அரசாங்க வேலை போல சீக்குப் பிடித்த வேலை உலகத்தில் இல்லை. மூணு ரூபா இங்க் பாட்டில் வாங்க ஏழு ரூபா பேப்பர் செலவாகும். ஆறுபேர் கையெழுத்துப் போட வேண்டும். ஐந்து பேர் முழுக் கையெழுத்துப் போடவேண்டியதில்லை. இனிஷியல் மாத்திரம் சின்னதாக மூட்டைப்பூச்சிமாதிரி வைக்கவேண்டும். பெரிய அதிகாரிகள் படித்தெல்லாம் பார்க்கமாட்டார்கள். மூட்டைபூச்சிகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதாவென்று எண்ணிப்பார்ப்பார்கள். ஒன்று குறைந்தாலும், முழுக் கையெழுத்தும் போட்டுத் திருப்பி அனுப்பி விடுவார்கள். வேகமாகப் பைல் பார்க்கிறவர் என்கிற புகழும் அப்படி அதிகாரிகளுக்கு உண்டு.

அதிலும், அது அரசுக் கருவூலம். லஞ்சம் வாங்கிப் பிழைக்கும் சில அரசு அதிகாரிகளின் பில்கள் இங்கு தான் வந்தாக வேண்டும். இங்கும் சிலருக்குத் தந்தாக வேண்டும். சில்லறை புழங்குகிற ஆபிஸ் என்பது சிறப்புத் தகுதி அப்படியாப்பட்ட ஆபீஸில் தான் தெய்வ நாயகம் சார் வேலை பார்த்தார். அவருக்கு சத்தியமூர்த்தி என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். பெயர் வைப்பதில், பெயரளவு கூட பழக்கமற்ற சமுகத்தில் வாழ்வது சாருக்குத் தெரியும். எல்லாத் தலைமுறைகளுக்கும் ஒரே பெயர்தான் வைக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தப்பட்ட சாதிய இழிவுகளை அவர் அறிவார். 

திராவிட, இடதுசாரி இயக்கங்களின் வருகை தான் பெயர்களின் அரசியலைத் தகர்த்தது. அதனாலேயே சாருக்கு, அவர்கள் எல்லோர் மீதும் பெருமிதம் கலந்த மரியாதை இருந்தது. அவர் காலத்தில் வாழ்ந்த படைப்பாளிகளும் தங்களது புனைபெயர்களால் மகத்தான பங்களித்தார்கள். பலரது பெயர்களே படைப்பின் பேரழகுடன் மிளிர்வதை அவர் அறிந்திருந்தார். அவருக்குத் தான் பொருத்தமான பெயர் வைக்கப்படவில்லை. 

தலைவர்களின் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் அவருக்கு அவ்வளவாக விருப்பமில்லை. ஒரு தலைவரின் பெயர் வைக்கப்பட்ட இளைஞன், குற்ற வழக்கில் கைதானதாகப் பத்திரிக்கைச் செய்தி பார்த்தபோது, சார் பரிதவித்துப்போனார். “அன்பினால் இழைக்கப்படும் அநீதி“ என்று மனதுக்குள் கடிந்து கொண்டார். தெய்வநாயகம் சார் வண்ண வண்ண ஆடைகள் அணிந்த போதும், அவரை அறிந்தவர்களின் கண்களுக்கு தூய வெள்ளையாகத்தான் தெரிந்தார். நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல வருகிறவர்கள் ஒரு கனத்த, கருத்த புத்தகத்தின் மீது கை வைத்து “சொல்லுவதெல்லாம் உண்மை“  என்று சொல்ல வேண்டுமாம். அதெல்லாம் சுத்த ஹம்பக். சாரின் உள்ளங்கையில் கை வைத்துச் சொன்னால் போதும்.

