குப்பை மேட்டில் முளைத்தெழுந்த
காளான்களைத் தின்ற அணில்களுக்கு
அரைவாசியோ, கால்வாசியோ
பசியாறி இருந்தது.

உதிர்ந்து கிடந்த இலையிலிருந்து
சொரிந்த பாலை அருந்த
எறும்புகள் வட்டமிட்டிருந்தன.

போஷாக்கு குறைபாடு
ஏற்பட்டு விடக்கூடாது என
மாட்டுச் சாணத்தைப் பிழிந்து
அதிலிருந்து சாற்றைப்
பருகிக் கொண்டிருந்தனர் சிலர்.

வர்ணங்களில் உருவான சாக்கடையை
மாடல் மாடலாக கலக்கி
கலப்பு சாயத்தைப்
பூசிக் கொண்டனர் சிலர்.

உழைப்புக்குத் தான்
கூலி தருகிறோமே என
முதலாளியின் முதுகில் வளர்ந்த
கூன் மேடுகள் கெக்கலி
கொட்டிச் சிரித்தன.

சட்டப்படி மறுநாளிலிருந்து
ஒரு மணி நேரம்
கடன் வாங்கி உழைத்த
கிழவன் இறந்து கிடந்ததின்மேலே
ஈக்களிட்ட முட்டைகள் பொரித்து,
புழுக்கள் கிழவனைத் தின்ன
இன்னும் ஒரு நாள் அவகாசம் இருந்தது.

ஆகக் கிழவன் இறந்ததற்கு
புழுக்கள் தான் காரணம் என
அவசரச் சட்டம் இயற்றினார்கள் சிலர்.

- மு.தனஞ்செழியன்