மனித வாசனை நுகராத
நிலத்தில்
வேரூன்றி நிற்கின்றன
புன்னை மரங்களும்
வேப்ப மரங்களும்.

வண்டிகளின் ஆரவாரமற்ற
தனிமையில்
கதகதக்கிறது
காற்றின் மெல்லிய ஒலி.

நிசப்தமான நிழல்களினூடே
பதட்டமின்றி
சுள்ளி சேர்க்கின்றன
சாம்பல் நிற மைனாக்கள்.

மழைக்கு ஒதுங்கவோ
வெயிலுக்குப் பதுங்கவோ
ஆள் இல்லாத அங்கே
காணலாம்
ஓய்வெடுக்கும்
வலசைப் பறவைகளை.

மேற்சொன்னவை அனைத்தும்
காடுகளோடு மட்டும்
தொடர்புடையதெனச்
சொல்லிவிட முடியாது.

மனிதனின் பார்வைக்குத் தப்பி
இரு வீதிகளுக்கு நடுவே
வளைந்தோடும்
சாக்கடைக் கால்வாய்ச் சந்தோடு
சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.

- தி.கலையரசி