நீக்கமற நீளும் கிட்டத்தில்
இரு நிலா செய்கிறது
உன் நிழல்

*
மிகு புனைவு பிடிக்கும் என்கிறாய்
மீந்த நற்பவி உன்னை
மியாவ் சத்தத்தில் இழுக்கிறேன்

*
இலை என உதிர்தல்
உனக்கு விளையாட்டு
வேரென அலைகிறேன்
இது தாலாட்டு

*
மற்றபடி உன் கொலுசொலி
அதன் ஈவு இரக்கத்தோடு
ராத்திரி பற்களை பதிக்கிறது

*
காடும் காடு சார்ந்த
மலையும் மலை சார்ந்த
இப்போது உன் முகமும் முகநூலும்
சார்ந்த நான்

*
உன் விரல்கள் மட்டும்
தெரிகின்ற புகைப்படத்தில்
நான் நகமா தவமா

*
உனது ஒரு ஹலோ
ஒரு ஹாய் ஒரு குட் மார்னிங்
மூச்சுப்பயிற்சிக்கு வேறென்ன வேண்டும்

*
அதற்காக புடித்து வைத்த
பூந்தொட்டியாக இருந்தால் எப்படி
முள்ளாகவாவாது மலரேன்

*
உன் கண்களுக்குள் இறங்கி விட்டேன்
சிமிட்டி சிமிட்டி வெளியெடு
அல்லது அழுந்த மூடி மூழ்கடி

*
மூக்குத்தி குத்திய நாள்
நினைவிருக்கிறதா சொல்
வாழ்நாளில் குத்திக் கொள்ள வேண்டும்

- கவிஜி