என்னைச் சபிக்குமொரு
பகல்பொழுதின் அந்தரத்தில்
Sad ladyஉன்னை நினைத்துக்கொள்கிறேன்..
பெரும்புயல் தூர்த்தெறியும் மழைத்துளிகளென
பொலபொலவென தொடர்ந்துதிரும்
என்னினத்து உயிர்களில்
நீயும் ஒருத்தியோ யானறியேன்..
தொடர்பற்ற எல்லைக்கப்பால்
நிர்ப்பந்திக்கப்பட்ட உன் வாழ்க்கை
என் கற்பனைகளையும் மீறியதொன்று !
உணவென்பது கனவாகி
கனவொன்றே உணவாகி
நீ நகர்ந்த நாட்களின் ஏகாந்தப்புள்ளி பற்றி
எத்தனை கடிதங்கள் என் கைகளிலே.
உன் சுவாச உதிர்வுகளின் மேற்பரப்பில்
நூற்றாண்டுகள் கவிந்த இருள் தவிர வேறில்லை.
90 இல் நண்பியானாய்..
2000 இல் தொடர்பறுந்தாய்..
இப்போது நீ மண்மேலா ? மண்கீழா ?
பிரார்த்தனைக் கரங்களால் மீட்கமுடியாத
இறுகிய இருள் யுகம் உன் வாழ்வைச் சபித்தபின்னே
சிரிக்கக்கூட திராணியில்லை எனக்கு.
உனக்கொன்றைச் சொல்ல வேண்டும்
மனச்சாட்சியைப் புதைத்துவிட்டு நான் வாழும் இவ்வாழ்க்கை
கடைசி வரை நீ கூட வாழ்ந்திராதவொன்று தோழி...!

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.