வழியெங்கும் வாழ்கிறோம்
சிறுகூடு நமக்கில்லை
பெருங்காடு எரிகிறது

பொசுக்கென நீ அழுவதில்
ஆலாபனை காண்கிறேன்
அசுரத்தனத்தில் வந்து போகிறது
வானவில்

வெற்றழுகை இல்லை
வீறிட்ட காதல் என யாரிடம்
சொல்வது

பேசாத மௌனங்களை
பையில் போட்டு அனுப்பி விடும் நீதான்
பேசிக்கொண்டேயிருக்கும்
என் புலம்பல்களை பேருந்து நிறைய
அள்ளிப் போகிறாய்

வாய் திறந்த முத்தங்களை
மென்று முழுங்கும் உன்னிடம்
கை திறந்து உள்ளங்கை காட்டுகிறேன்
அது மட்டும் தான் நமக்கான
அப்போதைய திறவு

எப்போதாவது யாருமில்லா தேசம்
கேட்கும் நமக்கு எப்போதுமே
நாமுமில்லா தேசம் தான் கிடைக்கிறது

முல்லைக்கு முன் பின் தான் உன் வாசம்
நின்று நிதானித்து சுவாசிக்க
உன் வளையல் வாசிக்க
பொருந்தா நகரம் இது

மனிதப் பூச்சிகள் மொய்க்கும்
சாலையெங்கும் ஒற்றைக் கண்ணன்கள்
தப்பித்தல் பெரும்பாடு

மெய் வருந்திய மனதோரம்
மாற்றி மாற்றி நடக்கிறோம்
மாலை மயக்கம் மயங்குபவர்களுக்கு
எப்படி தெரியும்

வெகுதூரம் சென்ற பிறகும்
கிசுகிசுக்கும் கழுத்தோரம்
சிறுகனவு ஊர்கிறது

மணிக்கணக்காய் வருந்துகிறோம்
ரகசியங்கள் குட்டி போடுகின்றன

மரித்திட்ட நினைவோடு
பெருந் துயரத்தில் பிரிவதற்கு முன்
நெற்றி தொடும் ஒற்றை முடி
ஒதுக்கவாவது சிறு சந்து வேண்டும்
இது நரக நகரம் போ.....!

- கவிஜி