இருளால் நனையும்
அகவெளியின் மீது
படிந்து உரசுகிறது
பூனையின் நகங்கள்

உணர்மொட்டுகளை
இறுக்கிப் பிடித்தபடி
சாய்ந்தழுகிறது பூனைக்கண்கள்

நீரற்ற கவளத்தை
முகர்ந்தபடி குடலை நனைத்தது
உயிர்ப்பசி

மிச்சமாக வைத்திருந்த
எச்சில் பொட்டத்தில்
பசியாற்றிக் கொண்டது
பூனை

பூனையை வெறித்தபடி
இளைஞன் ஒருவன்
அதுவைப் போல
அவனும் அங்குமிங்குமாய்
அதன் செய்கைகள் ஒத்து

சூடு தணிக்கும் குளிர்மழையின்
துளிகள் குளித்தபடி ஒரு கை
தனிமையின் ஆறாம் விரலை
புகைத்தபடி மற்றுமொரு கை

நீரும் நெருப்பும்
ஏந்திக் கொண்டே
பெருநிலத்தில்
ஆசுவாசப்படுத்தியபடி
ஆகாயத்தில்
இழுத்து விடுகிறான்
இளமையின் காற்றை

கலைந்த மூட்டத்தின்
நடுவே தூரிகை நுழைத்து
பார்த்த போது
மிதந்து கொண்டிருந்தது
அவனுக்குள் இருந்த
வெகு நேர பூனையின் இறகு

- கோ.பிரியதர்ஷினி