இடைவெளி என்கிறார்கள்
நமக்கெப்படி தகும்
கேட்கும் இசையில் கூட வெளி அசையும்
தூரங்கள் சரி வராது நமக்கு
துயரங்கள் கூடினும்
பார்வை வேண்டும் என்போம்
ஸ்பரிஸம் மீண்டும் மீண்டும் என்போம்
மூன்று முறையல்ல முதல் முறையே
மறுதலிப்போம் பிரிந்திருப்பதை
முத்தத்துக்கு சண்டையிடுவோம்
பிறகு சண்டையிட்டதுக்கு முத்தமிடுவோம்
ஓயாது பேசினாலும்
மௌனமும் நமக்கு சம்மதம்தான்
விரலில் இருந்து
ஆரம்பிக்கும் விடியல்
வீணை வாசிக்கும் கண்களில்
இரவென இசைக்கும்
தொடாமல் படாமல் நகம் கடிப்பது எப்படி
நெற்றி முட்டி கண்கள் உரச
நந்தவனம் பூப்பது தான் எப்படி
சொந்தவனத்தில் பூத்திருக்கும் நிலவை
இடைவெளியில் எங்ஙனம் தாலாட்ட
சொற்றொடர் காது மடலில் இருக்கிறது
பட்டும் படாமல் ரகசியம் திறக்க
மூச்சு படத்தானே வேண்டும்
ஓயாமல் அணைக்கும் ஒவ்வாமை
நமக்குண்டு என்பதை
வேறு வழியில்லை
சொல்லித்தானே ஆக வேண்டும்....!

- கவிஜி