ன ஆட்சேபனை இருக்கப்போகிறது அரசே? ஆனால் இந்தச் சந்தேகம் விபரீத விளைவுகளில் கொண்டுபோய் விட்டுவிடக்கூடாதே என்பதுதான் என் கவலை.’’

“விபரீதமாக முடியுமளவுக்கு இதில் என்ன இருக்கிறது?’’

“கொல்லப்பட்டது உளவாளிகள் இல்லை, உண்மையான கிளிகள்தான் என்று ஆகுமானால் நாட்டின் தேசியச் சின்னத்தை அரசனே அவமானப்படுத்திவிட்டதாக மக்கள் கலகம் செய்யக்கூடுமில்லையா?’’

“நீ சொல்வது சரிதான். ஆனால் மந்திரி அனுபவமிக்கவர். எல்லாவற்றையும் சரியாகவே அவர் செய்வார், உனக்கு கவலைவேண்டாம். ஆமாம் எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் இந்த ராஜாங்க விஷயங்களைப் புரிந்துகொண்டாய்?’’ என்று சொல்லி அவளை ஆலிங்கனம் செய்தான்.

அவள் சொன்னாள், “மந்திரியை அளவுக்கதிகமாகவே நீங்கள் நம்புகிறீர்கள்.’’

இந்தக் குற்றச்சாட்டை அவன் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அவளைச் சுகிப்பதில் மூழ்கினான். அவனுடைய விளையாட்டை அனுமதித்துக்கொண்டே மந்திரியின் சதியை முறியடிக்க மனசுக்குள் சூட்சுமம் வரைந்துகொண்டிருந்தாள் அவள்.

ஆலோசனை மண்டபத்தில் மந்திரியுடன் சம்பாஷனையில் இருந்த அரசனிடம் ஒரு சேவகன் வந்து சொன்னான், “அரசே தங்களைக் காண ஒரு வில்லாளன் வந்திருக்கிறான்.’’

“உள்ளே வரச்சொல்’’ என்றவன் ஏதோ யோசனை தெளிந்தவனாக, “வேண்டாம் வேண்டாம் தோட்டத்துக்கே அழைத்துச் செல். நாங்கள் அங்கு வந்துவிடுகிறோம்’’ என்று சொல்லிவிட்டு மந்திரியைப் பார்த்தான். மந்திரியும் தனது புன்சிரிப்பால் அரசனின் யோசனையை ஆமோதித்தார். ஆழ்ந்த ஞானமும், மதிநுட்பமும் வாய்ந்த மந்திரியின் மேற்பார்வையில் காரியங்களையாற்ற அரசன் முயற்சித்துக்கொண்டிருந்தான். தனது முன்யோசனையில்லாத திட்டங்கள் தோல்விகண்டதால் அவன் சற்றே சுதாகரித்துக்கொண்டுவிட்டான். அச்சிக்கல்களிலிருந்து மீள்வதற்கு மந்திரியையே அவன் நம்பினான்.

வில்லாளனின் கண்களைக்கட்டி ரகசியப் பாதையின் வழியாக அந்தப்புரத்துக்குக் கூட்டிவந்தான் அந்த சேவகன். கண்கட்டு அவிழ்க்கப்பட்டதும் பளிச்சிட்ட தோட்டத்தின் வனப்பு அவனை மயக்கியது. ஒரு காட்டின் தன்மை அங்கே குடிகொண்டிருந்ததைக் கண்டு வியந்தான்.

அரசனும் மந்திரியும் அங்கு வந்து சேர்ந்தார்கள். வில்லாளன் அவர்களை வணங்கி நின்றான்.

“மந்திரியார் சொன்ன வில்லாளன் நீதானா?’’ என்று கேட்டான் அரசன்.

“ஆம் எஜமானே தங்களுடைய உத்தரவுப்படி அந்த வேடதாரிக்கிளிகளை இனம்கண்டு கொல்வதற்கு வந்திருக்கிறேன்’’ என்றான் வில்லாளன்.

