போவோர் வருவோர் என
நூற்றுக்கணக்கில் பாதங்களை
தாங்கிப் பிடித்த வீதி ஒன்று
அமைதியில் துயில் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் தன்னைக் கடந்து
சென்றவர்களின் நினைவுகளை சுமந்து
நிற்கும் வீதியானது
வழக்கமாய் வந்து செல்லும் பாதங்களின்
சுவடுகள் பலவற்றை வெகுநாளாய்ப்
பார்க்க முடியாத ஏக்கத்தில் குமைந்து கிடக்கிறது.

கண்ணுக்குப் புலப்படாத காலடித் தடங்கள்
அனைத்தும் அமரர் ஊர்தியில்
கிடத்திச் செல்லப்படுவதைக் கண்டு
கண்ணீர் சொரிகிறது.
ஒவ்வொரு முறையும் தன்னை
உரசிப் செல்லும் மனிதர்களோடு
ஒரு சங்கேத மொழிக்கான உரையாடலைக்
கொண்டிருந்த வீதியில் இன்று காலடித் தடங்களின்
எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.
வீதியைக் கடந்தவர்களில் பலபேர் விதியுடன்
கைகோர்த்து காலாகாலத்தில் கரைசேர்ந்து விட்டனர்

முடக்கில் திரும்பியவுடன் காதலியின்
கைகளை இறுகக் கோர்த்தும்,
நண்பர்களுடன் கதை பேசி சிரித்தும்,
குடித்த மதுவின் மீதியைக் குறுக்கில் செருகி
இடம் வலமாக இரண்டு கால்களால் தள்ளாட்டம் போட்டும்,
களையெடுக்கச் செல்லும் பெண்கள் கூட்டம்
ஊர்வம்புகளை உரக்கப் பேசியும்
சென்றுவந்த இவுவீதியில் இன்று எஞ்சியிருப்பது வெறுமை மட்டுமே
இறுதி யாத்திரையும் இடம்பெயர்வும்
தனக்கும் மனிதருக்குமான
உரையாடலை வேரறுத்ததை எண்ணி
பெருமூச்செறிந்தவாறு தன் மேனியை
அகல விரித்த வண்ணம்
வெற்றுடம்பாய் விரவிக் கிடக்கிறதிந்த வீதி...

- எஸ்தர்