யாழினிக்குட்டியின் விரல் பிடித்து
வீட்டுக்கு வந்திருக்கிறது
அந்தி
அவளை விட்டுப் போக மனமின்றி
குச்சியில் கோடு கிழித்து
சில்லு ஆட்டம்
விளையாடிக் கொண்டிருக்கிறது...
பிறகு அவள் வரையும்
மாலைக் கோலங்களில்
மனம் லயித்து
என்னையும் வரைந்து காட்டென
அடம் பிடிக்கிறது
தன்னை எப்போதும்
தனியாக வரைந்ததில்லை யாழு
மரமின்றி அவளில்லை
மரத்தில் தன்னையும்
தனக்குள் கிளைத்த மரத்தையும் சேர்த்தே
கோலத்தில் வரைகிறாள் ..
அடடா மாக்கோலம் மரக்கோலம்...
அந்தியைத் தேடி
யாராவது வந்தால்
சொல்லி விடுங்கள்
யாழுவுடன் கரகரவண்டி விளையாடும்
அந்தி தொலையாதென ..
கொஞ்சம் கொஞ்சமாய்
மறைகிறது அந்தி சிறுமியின் உள்ளங்கைக்குள் ..
தேடாதீர்கள்
யாழினியின் போர்வையாகி
அச்சமின்றி உறங்குகிறது அந்தி ..
சீண்டலும் சில்மிசத் தொல்லையும் இனியில்லை
பாப்பாவே நாளை
அந்தியின் வீட்டில்
பாதுகாப்பாய் சேர்ப்பாளாம்
வண்ண வண்ணக் கதைகள்
முளைத்து மிதக்கிறது அவர்களின் இரவு...

- சதீஷ் குமரன்