சிறுவர்கள் மொய்த்திருந்த மலைகளில்
அந்த இலைகள் பச்சை நிறமாக மரங்களோடிருந்திருக்கும்
அந்தக் குடில்கள் கனவுகள் நிரப்பட்டிருக்கும்
கனவு நிலத்தில் அந்த சிறுவர்களின் குருதி பிறண்டிருக்கிறது
தோழி நீ எண்ணுவதைப்போல
சந்து ஒரு நாள் துப்பாக்கிளால் கொல்லப்படலாம்
இந்தக் காடுகளுக்காகவும்
காடுகளில் வேரோடியிருக்கும் பழங்குடிகளுக்காகவும்
அவன் ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறான்.

கனவுகளோடலையும் அந்தப் போராளிகள்
கேட்கும் பச்சை செழுமையை
தின்பற்காய் முதலைகள் பருத்து திரிகின்றன
புழுதி மூடி புகையால் நனைந்து சிவப்பாக்கிய சிறுவர்கள்
மலைகளின்மீது ஏறி துப்பாக்கிகளை கொண்டு செல்லுகின்றனர்
மாபெரும் புண்ணாகிக் கிடக்கிறது குடிகளின் நிலம்.

மலைப் பாறைகளின் படுக்கைகளுக்கும்
இலைகளின் குளிர்ந்த நிழலுக்கும்
அகழ்ந்து அழிக்கப்படாத நிலத்தின் வாசனைக்கும்
இவர்கள் போராடுகின்றனர்
இந்தக் காடுகள் அமைதியான இரவில்
அல்லது வெயில் கொதிக்கும் பகலில்
சிறுவர்களின் இரத்தத்தினால் நனைகின்றன.
இரத்தம் பிறண்டு காடுகளுக்குள் சிறுவர்கள் மேலும் நுழைய
திரவியங்களுடன் பெருந்தலைகள் திரும்புகின்றன.

(மாவோயிஸ்ட் போராளிகளுக்காக)

- தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)