பௌர்ணமி நாளில்
ஒளிரும் சந்திர பிம்பத்தை
ரசித்தவாறே காட்டு வழிப்பாதையில் தனிப் பயணம்.
நிசப்தமிகு அவ்விடத்தில்
தூரத்தில் நாய்களின் ஒழுங்கற்ற ஊளைச்சத்தமும்
காற்றில் ஆடும் மரங்களின் ஓசையும்,
என்றோ நான் பார்த்த திகில் படத்தின் காட்சியும்
என் மனக்கண்முன் நிழலாடி பயமுறுத்தியது.
ஆனால் வெகு இயல்பாய் அவற்றைக் கடந்து
செல்கையில்தான் அடுக்கி வைத்திருந்த
காய்ந்த பனையோலை படபடக்க
ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றது.
அது எதுவாக இருக்கும் என்று எண்ணிடும்
எனது யூகிப்பின் நீளம் இல்லம் திரும்பி
ஆழ்ந்த உறக்கத்தில் கனவு வரை
நீண்டது…

- முனைவர் சி.திருவேங்கடம், இணைப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - கோவை