சூழ்ச்சிக்காரன்
இந்த உலகம் மொத்தமும்
தன்னிடம் ஏமாறுவதற்காக
படைக்கப்பட்டிருப்பதாக உறுதிபட நம்புகிறான்

பிறர் சேர்த்து வைத்த
பெருஞ்செல்வத்தில்
தனக்கும் பங்கிருப்பதாக
தயக்கமின்றித் திருடுகிறான்

சூழ்ச்சிக்காரன்
தன்னைச் சுற்றி இருக்கும்
மனிதர்களை
தன் பாதம்பட
காத்திருக்கும்
படிக்கட்டுகளாக பயன்படுத்திக் கொள்கிறான்

இந்த உலகம்
ஒரு சூதாட்ட
விடுதியைப்போல்
தோன்றும்
அவனுக்கு
விளையாடித் தோற்கும்
சக மனிதர்களின்
வருத்தங்களை ஆபரணங்களாக
அணிந்து கொள்கிறான்

அவன்
ஒரு போதும் ஆட்டத்தில் களைத்துப் போவதில்லை
பிறரைக் களைப்படையச் செய்வதால் வெற்றி பெறுகிறான்

சூழ்ச்சிக்காரன்
களவு செய்வதற்கான
தன் இரகசியப் பாதையை
யாரும் பார்க்காத வண்ணம்
கட்டமைக்கிறான்

கண்விழித்து
யாரேனும்
அதைக்
காண நேர்ந்தால்
அவர்களை
அவதூறு பரப்புகிறவர்கள்
என்று அறிவித்து விடுகின்றான்

அவன் மனம்
ஒரு குப்பைத்தொட்டியாக
இருந்த போதும்
அதை மலர்களால்
மூடிவைத்து
அலங்கரித்து விடுகிறான்

தன் பழைய
தவறுகளை உரமாக்கி
புதிய புதிய குற்றங்கள் இழைக்கிறான்

தன் குற்றங்கள்
தனக்கு எதிரான
ஆயுதங்களாக
மாறி நிற்பதை அறியாமல்
விரோதிகள்
வெளியில் இருப்பதாக புலம்பித் திரிகின்றான்

காலச்சக்கரம்
சுழன்று சுழன்று
தன் கழுத்தின்மேல்
ஏறிநிற்கும்
தேர்க்கால்களாக
மாறும்வரை
தன் வெற்றிகள் குறித்து
சுய இன்பம் கொள்கிறான்

குறுக்கு வழிச்சாலைகள்
யாவும் அடைக்கப்படும் ஒரு நாளில்
நேர்மையின்
பாதையில்
நடக்க அஞ்சி
மனம் உடைந்து போகிறான்

காலம்
கைவிடும் போது
தீராத் தனிமைகளால்
தீர்ந்து போகின்றான்

வாழ்க்கை
விசித்திரமானது

அறத்தில் வீழ்ந்தவர்கள்
வெளித்தோற்றத்தில்
வெற்றிமாலை சூடிக் கொள்கிறார்கள்

நதியின்
ஆழத்தில் தங்கிவிட்ட கூழாங்கற்கள் போல்
அமைதி கொள்கிறார்கள்
அறம் சார்ந்த மனிதர்கள்

- அமீர் அப்பாஸ்