Eunuchபெண்குழந்தை இல்லாத வீட்டில்
ஏக்கங்கள் உருக்கிச்செய்த
வளையல் கொலுசு
அணிசெய்த பால்யத்தில்
ராஜீயானான் கடைக்குட்டி ராஜன்

ஆசைகள் விளையும் மனதின்
கவிழ்ந்த இருள் தொட்டு
மையிட்டு விளையாடப்பட்டான்
வழமையின் அஸ்திவாரத்தில்
வலுவாய்க் கட்டப்பட்டது காலச் சுவர்

ராஜீயாக்கப்பட்டவள் நினைத்த நேரத்தில்
ராஜனாகாததைக் குறித்து
முகம் திருப்பிக்கொண்டது பாசம்
காரணமறியாது கைபிசையும் தாய்மைக்கு
பாரதியைப் பாடிவைத்தேன்

கூலியாய் வாழ்க்கையினைக் கேட்ட வளர்ப்பு
கௌரவத்தில் திளைக்குமெனில்
நம்பித் துயில்கொண்ட வீட்டில்
நள்ளிரவின் பலாத்காரத்திற்கும்
இதற்கும் குறைந்தபடசம்
எத்தனை வித்தியாசம் சொல்லமுடியும்

கூண்டைவிட்டு கூடுதேடும் பறவையாய்
ராஜீ வாசல்விட்டுப் பறந்த நள்ளிரவில்
சொட்டுதலின் திராணியின்றி
மழைக்கூரையில் காய்ந்துகொண்டிருந்தது
கடைசித்துளியொன்றின் கனம்போதாத வாழ்க்கை 

கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)