பொருளைச் சுற்றி வளைத்தெழுதும்
புரியாப் படைப்பாம் புதுக்கவிதை
இருசொல் சேர்த்துப் படிக்கையிலே
இடையில் வேண்டும் மெய்யெழுத்தே
அருமைத் தமிழைப் பிழையின்றி
அழகாய் எழுத மனமில்லை
சுருங்கச் சொல்லும் எண்ணந்தான்
தொலையு தங்கே இலக்கணந்தான்

எண்ணிக் குமையும் என்னுள்ளம்
எடுத்துச் சொன்னால் பயனுண்டோ
கண்ணை இமைகள் காப்பதுபோல்
கருத்தாய்த் தமிழைக் காப்பதென்றோ
வண்ணத் தமிழின் வளமெல்லாம்
வாடிப் போக விடலாமோ
வேண்டும் நல்ல தமிழுள்ளம்
விரும்பிக் குறைகள் களைவதற்கே!

- அர.செல்வமணி