இது அரசியல் பற்றிய ‘வெறுவாய்’ அரசியல் அல்ல; அரசியல் ஆளுமை பற்றிய நறுவிசான தோலுரிப்பு. இதன் கணுக்கள் தேர்தல் வெளிச்சத்தில் வலிமை பெற்றாலும் தேர்தல் முடிவுகளை அளவீடாகக் கொண்டதில்லை. இது எழுத்தைப் பற்றிய மதிப்பீடாகவும் எழுதியவரைப் பற்றிய மதிப்பீடாகவும் திராவிடக் கட்சிகளின் தகவமைப்பில் பொருள் தேடுகிறது. ஒரு மரத்தின் கடைசிக் கொழுந்தை மரத்தின் தொடர் விளைவாகவே மதிப்பீடு செய்கிறது.

 வைகோவின் ‘சிறையில் விரிந்த மடல்கள்’ என்னும் நூலை கவிஞர் சுதா முருகேசன் எனக்குப் படிக்கக் கொடுத்தார். அந்த நண்பருக்கு வைகோவின் ஆரவாரம் பிடிக்கும். கலைஞர் கருணாநிதியையும் சில விமர்சனங்களோடு பிடிக்கும். கருணாநிதியின் ஏகபோக அரசியல் பற்றிப் பேச்சு வரும்போது அவர்மீது சாய்மானம் உள்ளவர்கள் அனைவரும் படும் அல்லல் அது. ஆனால் அவர்கள் உண்மையில் முனைந்தால் உலகளாவிய அதிகார அரசியலை மேற்கோள் காட்டித் தங்கள் அல்லலுக்கு மருந்து கண்டுபிடிக்கலாம். இந்தக் காலத்தில் வாழ்ந்துகொண்டு செத்த காலத்தின் பொதுவாழ்வுச் சூத்திரங்களைச் சுமந்து திரிவதன் சுகம் தந்த அல்லல் அது.

புத்தகத்தைப் படித்து முடித்ததும் நண்பரிடம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். அடுத்த சில நாட்களில் வைகோ ஒரு ‘மகத்தான’ அரசியல் அணிமாற்றத்தை நிகழ்த்திக் காட்டியதும், அவசர அவசரமாக அதை மீண்டும் வாசிக்க வேண்டும் என்று சொல்லித் திரும்ப வாங்கிக் கொண்டேன்.

புத்தகத்தை மீண்டும் படிக்க வேண்டும் என்றது வெளிப்படையாகச் சொல்லப்பட்ட ஒரு காரணம். ஆனால் உண்மைக் காரணம் சற்று விசித்திரமானது. வைகோவின் மேல் ‘தமிழ்வெளி’யிலிருந்து சிறுகச் சிறுக மிதந்து வந்து என் மனச் சிமிழுக்குள் சேகரமான ஈர்ப்பின் காரணமாக எனக்கொரு மனப்பிராந்தி ஏற்பட்டுவிட்டது. எங்கே, புத்தகத்தின் விலையான 500 ரூபாய்க்குப் பதிலாக 1000 ரூபாய் கொடுத்தேனும், விற்றுத் தீர்ந்த படிகளையெல்லாம் தேடிப்பிடித்துத் திருப்பி வாங்கி, விற்காத படிகள் இருப்பின் அவற்றையும் சேர்த்துப் போட்டு எரித்து விடுவாரோ என்றொரு அச்சம் ஏற்பட்டுவிட்டது. அதனால் இந்த ஒரு படியையாவது காப்பாற்றலாமே என்றுதான் வாங்கி வைத்துக் கொண்டேன். ஆனால் நான் அஞ்சியபடி ஒன்றும் நடக்கவில்லை. உண்மையில் அது என் மிகையான மனப்பிராந்திதான் என்பதும் தெளிவாகிவிட்டது.

இதைப்பற்றி வைகோவின் கேள்விக்கப்பாற்பட்ட தொண்டர் என்று கருதப்பட்ட ஒருவரிடம் மனந்திறந்து பேசினேன். பேசிய பிறகுதான் தெரிந்தது அவர் வைகோவை விட்டு விலகித் தன் சுயமதிப்பீட்டில் காலூன்றி நிற்கிறார் என்ற விஷயம். பொதுவாக தொண்டர்களிடம் காணக்கிடைக்காத பண்பு இது. தொண்டர்கள் எப்போதும் தலைவர்களைச் சார்ந்தே நிற்பார்கள். வில்லங்கம் நேரும்போது வைகோவைப் போலத் தலைமையை மாற்றிக் கொள்வார்களே தவிர தனித்து நின்று தடுமாறுவதில்லை. நான் பேச்சுக் கொடுத்த நண்பர் வெறும் தொண்டர் மட்டுமல்லாமல் சுயசிந்தனை உள்ளவராகவும் இருந்தார். அந்தச் சிந்தனையில் கட்சி அரசியல் சக்கரம் பதித்த தடங்கள் இருக்கத்தான் செய்தன. இதுவும்கூட வைகோ அவருக்களித்த கொடையாகவே எடுத்துக் கொள்ளலாம். நான் பேசியதைப் பொறுமையாகச் செவிமடுத்தபோது அவர் எனக்கு ஆறுதல் சொன்னாரா அல்லது தனக்குத்தான் சொல்லிக் கொண்டாரா, தெரியவில்லை. சிறிது மௌனத்திற்குப் பிறகு அவர் கடகடவென்று கொட்டத் தொடங்கினார்:

