poor people in rain

சாரல்...
தூறல்...
மழை...
அடைமழை...
என வளர்ந்து கொண்டிருக்கிறது மழை,

மகள் காகிதக் கப்பல் செய்து கொண்டிருக்கிறாள்,
மகன் சிறகு விரித்து மழையோடிருக்கிறான்,
மனைவி காலிப்பாத்திர வலைகளோடு
மழை பிடித்துக் கொண்டிருக்கிறாள்...

ஒரே மழைதான்...
அவரவருக்கென்று தனித்தனியே
பெய்து கொண்டிருக்கிறது...

குகையிலிருந்து முன்பொரு காலமே
வீடு திரும்பிட்ட என் சமூகம்
இப்படி மழையோடிருக்க...

அம்மழை வளர வளர
குகைகளுமற்ற ஒரு சமூகம்
நனையாது இருப்பதாகவே நினைத்து
ஓர் உணவுத்தட்டின் கீழ்
நனைந்து கொண்டிருக்கிறது...

- இரா.ரவிக்குமார்