அடேய் எழுத்து விபச்சாரகனே நில்
பேனாமுனை கொண்டும்
என்னுடலை எத்தனைமுறை கிழிப்பாய்
நீ அறிந்தது எதுவென்று
எழுதத் துணிந்விட்டாய் என்னை
முறித்துப்போடு பேனாவை அல்ல மூலையில் புதை

மலர் தென்றல் நிலா வசந்தம்
அன்பு காதல் பசலை பாசமென்று பசப்பினாய்
பிணமாய் கனக்கும் உன்னயே தாங்கும் வலு கொண்டிருந்தும்
மெல்லிடையாளெனப் புனைந்தாய் பொய்யை

கால்கொலுசு கைவளை கழுத்தாரம் தண்டை
கருகமணி பேசரி ஒற்றைக்கல் மூக்குத்தியோடு ஒட்டியாணமும் பூட்டி
அடுக்களையில் உழல்வதும் அரண்மனையாள்வதும் ஒன்றென எழுதியவன்
இப்போது சரக்கை மாற்றியிருக்கிறாய் புதுமோஸ்தருக்கு

சிகரெட் வடுதோய்ந்த என் மார்களையும்
வாதையில் உயிர்க்குருவி பறந்தோடிய யோனியையும்
மாமியாளும் நாத்திநங்கைகளும் கைவிட்டாலும் நீ விடாத
வரதட்சணைக் கொடுமைகளையும்
ஊரெங்கும் ஓலமிட்டு விற்கிறாய்
சாளரத்தை திறந்து வைக்குமாறும்
சமத்துவத்தைக் கோருமாறும் உபதேசிக்கிறாய்

என்னயே விலை கூவி விற்கமுடியாத ஆதங்கத்தில்
என்னப்பற்றி எழுதி விற்கும் உன் காகிதத்திலிருந்து
எனது விடுதலைக்கான எதுவும் கிடைத்துவிடாது
முறித்துப் போடடா பேனாவை முட்டாக்....

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)