கிளிக்கூண்டை எடுத்துவரும்படி ஒரு சேவகனை அனுப்பயிருந்தார் மந்திரி. கூண்டு வந்து சேர்ந்தது. கூண்டில் நிலைகுலைவு ஏற்பட்டதால் கிளிகள் படபடத்து ஆர்ப்பாட்டம் செய்தன.

கூண்டைக் கொடுத்தனுப்பிவிட்டு நடக்க இருப்பவைகளைக் காணும்பொருட்டு சாளரத்தின் வழியே கவனித்துக் கொண்டிருந்தாள் ராணி. தனது திட்டப்படியே எல்லாம் நடைபெறவேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொண்டாள்.

அரசன் சொன்னான், “வில்லாளனே! கிளிகள் நம்நாட்டின் தேசியச்சின்னம், அதே நேரத்தில் ராணியின் நேசத்துக்குரியவைகள். எங்களது...’’ மந்திரி குறுக்கிட்டுச் சொன்னார்.

“அரசே, இதையெல்லாம்  இவனிடம் எதற்காக நாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்?’’

அரசனின் முகம் சிறுத்துவிட்டது. வில்லாளனைப் பார்த்து எரிச்சலுடன் சொன்னான், “ஏய் அற்பனே, எதற்காக உன்னை அழைத்து வந்திருக்கிறார்கள் என்பது உனக்குத்தெரியுமில்லையா? பேச்சைக் கேட்டுக்கொண்டு நிற்காதே. பேச்சைக் கேட்கும் நாய் வேட்டையைப் பிடிக்காது என்பார்கள். நீ எப்படி இந்தக் கிளிகளை வேட்டையாடப் போகிறாய்?’’ என்றவன் மந்திரியைப் பார்க்காமலேயே “சொன்னதைச் செய்’’ என்றான்.

கூண்டுக்குப் பக்கத்தில் போய்நின்ற வில்லாளன் அதைத்திறப்பதற்காகக் கையைவைத்தான். அரசன் பதற்றத்துடன் கேட்டான், “எதற்காக கூண்டைத் திறக்கிறாய்? எல்லாக்கிளிகளுமே பறந்துபோய்விட்டால், என்ன செய்வது?’’

“ஏஜமானே என்னை மன்னித்து விடுங்கள். கூண்டுக்குள் இருக்கும் கிளிகளை என்னால் கொல்ல முடியாது.’’

“ஏன் முடியாது?’’ என்று சினத்துடன் கேட்டான் அரசன்.

“அப்படிக் கொல்வது தர்மமல்ல, கிளிகள் கூண்டுக்குள் இருந்தால் அவைகளை இனம் காண்பது கடினம்.’’

அரசன் ஏளனத்துடன் சிரித்தான்.

“கூண்டுக்குள் இருக்கும் கிளிகளையே உன்னால் இனம்கண்டு கொல்ல முடியாதென்றால், வான்வெளியில் பறக்கும் கிளிகளை எப்படிக் கொல்லப்போகிறாய்?’’

“எஜமானே உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். நிச்சயம் அவைகளை வேட்டையாட என்னால் முடியும். அப்படி முடியாவிட்டால் உன் உயிரை இழக்கவும்  நான் தயாராக இருக்கிறேன்’’ என்றான் வில்லாளன்.

மந்திரிக்கு ஏற்கனவே இது குறித்து ஞானம் உண்டாதலால் வில்லாளனை அவன் விருப்பப்படியே அனுமதிக்கும்படி அரசனைக் கேட்டுக்கொண்டார். அரசன் ஒப்புக்கொண்டான்.

கூண்டைத் திறந்துவிட்டதும் கிளிகள் எல்லாம் படபடத்துப் பறந்து சென்றன. தோட்டங்களின் ஊடே அவைகளை விரட்டிக்கொண்டு போனான் வில்லாளன். கிளிகளும் அவனும் மரங்களூடே மறைந்து போனார்கள்.

அரசனும் மந்திரியும் அவனுடைய வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள் ராணியும்தான்.

