வால்மீகி, ஒரு ‘அரேபியன் நைட்ஸ்' கதையைப் போல்தான் ராமனுடைய கதை யையும் பாடி இருக்கிறார். தசரதனுடைய குடும்பத்தை ஒரு சாதாரண குடும்பமாகத்தான் குறிப்பிட்டுள்ளார். தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு, கர்ப்ப காலத்தில் அவனைக் காட்டிற்கு கொண்டு போய் விட்டு விட்டு வருவது போன்ற – அதாவது, சாதாரண மனிதன்கூட வெட்கம் கொள்ளக் கூடியதான பல சேதிகளை அவர் கொடுத்துள்ளார்.  

periyar_389_copyதிருவள்ளுவர் கூறியுள்ள கருத்துகளுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத – வெறுக்க முடியாத கருத்துகளை அமைத்துதான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள்.

அன்பர் கலியாணசுந்தரனார் திராவிட நாடு வேறு; ஆரிய நாடு வேறு; ஆரியப் பண்பு வேறு என்று தெரிவித்தது போல் திராவிட நூல் வேறு; ஆரிய நூல் வேறுதான். திராவிடர்கள், எப்போதுமே ஆரியர்களை – ஆரிய கலாச்சாரத்தை வெறுத்தே வந்திருக்கிறார்கள். திராவிட நாட்டை ஆரியர்களின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றப் பெரிதும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். இதனுண்மையைக் கந்தபுராண ஆரம்பத்தில் காணலாம்.

சிவபெருமானுடைய கலியாணத்தின்போது தேவர்களும், ரிஷிகளும் வந்து தென்னாடு உயர்ந்து விட்டதென்றும், அதற்குப் பரிகாரம் உடனடியாகச் செய்யப்பட வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்கிறார்கள். இதிலிருந்து தென்னாட்டினர் உயர்வு, ஆரியர்களால் எவ்வளவு வெறுக்கப்பட்டது என்பது இனிது புலனாகிறது. சிவன் யார் கெட்டிக்காரன் என்று ஆலோசித்துப் பார்த்து – அகத்தியனை அனுப்பியிருக்கிறார் பரிகாரம் செய்ய. மிக மட்டமான – அதாவது சூழ்ச்சியில், தந்திரத்தில் வஞ்சகத்தில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பி வைக்கிறார்.

அவன் விந்திய மலையருகில் வரவும் அங்கு காவல் செய்து வந்த வாதாபியும், வில்வலனும் அவனைத் தடுத்து விடுகிறார்கள். அவர்கள் கந்தபுராணத்தில் சித்தரிக்கப்படுகிற சூரனுடைய தங்கையின் மக்கள் ஆவார்கள். அவர்கள் வடநாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர்களைக் கொன்று தின்று விடுகிறதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியே அகத்தியனையும் தின்றுவிட்டதாகவும் – ஆனால், அவனை ஜீரணம் செய்ய முடியவில்லையென்றும், அவனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு அகத்தியன் வெளிப்பட்டுச் சென்றான் என்றும், அவ்வாறு சென்று தமிழ் வளர்த்தான் என்றும் வர்ணிக்கப்படுகிறது. 

இந்தத் தமிழ்ப் புலவர்களும் ஆராய்ந்தறியாமல், அதையொட்டி, ‘அகத்தியன் வளர்த்த தமிழ்' என்று புகழ் பாடி விட்டனர். அகத்தியன் இங்கு வந்து, பாதிரிகள் போல் தமிழ் கற்று, நமது தர்மங்களை – ஒழுக்கங்களை மாற்றியமைத்து இருக்கக்கூடும். இதற்கு அவனுக்கு நன்றி காட்டும் அவ்வளவு நன்றியுடையவர்கள், நமது மடப் புலவர்கள்! நாய் நன்றி காட்டுவதெல்லாம் அன்னியனிடத்துத்தான் என்பதுபோல், பழங்காலத்து அப்பண்டிதர்களும் அன்னிய அகத்தியனுக்கே மரியாதை செய்துவிட்டனர். அந்த அகத்தியன் முதலில், தமிழ் நாட்டிலிருந்து ராவணனைத் துரத்திவிட்டதாக வேறு காணப்படுகிறது. இதற்கும் – ராவணனுடைய தம்பிக்கு ராமன் பட்டம் வாங்கிக் கொடுத்ததற்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இக்கதைகளெல்லாம் ‘அபிதான சிந்தாமணி'யில் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படித்துப் பாருங்கள்! அப்போது தெரியும் – ஆரியர் திராவிடர் போராட்டம் எப்போது, ஏன் துவங்கியது என்று!

இப்போது எப்படி சில திராவிடர்கள் – அறிவிழந்து ஆரிய வடவர்களையே தமது அரசியல் தலைவர்கள் என்று கொண்டு, தாம் பணியாற்றும் வகையில் ஏனைய திராவிடர்களையும், எப்படி அவர்களை நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றனரோ, அதுபோல் வால்மீகி காலத்திலும் சில திராவிடர்கள் இருந்திருப்பதை நாம் அவரது ராமாயணத்தைப் படிப்பதன் மூலம் நன்கு அறியலாம். வாலி கொல்லப்பட்ட பிறகு, விபீஷணனைக் கொண்டு வந்து அனுமார் சேர்க்கிறார். அப்போது சுக்ரீவன் கேட்கிறான், ‘அண்ணனுக்கே துரோகம் செய்யும் இவன் – நாளை உனக்கு மட்டும் துரோகம் செய்ய மாட்டான் என்று எப்படி நம்புவது?' என்று. அதற்கு ராமன் என்ன சொல்லுகிறான் பாருங்கள்.

‘என் லட்சியத்திற்கு அதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராவணன் தோல்விதானே – அவனது முடிவுதானே எனக்கு வேண்டியது! அதற்கு உதவி செய்யத் தகுந்தவன் யாராக இருந்தால் – எப்படிப்பட்டவனாக இருந்தால் என்ன? அவனை நண்பனாகக் கொள்ள வேண்டியதுதானே! அண்ணன் செத்தால்தானே அவனுக்கு ராஜ்யம் வரும்? ஆதலால், தனது அண்ணனை ஒழிக்க நமக்கு வழி கூறி உதவி செய்துதானே தீருவான்? இந்த விஷயத்தில் அவன் நமக்கு துரோகம் செய்ய முடியாதே! அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்குச் செய்ய முடியும்? இவனை விட்டால் ராவணனை எமக்குக் காட்டிக் கொடுக்கக்கூடிய வேறு ஆள் ஏது?' என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக் கொள்கிறான்.

– தொடரும்

விடுதலை – 5.11.1948

Pin It