இந்த நிகழ்ச்சி நம்மில் இதுவரை நடந்து வந்த நிகழ்ச்சிக்கு மாறானதாகும். இதுவரை நாம் பெண்ணடிமை - மூட நம்பிக்கை - ஜாதி இழிவோடு - விவாகம் - முகூர்த்தம் என்னும் பெயரால் நடத்தி வந்தோம். அதை மாற்றிப் பகுத்தறிவோடு, சுயமரியாதையோடு ஏற்பாடு செய்யப்பட்ட இப்புதிய முறை நிகழ்ச்சியாகும். இதுவரை இருந்த ஆட்சிகள் யாவும் மனு தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியாக இருந்ததால், பகுத்தறிவு - சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகாதிருந்தது. இப்போது அமைந்திருக்கும் ஆட்சியானது தமிழர்கள் - பகுத்தறிவாளர்கள் ஆட்சியானதால் சுயமரியாதைத் திருமணம் இதுவரை நாற்பதாண்டு காலமாக நடைபெற்றதும் இனி நடைபெற இருப்பதும் சட்டப்படிச் செல்லுபடியாகுமென்று சட்டம் இயற்றி இருப்பது பாராட்டுக்குரியதாகும். அதற்கு நாம் முதலில் நன்றி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மனிதன் மிருக பிராயத்திலிருந்தபோது - காட்டு மிராண்டியாக இருந்த காலத்தில் மனிதன் தன் மூர்க்கத்தனத்தைக் காட்டப் பெண்ணை அடக்கியாள, பெண்ணைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது தான் இந்தக் கல்யாணம். புருஷன் - மனைவி தன்மையே தவிர, மனிதன் சுதந்திரமாக இருந்தபோது ஏற்பட்டதல்ல. நம் மதம் பெண்களை அடிமையாக்குவது போல, நம் கடவுளும் பெண்களை அடிமையாக்குவதாகவே இருக்கிறது. நம் இலக்கியங்கள் புராணங்கள் எல்லாம் அப்படித்தான் பெண்ணடிமையை நிலைநிறுத்தக் கூடியதாக இருக்கிறது. உயர்ந்த இலக்கியம் என்று சொல்லப்படுகிற வள்ளுவனின் குறளும் பெண்ணடிமையை வலியுறுத்துவதாக இருக்கிறது. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகத்திலேயே நாகரிகமடைந்த விஞ்ஞானத்தில் உயர்ந்த நாடுகளும் பெண்களை அடிமைகளாகவே கருதுகின்றன. துலுக்கன், கடவுள் ஆணையும் பெண்ணையும் ஒன்றாகத் தான் படைத்தான் என்று சொல்வார்களே தவிர, பெண்களுக்கு உறை போட்டு மூடி வைத்துக் கொள்வான். வெள்ளைக்காரன் மிகச் சிறந்த விஞ்ஞான அதிசய - அற்புதங்களைக் கண்டுபிடித்தாலும், பெண் விஷயத்தில் அப்படித்தான். கல்யாணமானால் பெண் பெயரையே சொல்ல மாட்டான். மிஸ்ஸஸ் வில்சன், மிஸ்ஸஸ் ராபர்ட் என்று ஆண் பெயரைப் போட்டுத்தான் அழைப்பான். உலகமே பெண்களை அடிமையாக்கித் தான் வைத்திருக்கின்றது. நான் தான் இந்தப் பெண்ணடிமை ஒழிய வேண்டுமென்று 40-வருடங்களாகப் போராடி வருகிறேன்.

நமக்கிருக்கிற - நமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற மதம், சாஸ்திரம், புராணம், நீதி எல்லாம் மனிதனை முட்டாளாக்குவதாகவே இருக்கின்றன. இவையெல்லாம் ஒழிக்கப்பட்டால் தான் நம் மக்கள் அறிவு பெற முடியும். மனித சமுதாயத்தில் யாருக்கு உரிமை கொடுத்தான் என்றால் பொட்டுக் கட்டிய தேவடியாளுக்குத்தான் உரிமை கொடுத்தான். சுதந்திரம் கொடுத்தான். அவள் தான் தன் இஷ்டப்படி சுதந்திரத்தோடு நடந்து கொள்ள முடியும். மற்றவள் வீட்டிற்குள் தான் கிடக்க வேண்டும். வெளியே வரக் கூடாது. ஜன்னல் பக்கம், கதவுப் பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு செய்து பெண்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக்கி விட்டார்கள்.

