ஒத்தை வழிப்போற
பொண்ணு புள்ளைகள காக்கும்!
ஓங்குன அரிவாளோட
திருட்டுப்பயம் போக்கும்!

ஊர் ஓரத்துல நிக்கும்
அய்யனார்சாமி!

எல்லோருக்கும்-
வழி விடும் விநாயகர்
வழியை மறிச்சு நிற்பார்
மாநகரின்
குறுகிய சாலைகளில்!

வரைமுறை இல்லாம
வளர்ந்த செல்வம்
முட்டுச்சந்தாக
முளைச்சு நிக்கும்!

ஆட்சியை தம்பிக்கு
விட்டுக்கொடுத்த இராம பிரான்
ஆயுதங்களோடு வருகிறார்!

வனங்களில் மட்டுமே
வசிக்கத் தகுதியான
ஆதி மனிதர்களுடன்!
இரத்த யாத்திரைக்கு
தலைமை வகிக்கிறார்
ஆட்சியைப் பிடிக்க!

கறுப்பு பணம் தின்னும்
கார்ப்பரேட் சாமிகள்!
ஆனந்தக் கூத்தாடும்
நித்யானந்த தரிசனங்கள்!

ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும்
எதிரான பெரியார்
மெல்ல மெல்ல
கள்வர்களின் கவசமாகிறார்!

கொள்கை வியாபாரத்தில்
கொலைகாரர்கள்
கருணை மிக்கவர்களாக
காட்சித் தருகிறார்கள்!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)