1.பிழைப்பு

Glassஉடைந்த முகம்
ஒன்று
உடையாத கண்ணாடியில்!

ஒட்டி வைக்க
முயற்சிக்கும் விரல்களுக்கு
தட்டு படாமல்
விரிசல்கள்!

உணரவில்லை கண்கள்
இரத்தம் சிந்திய
கைகளை!
மிச்சமாய் வலி
மட்டும்
இதயத்தில்!!
எவனோ சொன்னான்
அது நானாம்!
என்ன
முட்டாள்தனம்!
ஏகத்தாளமாய் சிரித்தேன்
உடன் சிரித்தது
அந்த கண்ணாடி பிம்பம்!!!


2. சுயம்

யாவரும் பார்க்க
நிகழும் வல்லுறவின்
வலியோடு
தன் சுயம்
இருப்பு அடையாளங்கள்
எல்லாம் இழந்து
சிலையாகி இறந்தது
ஒரு கல்!

நீங்கள் யாரும் அதை
அழகென்று கொண்டாட
எந்த தடையும் இல்லை!


3.யாரோ

சற்று முன்
நொடி பொழுதில்
யாரோ திறந்து மூடிய
என் அறைக்கதவு
சப்தமாய் சிரித்தது
என்னுள் நிராகரிப்பின்
வலியுணர்த்தி!


4.(மின்)அஞ்சல் பெட்டி

அழகிழந்து
கிழிந்து
பயன்பாடற்று
தெருவோர குப்பையில் வீழ்ந்த
அந்த கைப்பைய்யில்
பணம் தேடும் ஒரு பிச்சையின்
விரல்கள் எப்பொழுதும்
மறப்பதில்லை
முன் ஒரு நாளில்
கிடைத்த ஒற்றை ரூபாயையும்
அது தந்த மகிழ்சியையும் !

இலக்குமணராசா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.