கானகத்தின் இருள் ஆழதூரத்தில்
ஒற்றை மலரைக்
கண்டறிந்து விடுவதென் நோக்கமாக
இருந்திருக்கலாம்.
நுழைந்து உட்புகுந்து
நடக்கையில்
அதுவரையிலான
வரைபடங்களைச் செலவழித்தாக வேண்டிய
தேவை நிமித்தம்
பயமுறுத்துவதாயிருந்தது.
வீடுதிரும்பாக் கானகத்தின்
காலகாலங்களை
பிடுங்கிக் கொள்ளும்
பெயரற்ற விழுதுகளின்
கைகளில்
வழிக்குறிப்புகளை
தந்தபடியே
மொழியறியா மௌனத்தின்
இடையொலிகளை முணுமுணுக்கிறேன்.
கடந்து நடக்கையில்
கூடவே வரும் எனதான
ஆதிநிழல் தன்னை
வேறு வேறு வேடங்களுக்குள்
மறைத்துக் கொள்வதை
உணர்ந்த படியே.
சடலங்களின் ஈரப்பதத்தை
உறிஞ்சிய பட்டைகளை
அடிக்கடி உரித்தெறிவதன் மூலம்
பழிதீர்க்கவே செய்கின்றன
மலட்டுத் தருக்கள்.
மேடுபள்ளங்களில்
விலா எலும்புகள்
மனிதனை வென்றுகுவித்த
மிருகங்களின் தாண்டவத்தை
அடையாளப்படுத்தின.
நாற்காலிகளில் அமர்ந்து
பேசித் தீர்க்கலாம்
என அங்கேயும்
ஒரு அறிவிப்பிருந்தது.
வெட்டிஎறியப் பட்ட
முலைகளைக்குவித்து
அதன் மீது ஒரு நாற்காலி
விழுந்து விடாமலிருக்க
உடற்பாகங்கள் தொப்பூழ்கொடிகளால்
சேர்த்துக்கட்டியிருந்தது.
அதே எண்ணுடன்
வேறு முகங்களுக்கு மாறிக்கொள்ளலாம்.
ஆனால் மதம் மாறக்கூடாது
என மதவாதிகளின் விளம்பரம்
ஒன்றை ஆந்தை கெக்கலித்தபடியே
சொல்லிச்சென்றது.
ஒரு கையை வெட்டி
இன்னொரு கையில் பத்திரப் படுத்தி
கொண்ட பிறகு
நான் தேடி வந்த மலரை
ஒரு முறை மட்டும்
நுகரும்
சந்தர்ப்பம் எனக்கு அளிக்கப்பட்டது.
என்னிரு கண்களைப் பிடுங்கிக் கையூட்டாய்
பத்திரம் செய்து கொண்ட அரசுப்ரதிநிதி ஒருவர்
கானகத்தின் வாயில் வரை வந்தென்னை
வழியனுப்பி வைத்தார்.
எனது கோரப்ப்ரதியொன்றாய்
வீடு திரும்பிய என்னை
மாற்றான் எனச்சொல்லி
வெளித்தள்ளிக் கதவுமடைக்கிறாய்
ஒரே ஒரு மலர் கேட்ட நீ.