lady indianஊறவைத்த புண்ணாக்கை 
கழனித் தொட்டியில் கரைத்தபடியே 
கருவைமுள் ஒடித்துக் கட்டுபவளிடம் 
கல்யாணப்பரிசு கதை சொன்னதும் 
பத்துரூபாய் தீபாவளி வரிசை 
வைக்கவே முறைக்கும் அண்ணனிடமும் 
பாசத்தை ஊறவைத்த 
பாசமலர் அனுபவங்களும் 
பேன்பார்த்தபடியே பேசிக்கொண்ட 
வேட்டைக்காரன் கதையும் 
வண்ணப்படங்களின் வரலாறு தொடங்கியதும் 
நிறங்களின் பெயர் சொல்லக் கற்றதும் 
வெல்வெட் ரவிக்கையும் 
எம்ப்ராய்டரி சேலையும் 
ஆசைக்கனவுகளின் அஸ்திவாரமானதும் 
கதாபாத்திரங்களின் பேர்கொண்ட 
பிள்ளைகளும் 
நாயக நாயகியர் பித்துக்கு
வடிவான பிள்ளைகளும் 
அருள்வந்து ஆடியதும் 
ஆடு காண ஓடியதும் 
எல்லாம் சேர்ந்ததே எம் மங்கையர் வாழ்க்கை

நடவு வயலில் விழும் வசவுக்கு மத்தியில் 
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் 
சரோஜாதேவி துணையிருக்க 
உதைக்கும் கணவனை 
அடித்துத் திருத்த 
என்றாவது எம்சியாரு வருவார் 
என்பதே அஞ்சலாட்சியின் நம்பிக்கை

கன்னத்தில் போட்டுக்கொண்டபடி 
கந்தன் கருணை பார்க்கும் 
பரமு வேலை காரணமாக 
முதல் ஆட்டம் போக முடியாவிட்டால் 
இரண்டாம் காட்சிக்கு இடையூறு 
வரக்கூடாதே என்று 
சேர்த்தே வேண்டுவாள்

ரத்தக்கண்ணீர் போலக் கலங்கி 
காலில் விழப்போகிற 
என்ற வயிறார்ந்த சாபம் முடித்து 
சிறுவாட்டில் கொஞ்சம் வீசிக் 
கணவனைத் துரத்திய கையோடு 
வேடிக்கை பார்த்த தெருவே வியக்கும்படி 
மதியக்காட்சிக்கு "மனசு சரியில்லே"
என்றபடி விரையும் மதினிமார் உண்டு

கண்ணாம்பாவை, பானுமதியை 
சாவித்திரியை, தேவிகாவை 
விஜயாவை விரும்பிய வீதம் குறையாது 
நாயகர்களை ரசிக்கவும் பேசவும் 
கொண்டிருந்த வழக்கத்தை 
எந்த இயம் என்று அறியவுமில்லை 
வீடு கேட்கவுமில்லை

- உமா மோகன்