மலை ஜீவன்களுக்கு சுனை எனில்
எங்களுக்கு
பட்டு அத்தை கழனி

புள்ளத்தாய்ச்சி அறுவடைக்கு வந்தா
ரெட்டைக் கூலி கொடுத்த
புண்ணியவதி அவள்

வரப்போர புற்கள்
ஆடுமாடுகளுக்கென்றும்
கண்ணீரில் கரைத்த
அவளின் பாடல்
எங்களுக்கென்றும்
இருந்தன ஒவ்வொரு பகலிலும்

சமையலுக்கு உதவ
அவளுக்காகவும்
திண்ணையில் உறங்க
எங்களுக்காகவும்
வந்துகொண்டிருந்தது
அவள் வீட்டு ஒவ்வொரு இரவும்

குளிப்பதற்குக் கூலியாய்
மோட்டார் பார்த்துக்கொள்வதும்
புல் பிடுங்குவதற்கு
குருவி ஓட்டுவதும்
வயல்காட்டுச் சட்டம்

ஊர் கூடி நாற்று நட்டு
ஊர் கூடி அம்பாரம் குவித்த
அவளின் பூமி
மேகம் காணாத
பாலைவெளி ஆயிற்று

அவள் வீட்டு வழியே
நீங்கள் போனால்
கேட்கவும் கூடும்
அவள் பிள்ளைக்கு
நீங்கள் இருக்கும் ஊரில்
ஓட்டலில் ஒரு வேலை 

பச்சியப்பன்