சிறிது நேரத்தில் அம்புகளால் தாக்கப்பட்ட மூன்று கிளிகளையும் கொண்டுவந்து அரசனுக்கு முன்னால் வைத்தான் வில்லாளன். பிறகு தன்னுடன் எடுத்து வந்திருந்த ஒரு பாத்திரத்தைத் திறந்து அதிலிருந்த தீர்த்தத்தை அள்ளி அவைகள் மேல் தெளித்தான். தீர்த்தம் பட்ட மாத்திரத்திலேயே அம்மூன்று கிளிகளும் மூன்று மானுடப் பிண்டங்களாயின. அவைகளைக் கவனித்த மந்திரி அதிர்ச்சியில் மூர்ச்சையுற்றார். இரண்டு படை வீரர்களுடன் அவருடைய மகனும் அங்கே இறந்து கிடந்தான்.

ராணி சிரித்துக்கொண்டாள்.

மறுநாள் சதுக்க மைதானத்தில் மக்கள் கூடி நின்றிருந்தனர். அவர்களுக்கு நடுவே உயரமான பலிபீடத்தின் மேல் ஒரு பெண் பலியிடுவதற்குத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாள். கூட்டம் கேலியும் கிண்டலுமாக அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சிலர் அனுதாபப்படவும் செய்தார்கள்.

“ராஜாங்க விஷயங்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா? மகாமேதாவிகளே அதைக் காப்பாற்றுவதற்கு எப்படியெல்லாம் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அதில்போய் சிக்கினால் தலைதப்புமா?’’

உண்மையில் அங்கே பலியிடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பெண் அல்ல; அது ஒரு ஆண்தான்; பரிதாபத்துக்குரிய வில்லாளன்தான் அவன். ஒரு பெண்ணாக அலங்கரித்து அவனை அங்கே நிறுத்தி வைத்திருந்தார்கள். அவமானத்தில் குன்றிப்போய் கிடக்கிறான் அவன். ஒரு தவறும் செய்யாத தனக்கு ஏன் இந்தத் தண்டனை என்று அவன் மனம் குமுறிக்கொண்டிருந்தது.

மந்திரியின் வேண்டுகோளின்படி வில்லாளனுக்கு மரணதண்டனை கொடுத்த அரசனும் நிம்மதியாக இல்லை. எதுவும் தெளிவாகவில்லை அவனுக்கு. அந்நிய தேசத்து உளவாளிகள் கிளிகளாகி அந்தப்புரத்திற்குள் புகுந்து விட்டார்கள் என்று மந்திரி சொன்னபோதே இந்தக் குழப்பம் அவனைப் பிடித்துக்கொண்டது. உளவாளிகளுடன் மந்திரியின் மகனும் கொல்லப்பட்டதுதான் இன்னும் அவனுக்குப் புரியாத புதிராக இருந்தது. பிள்ளையைப் பறிகொடுத்த துயரத்தில் இருக்கும் மந்திரிக்காக வேண்டியே இந்தத் தண்டனையை வில்லாளனுக்குக் கொடுக்க நேர்ந்தது. மேலும் எல்லாக் கிளிகளும் பறிபோய்விட்ட வருத்தத்தில் இருக்கும் ராணிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றும் அவனுக்குத் தெரியவில்லை.

‘மந்திரி ஏன் வில்லாளனைப் பெண்ணாக்கி சிரச்சேதம் செய்யவேண்டுமென்று கேட்கிறார்? வில்லாளன் உண்மையிலேயே குற்றவாளிதானா?’ என்றெல்லாம் அவன் யோசனை செய்து கொண்டிருந்தான். தனது உத்தரவுக்காகக் காத்திருக்கும் பலிபீடத்தையே அவன் நிம்மதியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான். இப்படியே காலம் கடத்த முடியாது; அவகாசம் நெருங்கிவிட்டது. உத்தரவிடுவதற்காக அவன் எழுந்தான். அப்போது அந்தப்புரத்திலிருந்து ஒரு கடிதத்தைக் கொண்டு வந்திருந்தான் சேவகன். ராணிதான் அந்த அவசரக் கடிதத்தை அனுப்பியிருந்தாள். ‘கூண்டிலிருந்து  பறந்துபோன பத்துக் கிளிகளும் திரும்பி வந்துவிட்டன. வில்லாளனை விடுதலை செய்யுங்கள்’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.