"வைகோவின் நெத்தியடியான நேர்மை, பளிங்குத் தன்மைமிக்க சத்திய ஆவேசம், புனிதப்படுத்தப்பட்ட தன்மானம் ஆகிய எதனோடும் இந்த நூலுக்கும் அதன் உயிர்நிலைக்கும் ஒரு தொடுப்பும் இல்லை. உயிர்நிலை என்பது வைகோவின் மீது ஜெயலலிதா நிகழ்த்திய அரசியல் வன்கொடுமை. அந்த வன்கொடுமைதான் இந்த புத்தகத்தைப் பெற்றுப் போட்ட பிறப்புறுப்பு. அதைப் பெற்றவரே காரணமற்றுச் சிதைச்சார்னா, அது மோசமான கற்பழிப்புதான். ஆகவே இந்த சகாப்தத்தில் ஒரு புத்தகம் துடிக்கத் துடிக்கக் கற்பழிக்கப்பட்டதுன்னா (அவர் இன்னமும் திராவிடக் கட்சிக்காரர்தான். அந்தக் கட்சிக்காரர்களுக்கு ‘கற்பழிப்பு’ என்னும் சொல், வர காப்பிக்குக் கடித்துக் கொள்ளும் பனங்கருப்பட்டி மாதிரி) அது வைகோவின் இந்தப் புத்தகமாத்தான் இருக்கும். மகளைப் பெண்டாளத் துணியும் அப்பன் மாதிரி அவர். (ரிக் வேதத்தில் தங்கையைப் புணர பற்பல சமாதானங்களைச் சொல்லி சம்மதிக்க வைக்க முயலும் அண்ணனைப் பற்றிப் பாடப்பட்டிருக்கும் விவரம் அறிந்தால் என்ன சொல்வாரோ என்று தோன்றியது.)

ஒரு பத்துப் பதினைந்து வருசமிருக்கும் -ஆனந்த விகடன் குழுமப் பத்திரிகை ஒன்னுல ஒரு உண்மைச் சம்பவம்னு போட்டிருந்ததப் படிச்சேன் சார். ஒரு அப்பன் தன் பொண்ணுகிட்ட "நான் என்ன குடிக்கிறனா, சீட்டாடுறனா, கண்டவளோட ஊர் சுத்துறனா, ஒழுங்கா சம்பாதிக்காதவனா, பொய்ப்பித்தலாட்டக்காரனா? என்னைவிட நல்லவன் உனக்கு எங்க கிடைப்பான்? வீணா பிடிவாதம் பிடிக்காம இணங்கிப்போ”ங்கிறான். அவனைப் பெத்த கிழவி தன் பேத்திகிட்ட "ஒங்கொப்பன் உன்னை நாசம் பண்ணிடுவான், வேற எவனையாவது தேடிக்கிட்டு இங்கிருந்து ஓடிடு”ங்கறா. "அந்தப் பொண்ணு சம்மதிச்சா நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்”னு ரொம்பப் பேர் கடிதம் எழுதினாங்க. அதுல நானும் ஒருத்தன். அந்தக் கேடுகெட்ட உத்தமனுக்கும் இந்த வைக்கோவுக்கும் என்னங்க வித்தியாசம்?”

வைகோவைப் போலவே அவரது தொண்டர்களும் உணர்ச்சிப் பிழம்பாகவே இருக்கின்றனர். வைகோவின் கொடையா அல்லது இதுதான் மற்றவர்களை அவரிடம் கொண்டுவந்து சேர்த்ததா என்று தெரியவில்லை. ஆனால் அவர் இவ்வளவு பதற்றப்படுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மனசுக்கு ஆறுதலாகவும் இருந்தது. தலைவனைக் கேள்வி கேட்கிற தொண்டன் உருவாவது நல்லதுதானே. எனக்குப் பதற்றமொன்றும் இல்லை. ஆனாலும் அதற்கான கூறுகள் இருந்திருக்கும். இல்லையென்றால் அவரிடம் விரிவாகப் பேசத் தோன்றியிருக்காது என்று இப்போது தோன்றுகிறது. பிறந்த குழந்தையைப் பற்றிக் கொள்கிற மண்ணின் சுவாசம்போல, இந்தியன் என்று உணர்கிறவனுக்குப் பார்ப்பன சுவாசமும், திராவிடன் என்னும் சுட்டலில் தன்னடையாளம் கொண்டவனுக்கு திராவிடக் கட்சிகளின் சுவாசமும் அடிநாதமாக ஓடிக் கொண்டிருக்கும்போல. இதைவிட பதற்றமே இல்லாத ஒரு பட்டிக்காட்டு விமர்சனத்தையும் என் காதால் கேட்டேன். அண்மையில் நான் திருநெல்வேலி சென்றிருந்தபோது வழியில் ஒரு பெரிய மனுசி ரிக்ஷாக்காரனிடம் வெகு சவடாலாகச் சொல்லிக் கொண்டு போனாள்: "எல்லாருக்குந்தான் ஆசை அந்தம்மா சாண்டக் குடிக்க. இப்ப இவரு குடிக்காரு. அதுக்கென்னா?”