தூய கைகள். கைகளாக வடிவம் கொண்ட தூய்மை. அந்தக் கை நிறைய இளஞ்சூடான நல்லெண்ணெயை, கொல்லையில், வாழை மரத்தடியில் மகள் சைதன்யாவின் உடம்பெல்லாம் பூசிக் கொண்டிருந்தார் தெய்வநாயகம் சார். எண்ணையின் இளஞ்சூடும், அப்பாவின் தொடுதலும் சேர, நெளிந்து ஆடிக் கொண்டேயிருந்தாள் சைதன்யா. மகளின் அசைவுக்கு ஏற்ற பாடலொன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார் சார். அவர் வீட்டம்மா காந்திமதி. சாருக்கு வாய்த்த களஞ்சியம். தலைக்குக் குளித்து நெஞ்சுக்கறி சாப்பிட்டா ரெண்டு பேருக்கும் சளி மட்டுப்படுமென்று இடியாப்பத்திற்கு நெஞ்சுக்கறிக் குழம்பு தயாரித்தபடி, சாருடன் சேர்ந்து அதே பாட்டைப் பாடிக் கொண்டிருந்தார் காந்திமதி அம்மா.

மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு எலிவேட்டை. எலிகள் நோய்களைப் பரப்புவதால், அவைகளை வெளியேற்றி விட வேண்டுமென்பார் தெய்வநாயகம் சார். வீட்டின் முகப்பு அறையும், சமையல் அறையும் சமதளத்தில் இருக்கவில்லை. சமையலறை ஒருபடி இறங்கித்தான் இருந்தது. சாப்பிட்டு முடித்த இடத்தில் கிடக்கிற பருக்கைகளையெல்லாம் ஒன்றாகக் கூட்டிக் குவித்து விடுவார் தெய்வ நாயகம் சார். பெரிய இரும்புச் சல்லடையை அதன் மீது கவிழ்த்து, ஒரு பக்கம் சிறிய ஊசி மருந்து பாட்டிலின் மீது நிறுத்தி விடுவார். பாட்டிலின் தலையில் கட்டிய நூலின் மறு நுனியை சார் பிடித்துக் கொள்வார். மூவரும், வரிசையாகக் குப்புறப் படுத்தபடி கண்காணிப்பார்கள். பெரும்பாலும் குஞ்சுகள்தான் அகப்படும்.

சல்லடைக்கு அருகே வந்து திரும்புவதும் சரியாக வளையத்தின் நுழை நிழலில் நின்று கொண்டு எல்லாத் திசையும் பார்க்கவும் செய்யும் குஞ்சு எலிகள். ஓசையின்றி கவனிப்பதும், குழந்தை உற்சாகத்தில் “அய்யோ வருதுப்பா“ என்று கூவுவதும், அவைகள் அஞ்சிப் பின்னோடுவதும், பின் அகப்படுவதும் நடக்கும். தெய்வநாயகம் சார் அவைகளைக் கொல்லமாட்டார். செல்லமாக, சல்லடையால் தட்டுவார் மூர்ச்சையாகிவிடும் வாலைப்பிடித்துக் கொல்லைப்புறம் கொண்டு போவார். கீழே போடுமுன் ஒரு முறை சிலுப்புவார், காம்பவுண்டுச் சுவருக்கு அந்தப்பக்கம், அது நினைவு தெளிந்து ஓடுவதைப் பார்த்த பிறகு, வேட்டை தொடரும்.

தான் வளர்த்த நாய்களெல்லாம் வரிசையாகச் செத்துப் போனது தெய்வநாயகம் சாருக்கு புரிந்து கொள்ள முடியாத துயரம் என்றாலும், வீட்டு வாசலில் ஒன்றிரண்டு நாய்கள் எப்போதும் நிற்கும். “வளக்க வேண்டாம் நிக்கட்டும்” என்று சொல்லி வளர்ப்பார். வீட்டிற்கு முன் இருந்த குளக்கரை படிக்கட்டுகளில், காக்கைகளுக்கு தினசரி மிக்ஸர் போடுவார் சார். இந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்தே அது நடக்கிறது. தெய்வ நாயகம் சார் வீட்டில் எல்லோரும் ஊருக்குப் போய் வருகிற சில நாட்கள், அந்த படித்துறையில் காகங்கள் பரிதவிப்பது சொல்லிமாளாது. அதனாலேயே அவர் வீட்டில் அதிகம் வெளியூர் போக மாட்டார்கள்.

