நான் ஏறிக் கொண்டேயிருக்கிறேன்
எனது இரு பக்கங்களும்
சரிந்து கொண்டேயிருக்கின்றன

வான உச்சியில்
ஒரு பறவை சூரியன் சுமக்கிறது
பார்க்கவே பரவசம்

கணம் ஒன்றில் கீழ் நோக்க
நெற்றி விடுவித்த வியர்வைத் துளி
பூமியை சுழன்று துளைக்கிறது

கொய்யா மரத்தின் உச்சி
கருவேப்பிலை மரத்தின் உச்சி
தேயிலை மரத்தின் உச்சி
இதோ இந்த மலையின் உச்சியிலும்
என் சிகரங்கள்

பெருமூச்சு அந்த மலையையே
புரட்டும் சுழலென நீள்கிறது

விடாதே இன்னும் சில மணித்துளிகள்
எனும் போது
பிடி தளர்ந்த கேமரா சிதறுகிறது

நான் என்ன ஆனேன் என்று அதன் பிறகு
தெரியவேயில்லை....

- கவிஜி