என்னிடம் எதுவும் இல்லை
உனக்குக் கொடுப்பதற்கு
நான் ஒரு வெற்றுக் காகிதம்
துளை இடப்படாத புல்லாங்குழல்
தினம் துடிதுடித்து வீழ்கின்றேன்
உன் அணைப்பின் நெருப்பில்
யாருக்காகவோ பேசுகின்றேன்
யாருக்காகவோ எழுதுகின்றேன்
யாருக்காகவோ அழுகின்றேன்
யார் யாரோ துப்பிய எச்சில்
என் முகத்தில் வழிகின்றது.
என் சுயம் அம்மணமாய் நிற்கின்றது

ஆட்டுமந்தைகளை
ஓட்டிச் செல்லும் மேய்ப்பான்
நான் தொலைந்துபோனதை
இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை

எனது பாதங்களில்
ரத்தம் வழிகின்றது
எனது கண்கள்
வலியால் துடிக்கின்றன
யாருக்கானது இந்த வாழ்க்கை
என் ரத்தத்தின் ருசியை
அறிய விரும்பும்
உனக்கு நான்
என்ன தருவேன்
உண்மையில் சொல்கின்றேன்
என்னிடம் எதுவுமில்லை

என் சதைகள் அழுகிவிட்டன
என் எலும்புகள் உடைந்து
அந்தரத்தில் தொங்குகின்றன.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காதல் தெரியவில்லை

உனக்கு எதாவது
கொடுக்க வேண்டும்
போல் இருக்கின்றது அன்பே
என் எழுத்தைத் தவிர
கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை
இந்தப் பிச்சைக்காரனின் பரிசை
நீ ஏற்றுக்கொள்வாயா?

- செ.கார்கி