எனக்கும் எனக்குமான
இடைவெளி என்பது
ஓர் இழை தான்
அதன் தூரம் தான்
வானத்திற்கும் பூமிக்கும் ஆனது

காலம் ஓடுகிறதாம்
என்னைத் தூக்கிக் கொண்டு
நடக்கவே முடியவில்லை
இதுல எங்க ஓட

எனக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில்
முளைத்து என்னவோ முரண்பாடுகள்தான்

என் நிழலைப் பின்தொடரும் இன்னொன்றும்
என் நிழல் தான்

நான் எழுதிய கவிதை ஒன்றை
100 வருடங்களுக்கு
முன் வாசித்ததாக சொல்லி ஒருவன்
என்னுள்ளிருந்து வெளிநடப்பு செய்கிறான்

உன் சிந்தனை அதிர்வுகளை
தானும் உணர்ந்ததாக சொல்லி ஒருவன்
என்னுள் வந்து உட்காருகிறான்

சமாதானத்தில் தான்
வாழ்வு சரியாகும்
என
சண்டையிடுகிறான் இன்னொருவன்

என் நிழல்களைக் 
கொல்லவும்
முடியவில்லை
நண்பனாக்கிக் கொள்ளவும் முடியவில்லை

மனம் ஒரு குழம்பிய குட்டை.

விளையாட்டுப் பருவ கால நண்பன்
மனநோயாளியாக மாறியதை அறிந்து,
எல்லோரும் அதிர..
நான் எனக்குள்
சொல்லிக் கொண்டேன்
அது நல்லதொரு தீர்வு

மனநோயாளியாக மாறியதை
அறிந்தவர்களுக்குத் தெரியாது
அந்த நோயின் பெயர்
மனம் என்று...

மனம்
நிரம்ப கதவுகள்
வைக்கப்பட்ட வீடு

கதவுகள்
திறக்கப்படுவதில்
அர்த்தமில்லை

இங்கு
வீடே எரிந்தாக வேண்டும்...

- சூரி