arunthathiyar_500
அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டக் குழுவின் முதல் மாநாடு, ஈரோட்டில் மே, 9 அன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. மறைக்கப்பட்ட அருந்ததியர் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் "அருந்ததியர் வரலாறு மீட்புக் கருத்தரங்கமும்” நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா, தொடக்க உரை நிகழ்த்தினார். “முஸ்லிம்களின் நிலை போன்றே அருந்ததியர் நிலையும் பின்தங்கியே உள்ளது. தலித் மற்றும் பழங்குடியினருக்கான 18 சதவிகித இடஒதுக்கீட்டில் 25 சதவிகிதம்கூட, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அருந்ததியர்களுக்கு கிடைக்கவில்லை. உள்ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்டியபோது, த.மு.மு.க. உள்ஒதுக்கீடு வேண்டும் என உறுதியாகக் கூறியது. அருந்ததிய மக்கள் எங்கள் தொப்புள் கொடி உறவு. விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு போன்றே அருந்ததியரின் பங்கும் மகத்தானது. ஆனால் அவர்களின் போராட்டம், வரலாற்றுப் புத்தகத்தின் அடிக்குறிப்பில்கூட இல்லை. சரியான வரலாற்றை மீட்டெடுப்பதில் உங்களுடன் த.மு.மு.க. துணை நிற்கும்'' என்றார்.

தலைமையுரை நிகழ்த்திய அருந்ததியர் உள்ஒதுக்கீடு போராட்டக் குழுவின் தலைவர் மதிவண்ணன், “வரலாறு எழுதும் பழக்கம் நம் சமூகத்தில் கிடையாது, இந்தியா பற்றிய குறிப்புகளை சீனப் பயணிகளான யுவான் சுவாங், பாஹியான் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளில் இருந்துதான் பெற முடிகிறது. இதனைப் போன்றே இந்தியா வந்த வெள்ளையர்கள் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் இந்திய வரலாறை எழுதத் தொடங்கினர். இவ்வாறு வரலாறு எழுதியவர்கள் வரலாற்று அறிஞர்கள் அல்லது அரசு அதிகாரத்தில் பங்கு வகித்த நபர்களிடம் கேட்டே வரலாற்றை எழுதினர்.

“கட்டபொம்மன் திரைப்படத்தில் அருந்ததியர் பங்கு பற்றி என்ன காட்டினார்கள்? வீரபாண்டிய கட்டபொம்மனோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய அருந்ததியர் வரலாற்றைப் பற்றி சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் மறைத்து விட்டனர். கட்டபொம்மனுக்கு சிலை உண்டு. ஆனால் அருந்ததியருக்கு சிலை இல்லை.'' வரலாற்று ஆய்வறிஞரான ஆ. சிவசுப்ரமணியன், “இந்திய வரலாறு பழங்கால இந்தியா, மத்திய கால இந்தியா, நவீன கால இந்தியா என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் பழங்கால இந்தியாவை "இந்து ஆட்சி' என்றும், மத்திய இந்தியாவை "இஸ்லாமிய ஆட்சி' என்றும் பிரிட்டிஷ் கால ஆட்சியை "நவீன கால இந்தியா' என்றும் கூறுவார்கள். இந்துக்களின் ஆட்சி பொற்காலம் என்றும், அதை வீழ்த்தியதே இஸ்லாமிய ஆட்சி என்றும், வரலாற்றில் தவறாக எழுதி வைக்கப்பட்டுள்ளது.

“இடஒதுக்கீடு என்பது சமகாலப் பிரச்சனை. வரலாற்றில் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கதை உண்டு. இதில் அருந்ததியர்களும் அடக்கம். முத்துப்பட்டன், மதுரை வீரன் கதைகளில் மறைக்கப்பட்ட வரலாறே அதிகம். ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்தே வரலாற்றை தொடங்க வேண்டும். மதுரை வீரன், ஒண்டிவீரன் ஆகியோரைத் தாண்டி மறைக்கப்பட்டுள்ள அருந்ததிய வரலாற்று நாயகர்களைத் தோண்டி எடுக்க வேண்டும் ''என்றார் சிவசுப்ரமணியன்.

 

Pin It