ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று
விடைபெற்றுக் கொள்வதாக
கைகுலுக்கிக் கொண்டான்
உதிரும் இலையை
ஒட்டிக் கொண்டிருக்கும் இலைகள்
வேடிக்கை பார்ப்பது போல
சலனமற்றிருந்தது
அந்நாள்
யாருக்கும் அவன்
பொருட்டாக இல்லை
கண்ணீரால் பார்வைகளை
சேகரித்தபடி நடந்தான்
சந்தன மாலை
துக்க அவதாரமெடுத்து
அரிக்க ஆரம்பித்தது
வழக்கமாக
சிகரெட் பிடிக்கும் இடத்தில்
தேநீருடன் நின்று
நீயாவது ஏற்றுக்கொள் என்றான்
கார் நிறுத்துவதற்கான
ஹாரன்
விரட்டியடித்தது
வீடு வரைக்கும்
யாரும் வரப் போவதில்லை
கடைசி ரயிலேறியதும்
பெருமூச்சில்
உட்சென்ற அலுவலகம்
சட்டென்று வெளியேறிவிட்டது.

- இரா.கவியரசு