உலக
ஆதிக்க தேசக் கொழுப்பின்
ஆட்டம் அடங்கியிருக்கிறது

உருண்ட உலகின்
இருண்ட வெளியில் கூட
விதைக்கப்பட்டுவிட்டது
மரண பயம்

வெட்கமேயில்லாது
நெஞ்சுயர்த்தி மார்தட்டிய
நாகரீக நாடுகள்,
ஓடி ஒளிந்து
பதுங்கிப் பிழைத்துக்கொள்
என்கிறது

மலை தேசங்களின்
வனாந்திரப் பரப்புகளில்,
மழைத் துளியின்
அமுத சாரத்தில்,
மயங்கிக் கிடந்த
மனிதனைக் கூட
பயம் பற்றிப் படர்ந்திருக்கிறது

பயம்
பாடம் நடத்துவதால்
ஊரடங்கி ஊரடங்கி
உலகே அடங்கிப் போனது
இன்று

நிசப்தங்களையே
உலகச் சாலைகளின்
மொழியாக்கியிருக்கிறது

நாய்கள் குரைக்கிற
நடுநிசியின் அமைதியே
நடமாடுகிறது நாடெங்கிலும்

ஊடகங்கள் உமிழும்
மரணச் செய்திகளால்
தார்ச்சாலைகள்
மெலிந்து கிடக்கிறது
கருத்த உழவனின்
கை, கால்களைப் போல

அவதானத்தின் அவசியத்தை
உணர்த்தியிருக்கிறது
பூமிதோறும் பூத்துக் கொண்டே போகிற
கோவிட்(COVID-19) காளான்கள்

கிழக்காசியத்தின்
அறிவியல் உக்கிரம்
அது
ஹுபேய்- வூகான்
பெற்ற வக்கிரம்

உயிர்ப்பசி கொண்ட
உருண்டைக் கிருமி
அது
விழுங்கித் தீர்த்த உயிர்கள்,
அறிவியல் அறிவு
அழுகிப் புழுத்துப் போனதற்கான
வடுக்கள்
இனி அது
வரலாற்றுப் பெருங்கனம்

நாடு
மொத்தமாய் புதைத்தது
உடல்களை மட்டுமல்ல
உண்மைகளையும் தான்

இலக்குதான் புரியவில்லை
இன்னும்
எத்தனை எத்தனை
செழித்த வாழ்வுகளை
சுழித்த உதட்டின்
புன்னகைகளை
கனவுக் குவியல்களை
கண்ணீரில் தொலைத்தோம்
அந்த
சவங்களின் தடங்களில்
இன்னும்கூட நடக்கிறது
மனிதம் விழுங்கும்
வணிக வக்கிரங்கள்

தூர தேசங்களில்
வாழ்க்கைக்காக படித்தவனுக்கெல்லாம்
வாழ்க்கையைப் படிக்க
கற்றுத் தந்துவிட்டது காலம்

மரணம் நம்மீது
கவிழ்வது குறித்த
அச்சம் தவிர்.
அரசே சொல்லிவிட்டது
பிரிந்து நின்று சேர்ந்திரு.
இன்றேல்
அவரவர் வினைவழி
ரோக நிவாரண ஸ்லோகா படி

தலையிலே
மண்ணை கொட்டிக்கொண்ட
தான்தோன்றித்தனத்தின்
அறுக்க முடியாத ஆசை
விதைத்ததையெல்லாம்
அறுத்துக் கொண்டிருக்கிறது

காலம்
இப்போதும்கூட
காற்றில் எழுதிக்கொண்டேயிருக்கிறது
சாப நாடுகளின்
பாவக் கணக்குகளை

- கரு.அன்புச்செழியன், சிவகங்கை