மன்னியுங்கள்
ஒரு கொலை செய்திருக்கிறேன்
புன்னகையை விழுங்கி
கதவுகளை திறப்பவள் அல்ல நான்
உற்றுப் பாருங்கள்
மெல்லும் வார்த்தைகளை
வெறுமனே செய்யும் அவர்களுக்காய்
தண்டிக்கிறேன்
என்னை கட்டி இறுக்கிய
இரவுகளை மென்று விடுகிறேன்
அணைந்து கிடந்த வானவனை
ஒளியூட்டுகிறேன்
சதுப்பு நிலத்தில் வளர்ந்தாலென்ன
படிக்கட்டுகள் கட்டுவதற்கு

பழக்கி இருக்கிறாள் என் அன்னை
சிருஷ்டிக்கப்படாத
இரத்தச் சிலுவைகளை
உளி தீட்டும் ஆயுதமாக்குகிறேன்
உபாதைகள் என்னிடம்
அமர இடமளிப்பதில்லை
செதுக்கிய சிலைகளை விட
உளிகளுக்கு என்னறையின்
கதவுகள் திறக்கப்படுகின்றன
மேகத்துளிகளை
சாவியிட்டா திறக்க முடியும்
தன்னைப் பெயர்த்து
திசை நீட்டுகின்றன
என் ஈட்டிகள்
கொல்வதற்கான சொற்கள் தான்
சிலகணத்தில்
முறியடிக்கப்பட்ட முத்தங்கள் ஆகின்றன
என்னை ஏன் கோதுமை வயல்களில்
தூக்கிலிடுகிறீர்கள்?

00

உன் வேற்றுமைக் குவளையில்
இருள்த் துளிகளை
நிரப்பி நீட்டுகிறாய்
வாளரிந்த நாவில்
வார்த்தைகளுக்கு மூளை
முற்றியிருக்கவில்லை

அன்பு அதிரசத்தை விட
ஆயிரம் மடங்கு அதீதம் என்றேன்
நீ அலரிப் பழம் பற்றி
பேசிக் கொண்டிருக்கிறாய்

நான் விதை என்று தெரிந்தும்
வேர் பிடுங்கி எறிய முயற்சிப்பது

உன் குதர்க்கத் தற்கொலைத்துவம்
நேர்மைக்கு நிழலிருப்பதில்லை
எல்லாவற்றையும் பறித்து
அகதி முத்திரை குத்தினார்கள்
ஒன்றை மட்டும் தானே கேட்டோம்
உயிரை ஏன் பற்ற வைத்தார்கள்

சமாதானம் பேசிய நானும்
சமரசம் செய்யாத நீயும்
ஒரே வரிசையில் நிற்கிறோம்
நாம் என உருவாக்க முடியாத
பிச்சைப்பாத்திரம் ஏந்தியபடி
இருந்தும் இருவருக்கும்
பசி வயிறு ஒன்றல்லவா ?

00

முளைத்துக் கிளைத்த வாசலின் முன்
நின்று நனைகிறேன்
விழுதுகளை உலர்த்தின மௌன நதி
சின்னஞ்சிறு கிளையில்
தங்கியிருந்த ஒற்றை மழைத்துளி
நதியோர வளைவில்
காற்றின் சிறகெடுத்துப் பறந்தது
சரிந்த அந்தியின் உதட்டில்
இன்னொரு துளி
குமிழி உடைத்துச் சிதறியது
அதன் நீளமான குரல்
உப்புச்சாடிக்குள் உறைந்தது
ஏளனமாய் சிரித்துக் கொண்டே
இன்னொரு துளி
வெம்பாறைக்கிடையில் மறைந்திருந்தது
கிழிந்த வரைபடத்தில்
வண்ணங்கள் நிறம் மாற மாற
சிந்தியபடி இருந்தது
என்னைச் சிதைத்த ஒரு மழை.
ஆயிரம் கடல்கொள் வெளி
அடரும் என் ஆதி மரங்கள்
உதிரும் பல்லாயிரம் பூக்கள்.
அடையாளம் தொலைத்துவிட்டு

மறுபடி மறுபடி
தினமு‌ம் தேடி இந்தக் கிளைக்கு

வருவதில்லை அந்தப் பறவைகள்

00

என் பொறிவானத்தில்
சிறுத்தைகளின்செங்குருதி வாசம்
பிரியங்களை பெட்டியில் அடைத்தன

அம்மாவும்
அவள் அவிபுழுங்கலும்
காய்ந்த முற்றம்
புலுனிகளின் இரைச்சலால்
செவி குடைகின்றன

சகடைக்குண்டு கிழித்த
மலகூடக்கொய்யா
பதுங்குகுழி கட்டிய புளி
மறுபடி மறுபடி எழுதிக் குலுங்கும்

பாதைவேலி வடலிகள்
முழு வலிகளையும் தாங்கி
இப்போது கல்லாய்
தேன்கள்ளு நிறைமுட்டிகளாய்
அன்பை முகிழ்க்கும்

பூவரசு வேலியை
அயலுறவு பேணி இடையில்
வைக்கவே இல்லை அப்பா
அத்தனையும் பெண்பனை
அங்குமிங்குமாக கனிந்துமிழும்

இதற்கு முன்
சாம்பல் பூத்த முகத்துடன்
என்னூருக்கு
சூரியன் வந்ததே இல்லை
வாழும் நிமிஷங்களை
பூமியில் பரப்பி
வண்ணத்தை புட்டிகளில்
நிரப்பினோம்

புத்தன் பிண உடலோடு
புணர்ந்த தடயங்கள்
பூமிக்கடியிலும்
இறுகக் கட்டப்பட்ட
வரலாற்றுக் கற்பிதம்

கள்ளத்தனமாகக் கூட
ஏற்றி வரமுடியவில்லை
என் மண்ணின்
அடிவயிற்றுக் கதகதப்பையும்
என் சூல்ப்பைக் குஞ்சுகளையும்

- தமிழ் உதயா, லண்டன்