இந்த ஆண்கள் நாங்கள் தோன்றுகிறவரை அவன் இஷ்டப்படி எத்தனைப் பெண்கள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என்று தானே இருந்தது. நாங்கள் தோன்றிய பின் தானே ஒருவன் ஒருத்தியைத் தான் கட்டிக் கொள்ள வேண்டும். அவள் உயிரோடு இருக்கும் போது வேறு ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது. அப்படிச் செய்வது சட்டப்படிக் குற்றமாக்கப்பட்ட பின் தானே ஆண் ஒருத்தியோடு இருக்கிறான். இல்லாவிட்டால் கிருஷ்ண பரமாத்மா மாதிரி அவனிஷ்டத்திற்கு எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்வானே?

பெண்களுக்கு நகை போடுவது, அவர்களை அடிமைகளாகவேயாகும். இதை 40- வருடங்களுக்கு முன்பே நான் சொல்லி இருக்கின்றேன். இதே கருத்தை இன்று ஒரு வெள்ளைக்காரன் சொல்லியிருக்கிறான்.

ஜாதகம் - ஜோசியம் - பொருத்தம் - நாள் - நட்சத்திரம் - நேரம் - காலம் லக்கணம் எல்லாம் மனிதனை முட்டாளாக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டவையாகும். இவற்றுக்கும் மனித வாழ்விற்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது என்பதோடு, இவற்றால் எந்தப் பலனும் இல்லை. இவற்றையெல்லாம் மனிதன் கடைப்பிடிக்க வேண்டுமென்பதற்காகவென்றே ஏற்பாடு செய்யப்பட்ட இராமாயணம் - பாரதம் - சிப்பதிகாரம் - பெரிய புராணம் முதலியவற்றில் காணப்படும் பாத்திரங்களின் திருமணம் யாவும் நேரம், காலம், பொருத்தம், ஜாதகம், ஜோசியம் யாவும் வசிஷ்டன், வியாசன் போன்ற ரிஷிகளால் பார்க்கப்பட்டு நாள் குறிப்பிடப்பட்டு அந்த நாளில் - அந்த நேரத்தில், முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள் முன்நிலையில் கூட நடந்ததாக எழுதி இருக்கின்றான். அப்படி நடைபெற்றதாக எழுதிவிட்டுப் பிறகு சீதையை இன்னொருவன் தூக்கிக் கொண்டு போய்ச் சினையாக்கி நான்கு மாத கர்ப்பத்தோடு வந்தாள். அவள் புருஷன் ராமன் அவளைக்  காட்டிற்கு அனுப்பி விட்டான் என்றும், ஒருவனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கப்பட்ட திரவுபதை அய்ந்து பேருக்கு வைப்பாட்டியாக இருந்தும், திருப்தியடையாமல் ஆறாவதாக ஒருவனை நினைத்தாள் என்றும், திருமண மேடையிலே தன் மனைவியைத் தவிக்க விட்டுவிட்டு கோவலன் மாதவியோடு சென்றான், அதற்காக இவள் தன் வீட்டுப் பொருளையெல்லாம் நகைகளையெல்லாம் தன் கணவனிடம் கொடுத்து விட்டு இவள் சோறு தின்னாமல், பாயில் படுக்காமல், கூந்தல் முடிக்காமல் இருந்தாள் என்றும், தன் கணவன் பட்ட கடனுக்காக இன்னொருவனிடம் அடைமானமாக வைக்கப்பட்டுச் சந்திரமதி கஷ்டப்பட்டாள் என்றும், தான் மோட்சத்திற்குப் போவதற்காக தன் மனைவியைப் பரதேசிப் பார்ப்பானோடு அனுப்பி வைத்தான் என்றும் எழுதி வைத்திருக்கின்றான். இவை யாவும் நடந்தவை என்று நான் சொல்லவில்லை. நம் காட்டுமிராண்டித் தன்மையையும், முட்டாள்தனத்தையும் நிலைநிறுத்துவதற்கென்று கட்டப்பட்ட சப்பைக்கட்டுகளே இவை. ஜாதகம், ஜோசியம், பொருத்தம், நேரம், காலமெல்லாம் முட்டாள்தனமானவை என்பதையே அதை நிலை நிறுத்துவதற்காக எழுதப்பட்டவற்றிலிருந்து தெரிகிறது.

பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டுமானால் நன்றாகப் படிக்க வேண்டும். தாய்மார்கள் தங்கள் பெண்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கையை நடத்தக் கூடிய அளவிற்கு ஊதியம் பெறும்படியான அளவிற்குப் படிக்க வைக்க வேண்டும். அல்லது அவர்கள் வாழ்விற்கேற்ற தொழிலைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களுக்குத் தாங்கள் அடிமை ஜீவன் என்கின்ற எண்ணம் மாறி சுதந்திர ஜீவன் என்கின்ற எண்ணம் வரவேண்டும். மனித ஜீவனின் தன்மையின் காரணமாக சமூதாயத்திற்குப் பயனில்லாமலே, பலன் எதுவுமில்லாமலே போய்விட்டது.

தமிழனுக்கு இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி இருந்தது என்றோ, தமிழன் புருஷன் பெண்டாட்டியாக வாழ்ந்தான் என்றோ சொல்ல முடியாது. இந்நிகழ்ச்சியினைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொல் தமிழில் இல்லை. வடமொழியிலிருக்கிற கல்யாணம் - விவாகம் - முகூர்த்தம் - தாராமுகூர்த்தம் என்கின்ற சொற்கள் கூட இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடும் சொற்கள் அல்ல. திருமணம் என்ற சொல்லானது 1938- இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பின் போது தமிழின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தால் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட சொல்லே தவிர, இது கூட இந்நிகழ்ச்சியினைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய பொருள் சொல் அல்ல. பின் தமிழன் எப்படி வாழ்ந்தானென்றால், ஆணும், பெண்ணும் தாங்களாக விரும்பிக் கூடி காதலர்களாக, அன்பர்களாக, நண்பர்களாக ஒருவருக்கொருவர் எஜமான் - அடிமை என்கின்ற பேதமின்றி சம அந்தஸ்துள்ளவர்களாகவே வாழ்க்கை நடத்தியிருக்கின்றனர்.

இறுதியாக மணமக்களுக்குச் சில வார்த்தைகள் சொல்கிறேன். நீங்கள் அடக்கமாகப் பிழையுங்கள். கியாதியாக (புகழுடன்) வாழுங்கள். ஆடம்பரமாக இருக்காதீர்கள். வரவிருக்குள் அடங்கிச் செலவிட பழகுங்கள். அதுதான் "பத்தினித்தனம்." வாழ்க்கை நமக்கு மட்டுமல்ல என்பதை உணர்ந்து மனித சமுதாய வளர்ச்சிக்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள். நம் இனத்தைச் சேர்ந்தவன் யாராக இருந்தாலும் அவனைச் சகோதரனைப் போலக் கருதுங்கள். கூடிய வரை பிள்ளைப் பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய பெற்றுக் கொண்டு வாழ்வு முழுவதும் அதைக் பற்றிய கவலைப்பட்டுக் கொண்டிருக்காம் ஒன்று மிஞ்சினால் இரண்டு அதற்கு மேல் பெறாமல் நிறுத்திக் கொள்ளுங்கள். அதனால் நம் கவலை குறைவதோடு மக்கள் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நன்மையுமாகும்.

- 08.07.1968 அன்று நடைபெற்ற தொல்காப்பியன் - இராசாமணி, நெடுஞ்செழியன் - கல்கி ஆகியோர் திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. (விடுதலை 10.08.1968)

Pin It