எலிவேட்டை முடிந்து சின்னத் தூக்கம். சாயங்காலம் அஞ்சு மணிக்கு டீ போட்டார் தெய்வநாயகம் சார். வீட்டில் இருந்தால் இதெல்லாம் சார்தான் செய்வார். காந்திமதிக்கும், சைதன்யாவுக்கும் டீ தந்தார். வாசலில் அமர்ந்து டீ குடித்தார்கள். குளக்கரையில் இருந்த ஒற்றை வீடு. கோவில் வீடு. சார் வாடகைக்குக் குடியிருந்தார். குளக்கரைக்கும், வாசலுக்கும் இடையே தேரோடும் பாதை. அளவான, அகலமான சாலை. டீ குடித்து முடித்திருந்த போது அந்த அதிசயம் வீட்டுக்குள் தாழப் பறந்து வந்தது. பொன்மஞ்சள் நிறம். சிறகின் மையத்தில் இருபுறமும் வெவ்வேறு அளவுள்ள கருநீல வளையங்கள் கொண்ட, சற்றுப் பெரியதானதொரு வண்ணத்துப்பூச்சி. அறையின், இடது பக்கச் சுவரில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது போய் உட்கார்ந்தது. ஓடிச் சென்று, மின்சார விசிறியை நிறுத்தினார் சார். குழந்தை மிகுந்த குதூகலம் கொண்டாள். மேற்கூரையில் இருந்த உத்திரப் பலகைக்கு இடம் மாறியது வண்ணத்துப்பூச்சி. சாரும் சைதன்யாவும் சேர்ந்து அதற்குப் “பட்டு“ என்று பெயர் வைத்தார்கள், மறுநாள், சைதன்யா பள்ளிக்குப் போகிற வரை, பட்டு ஹாலிலேயே இடம் மாறி, இடம் மாறி நின்று பறந்து சுதந்திரமாய் இருந்தது. இரவெல்லாம் மின்சார விசிறி ஓடவேயில்லை.

சைதன்யா ஞானக் குழந்தை. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது செய்த குறும்புகளை சார் அவளிடம் சொல்கிற தருணங்கள் வானவில்லுக்கு ஒப்பானவை. “நா அப்பிடியில்லாம் செஞசேனாப்பா“ என்று சைதன்யா வியக்கிற அழகு எந்த வகைக் கலைஞனும் பிரதி செய்ய இயலாதது. கேள்விகளின் ஊற்றுக்கண்களாய் இருந்தாள் சைதன்யா... பள்ளிக்குப் புறப்படுகிற போது குழந்தை கேட்டாள்

“அதுக்குப் பசிச்சா என்ன சாப்பிடும்?“

“தேன் சாப்பிடும்“

“அப்பம் தேன் வாங்கி வச்சுரலாம்“

“வாங்கி வைக்குற தேனக் குடிக்காது. பூவுல இருக்குற தேனத்தான் குடிக்கும்“

“அப்பம் பூ வாங்கி வச்சுரலாம்“

“அந்தப் பூவுல இல்லடா; வெளியில, செடியில உயிரோட இருக்குற பூவுல தான் தேன் குடிக்கும்“

“அப்பப் பசிச்சா போயிருமாப்பா“

“ஆமாடா“

“பசிச்சா போகட்டும், அது வரைக்கும் பாத்துக்கோப்பா“....

சைதன்யா பள்ளிக்கும், காந்திமதி ஆபீசுக்கும் போன பிறகு தெய்வநாயகம் சாரின் தனிமையைக் கெடுத்தது வண்ணத்துப்பூச்சி. சாருக்கு ஒரு வாரம் லீவு கிடைத்திருக்கிறது. வேறு ஊருக்கு சாரை மாற்றி இருப்பதால் தான் அந்த லீவு. கடைசியாக வேலை பார்த்த ஆபீஸில் இருந்த பெரிய அதிகாரி, ஒரு நாள் எல்லோரையும் கூப்பிட்டு விசாரித்தார் “நான் வெளியூர் போற அன்னிக்கில்லாம் A2 ஏன் லீவு போடுறாரு?“ என்று. ஆபீஸே தெய்வநாயகம் சாரைக் கை காட்டியது. “நீங்க வெளியூர் போனதும் உங்க வீட்டம்மா வந்து அவரக் கூட்டிக்கிட்டுப் போயிர்றாங்க” என்றார் சார். எப்படியும், இரண்டு நாளைக்குள் A2 வை வேறு ஊருக்குத் தூக்கிவிடுவார்கள் என்று ஆபீசே சந்தோஷத்துடன் காத்திருந்தது. அரசாங்க ரகசியங்கள் அறிந்திருந்ததால் தெய்வநாயகம் சாருக்குத் தான் மாற்றல் வந்தது. “பொய் சொல்ல வேண்டாம் உண்மையைச் சொல்லாம இருக்கலாமில்ல?” என்று காந்திமதி கேட்டபோது சார் சிரித்துக் கொண்டார்.

