விடியலில்
எவர் நினைவுமெழாமல் அங்கையில் விழித்து
அதை கன்னத்தில் ஒற்றலாம்

தேனீக்களை ஈர்க்கும்
தேமதுர மலர்களை
யார் வதனத்தையும் ஒப்பிடாமல் ரசிக்கலாம்

இயற்கையின்மேல்
மேலதிகப் பொருளேற்றாமல்
இயல்பானதென்றே ஏற்கலாம்

பாதங்களை தரையில் பாவியபடி
எந்தக் கிறக்கமுமின்றி
நடக்கலாம்

ஆடியையே நோக்காமல்
மாதமொருமுறை
சிகை திருத்தலாம் ...

துயிலவிடாமல் போர்த்தும்
நினைவுகளின்றி,
பஞ்சாய் பறக்கும் வெண்முகிலென
இலகுவாகத் தானிருந்தது
மனம்...
அவளை என்னில்
சூழ் கொள்ளும்வரை...

- கா.சிவா