தன் தேசத்து
மக்களைப் பற்றி
சதா சிந்திக்கும்
மன்னாதி மன்னன்,
இம்முறை
கண்ணைப் பறிக்கும்
ஓர் ஒளி பீடத்தை
கனவில் காண்கிறான்!

வாக்கையும் ,
வரியையும் செலுத்தும்
வெறும் எந்திரமா
என் மக்கள்?
அவர்கள் என் தேசத்தின்
தேவகுமாரர்கள்!

நான்
அவர்களை
தோளில் சுமக்கும் சேவகன்!
நாடாளும் அவையின் வாசலில்
சரணாகதியாய் விழுந்து
சத்தியம் செய்கிறார் !

மாமன்னரின்
புண்ணிய பூமி
புணரமைப்பு விருப்பத்தை,
தேவர்கள் கூட்டமும்,
வானரக கூட்டமும்
மேசைகளை தட்டி வரவேற்கின்றனர்!

சிறப்பு யாகமும்,
வேள்விகளும் முடிந்த பிறகு
வண்ணங்களால் குறியிட்டு
குடிமக்களை
வகைப்படுத்தி நிறுத்துகின்றனர்!

முதலில்
பச்சையில் இருந்து துவங்கினார்கள்,
பிறகு கருப்பு, சிவப்பு, நீலம்
என பாரபட்சம் இல்லாமல்
எல்லா குறியீட்டு வண்ணத்தார்களையும்
சிலுவையில் அறைகிறார்கள்!

ஆனாலும்
சிலுவைகளும்
முட்கிரீடங்களும்,
ஆணிகளும்
எங்கும் நீக்கமற பரவிக் கிடந்தது,

அடிக்க, அடிக்க
தீர்ந்திடாத ஆணிகளும்,
தேசம் முழுதும்
நீண்டு கிடக்கும் சிலுவைகளும்
மாமன்னரை
கவலையடையச் செய்கிறது!
தப்பித் தவறியும் கூட
யாரும் விடுபட்டு போய்விடக் கூடாது,
எம் மக்கள் யாவரும் தேவகுமாரர்கள்!
புழுதி பறக்க
நர்த்தனம் ஆடுகிறார் மாமன்னார்!

எல்லா வண்ணங்களும் தீர்ந்த பின்னர்,
தனக்குப் பின்னால் சில வண்ணத்தார்கள்
ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது!
மீதமிருக்கும் ஆணிகளும், சிலுவைகளும்
அவர்களையும் தேவகுமாரர்களாக பரிசுத்தப்படுத்தியது!

என் தேவனே !
'எம்மை கைவிட்டுவிடாதீர்'
என தேவகுமாரர்கள்
விண்ணை நோக்கி அலறுகிறார்கள்!

எங்கும் சிதறிக்கிடக்கும்
மரண ஓலங்கள்
தேசம் முழுவதும் ரீங்காரமிடுகிறது!
கண்களை மூடி
ஆனந்தக் கூத்தாடும் மாமன்னருக்கு
அடுத்தும் ஓர் கனவு வந்தது!

- இராஜகம்பீரம் ஃபாரூக்