உண்மை, பொய் என்பதெல்லாம் வார்த்தை விளையாட்டு. அறிந்தது, அறியாதது என்பது மட்டுமே சாருக்குத் தெரிந்தது. வீட்டின் தனிமை நிறைய அந்தரங்கங்களும், அடுக்குகளும் கொண்டதாக இருந்தது. பட்டு உத்திரத்தில் இருந்து இறங்கி கண்ணாடிக்குப் பக்கத்தில் இருந்த மரச்சம்படத்தின் மீது வந்தமர்ந்தது. மரச்சம்படத்தின் நிறத்துக்கு பட்டு மேலும் ஒளிர்ந்து மின்னியது. இரண்டு சிறகுகளையும் சீரான கால இடைவெளிகளில் திறந்து மூடிக் கொண்டிருந்தது பட்டு. சமயங்களில் ஏதும் அசைவற்று துறவி போலத் தவமிருந்தது. ஒரு சமயம் சிறகுகளை விரித்து வைத்துக்கொள்வதும், பிறிதொரு சமயம் சேர்த்து உயர்த்தி நிறுத்திக் கொள்வதும் ஏதேதோ யோசனைகளை எழுப்பியது. ஒவ்வொரு அசைவிலும் நுண்ணிய உணர்வுகளை அந்தச் சிறிய உயிர் அறையெங்கும் பரப்பிக் கொண்டே இருந்தது. தெய்வநாயகம் சார், அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரமாக இடம் மாறாத அதன் தவமும், வீட்டின் தனிமையும் தெற்கே கொல்லையில் இருந்து வடக்கு நோக்கி வீட்டுக்குள் நடமாடித் திரிந்த காற்றும், உறக்கத்தின் கண்களைத் திறக்க வைத்தது. சார் தூங்கிப் போனார்.

ஆட்டோ சத்தம் கேட்டுத் தான் விழித்துக் கொண்டார். மதியம் மணி ஒன்றரை. சைதன்யா ஆட்டோவில் இருந்து இறங்கி தன் நண்பர்களிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். தெய்வநாயகம் சார் பட்டுவைத் தான் தேடினார். அறையில் இல்லை. வெளித் திண்ணை நடையிலும் இல்லை. சமையலறையில் தேடினார். சாம்பலும் புகையும் பூத்த உத்திரத்தில் உட்கார்ந்து சிறகுகளைத் திறந்து மூடிக்கொண்டிருந்தது பட்டு. ஆட்டோ அரை வட்டமடித்துத் திரும்பிப் போக, குழந்தை வாசலில் அமர்ந்து ஷூவைக்  கழற்றிக் கொண்டிருந்தாள். அவள் வந்து கேட்கு முன்னரே, அவளுக்குக் காட்ட வேண்டுமென்பதற்காக, மீண்டும் ஒரு முறை பட்டுவைப் பார்த்துக் கொண்டார். அப்பொழுது, உயிரின் சுழற்சியைத் தன் வாலால் உணர்த்தியபடி, கனத்த மரப் பல்லியொன்று பட்டுவைச் சடாரெனக் கவ்வி மென்று விழுங்கியது.

“அப்புக் குட்டீ“ என்றபடியே, சைதன்யா ஓடி வந்து தெய்வநாயகம் சாரைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“அப்பா.... எங்கப்பா பட்டு?“ என்றாள் குழந்தை.

“பசிக்குதுன்னு இப்பத்தாம் வெளியில போச்சு“ என்றார் சார்.

தெய்வநாயகம் சாரின் உள்ளங்கைகள் வியர்த்திருந்தன.

- பாரதி கிருஷ்ணகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)