ஒருக்களித்துப் பேசுகிறாய்
உள்ளங்கையில்
உதிர்த்து வைத்திருக்கிறேன்
சருகுகள் நான்கைந்து
எல்லாவற்றிலும் பாதாம் நிறம்
இப்போதிந்த சருகுகளை
பறக்கவிட்டுப் பார்க்கவா...?!

உன் அன்பு நீண்ட தூரத்திலிருக்கிறது
பூர்வீகம் திரும்ப விரும்புகிறாய்
பறக்க எதுவுமில்லை
பேசவுமா எதுவுமில்லை

என்ன சிரிப்பு அது
இன்னொருமுறை பேசாதே
இடையே சிரித்துவிடப் போகிறாய்
நான் பொய்யாகவாவது
ஸ்மைலி அனுப்பிவிடப் போகிறேன்...

பாட்டுப் பாடு
உன் குரல் வசீகரம்
எனது வேண்டுதல் காதலின்பம்..

எத்தனை நாட்களைக் கடந்துவிட்டாய்
என்னைக் கண்டறிந்து வர
உன் கண்களுக்கு
என் மாடியில் வந்துவிழும்
தேக்கிலைகள் தான்
பெரிதாகத் தெரிகிறதா?!

அதோ அந்த வானத்தில்
கலைந்து போகிறது பறவையின் தோல்
உனக்கும் எனக்கும்
அது மேகம் தான்....

- புலமி