சொல் பல்விதமானது
நின்றும் பேசும் கொன்றும் வீசும்
செத்துப் போன சொற்கள்
உடலெங்கும் சிலுவை
அடித்துப் போகிறது

மீண்டும் மீண்டும்
நிகழ்ந்துவிடுகிறது சொற்கொலை
கண்ணாடி துண்டங்களில்
என் சிலுவை பாதுகாக்கப்படுகிறது
மெல்ல மெல்ல
சிலுவையே நானாகியிருந்தேன்

படபடத்து எரியும் முற்றிய மலராய்
வேர்தேடிக்கொண்டிருந்தேன்
வெட்டப்பட்ட கிளைகளில்
கால்கிடக்க என்மேலொரு சிலுவை
என் பின்பொரு சிலுவை

ஒன்று என் தோட்டத்து மரங்களுடையது
மற்றொன்று செத்துப் போன சொற்களுடையது
இரண்டையும் நகர்த்த துடித்து
கழுத்தெழும்பை உடைத்துக் கொண்டேன்
தொங்கியே கிடக்கிறது தலை
இரக்கத்தோடு வந்தவர்கள்
கையிலோ இன்னுமொரு ஆணி
முழுவதுமாக உடைந்தொழுகிறேன்

எண்ணற்ற துளைகளில் வழிகிறது
நின்று பேசும் சொற்கள்
நீண்டு சாயக்கிடக்கும் என்குழலில்
இருக்கலாம்
யாரோ விரும்பும் பேரிசைச் சொல்

- கோ.பிரியதர்ஷினி