அன்று பெய்து அடங்கிய அடைமழையில்
நிசப்தமாகிப்போனது அப்பாவின்
சாய்விருக்கை...
அவ்வப்போது உயிர்கொடுத்து
அணைத்து வைக்கப்படும்
தொலைக்காட்சிப் பெட்டியின்
இருபுறமும் கிளம்பும் ஒரு மெல்லிய ஒலியோடு
இணைந்து வரும் இருமல் சத்தத்தை
உணர முடிகிறது என்னால்...
உணவு மேசையின் மேல்
பரப்பி வைக்கப்படும் தட்டுகளுக்கிடையே இப்பொழுதெல்லாம்
இடைவெளி இருப்பதைக் கண்டு
இனம்புரியாத இறுக்கம் எனக்கு..
உணவுக்கு முன்னும் பின்னும்
கொடுக்கப்படும் மாத்திரைகளைத் தேடி
என் கைகள் துழாவுகின்றன..
அன்றொரு நாள்
குளியலறைத் தொட்டியில்
நிரம்பியிருக்கும் தண்ணீரின்
நடுவே அப்பாவின் முகம்
சலம்பிச் சென்றதாய் ஞாபகம்...
அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
அத்தனை புத்தகங்களிலும் அழியாத
வண்ணங்களாய் அவரின் கைரேகைகள்..‌‌‌
சாய்விருக்கை சத்தம் எழுப்பிய சமயமெல்லாம்
கண்டும் காணாமல் நான் முகம்
திருப்பிக் கொண்டதை
இன்று
சாட்சிகளாய்த் தாங்கி நிற்கின்றன
என் வீட்டு முற்றத்துத் தூண்கள்..
ஏழாம் நாள் காரியமும்
எண்ணெய்க் குளியலும்
முடிந்த பின்பு
ஆசுவாசப்படுத்த முயன்ற போது
அப்பட்டமாய் தோற்று போனேன்
அப்பாவின் நினைவுகளில்..
என் வீட்டுச் சுவர்களில்
ஆங்காங்கே தெறித்துக் கிடந்தன
அவரின் நிறைவேறாத ஆசைகள்..
இப்பொழுதெல்லாம் எனது
இரவு உறக்கத்தை சீக்கிரம் துவங்கி விடுகிறேன்
ஏனெனில்
எனக்கும் அவருக்குமான
உரையாடல் துவங்கி
வெகுநாளாகிவிட்டது...

- எஸ்தர்