கடந்து விட முடியாததை
தெரு விளக்கில் காண்கிறேன்
நுனி தேடும் ஒளி முழுக்க
கயிற்றுக் கட்டிலில் தூங்குபவன் மீது
நகர்ந்து நீண்டு நளினம் கொள்கிறது
தகர்ந்து உயர்ந்து நிலவு செய்வது
பின்னாக ஒரு வரைபடம்
கொண்ட முன்பொரு முறைக்கு
கூடுதல் ஜன்னல் தேவையும் தான்
தூங்காத இரவை கிள்ளிய எவனோ
இங்கு தான் எங்கோ இசை கேட்கிறான்
தனித்த உடல் ஒன்று வேரறுந்த ஒருத்தியாய்
கால் தேடி நடந்து கொண்டே இருக்கிறது
அய்யனார் சிலை பேசும் அசைவுக்கு
ஆசையாய் குரல்மொழி பொழிகிறது
தென்மேற்கு சாரல்
நிகழ்ந்த கனவுக்குள் நித்திரையற்ற
பயணத்தை தூரத்து ரயில் கூவும்
குறுக்கு வெட்டு ஞாபகத்தில்
இருள் ஏந்தி நிற்கிறது வீதி மறதி
உள்ளிருந்து நிகழுதலில் ஒன்றிருக்கிறது
மீண்டும் ஒரு முறை சுவரொட்டியிலிருந்து
இறங்கி வரப் பார்க்கிறது
நிமிர்ந்து பார்த்த குதிரை.....!

- கவிஜி