அரசியல் சுகவாசத்துக்கு வைகோவை வலுவான தெப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த மதிமுகவின் இரண்டாம் நிலை - மூன்றாம் நிலை தலைவர்கள் போக, மற்ற எல்லாருக்குமே - கட்சிக்காரரோ, கட்சிக்கப்பாற்பட்டவரோ – வைகோவின் அணிமாற்றம், செரிக்காமல் வெளியேறும் தேத்தாங் கொட்டையைப் போலத்தான் தொண்டைக்குள் இறங்கியிருந்தது. அந்த அளவுக்கு - வை.கோபால்சாமி என்னும் பெயரை எப்படி சிக்கெனப் பொருந்தும்படி ‘வைகோ’ என்று செதுக்கிக் கொண்டாரோ, அதுபோல தனக்கொரு பிம்பத்தை- ‘நல்ல அரசியல்வாதி’ என்னும் பிம்பத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தார். திராவிடக் கட்சிகளின் அரசியலில் திட்டுத்திட்டாகப் பிசுக்கேறிக் கசகசத்துப்போய், நல்ல காற்றை உள்வாங்கிக் கொள்ளப் பிரியப்பட்ட ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த மாதிரியெல்லாம் நீட்டித்துப் பார்த்துக் கொள்ளக்கூடிய வெகு நம்பிக்கையான பிம்பம் அந்த ‘நல்ல அரசியல்வாதி’. அப்படிப்பட்டதொரு நயமான கட்டுமானம் வெகு கோரமாகச் சிதைந்து போனதன் பதற்றம்தான் அந்த வெடிப்பான விமர்சனங்கள். சிதைந்த பிம்பத்துக்குள்ளே ஆகச் சாமானியமான ஒரு அரசியல்வாதி - திராவிடக் கட்சிகளின் எல்லா பரம்பரை நோய்க்கூறுகளையும் உள்வாங்கிக் கனிந்த ஒரு அரசியல்வாதி இருக்கிறார் என்பதை நம்புவதற்கான நிதானத்தைத் தள்ளிப் போடுகிறவர்களின் பதற்றம் அது.

திராவிடக் கட்சிகளில் அண்ணாதுரையிலிருந்து எல்லாருமே பிம்பக்காரர்கள்தாம். தங்கள் பிம்பங்களை மிகைஒளிக்குள் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகள்தாம் அவர்கள் சூட்டிக்கொண்டுள்ள பட்டப்பெயர்கள். ‘புரட்சிப்புயல்’ வைகோ தன் பிம்பத்தை அசல் போலவே அதிகப் பளபளப்புடன் பேணிக் காத்தவர். அதைச் சேதப்படுத்த சூழ்ந்த பல சந்தர்ப்பங்களிலிருந்தும் தன் ‘அறச்சீற்றத்தால்’ தன்னைத் தற்காத்துக் கொண்டவர். எம்ஜியார் தனக்கொரு ‘ஏழைபங்காளன்’ பிம்பத்தை வடிவமைத்துக் கொண்டு கடைசிவரை அந்த பிம்பமாகவே - தனது பகையழிக்கும் வன்ம வில்லத்தனத்தையும் முடியிழந்த மொட்டைத் தலையையும் பொதுப்புலத்திற்கு காட்சிப்படுத்தாமலே- போய்ச் சேரவில்லையா. அதுபோல வைகோவும் தன் பிம்பத்தையே பிறவிச் சித்திரமாக நீட்டித்திருப்பார் என்று வெகு அசட்டுத்தனமாக எதிர்பார்த்தவர்கள் பலர். அந்த அரசியல் உணர்வுள்ளவர்களின் மிக மோசமான ஏமாற்ற வெளிப்பாடுகள்தாம் அவர்களது எண்ணம் - எழுத்து- பேச்சில் பீறிட்ட விமர்சனங்கள்.

திமுக மீண்டும் மீண்டும் உடைவுகளையும் வெளியேற்றங்களையும் சந்தித்த பிறகும் வலிமையுள்ள முதல்நிலைக் கட்சியாகவே முன்னிலை வகிக்கிறது. உடைவுக்கும் வெளியேற்றத்திற்கும் காரணமாயிருந்த கலைஞர் கருணாநிதியே கட்சியின் மீண்டெழுகிற வலிமையாகவும் இருக்கிறார். அவருக்குப் பிறகு கட்சியானது சொத்துள்ள மடமாகச் சிறுத்துவிடுமா அல்லது சிதைந்துவிடுமா என்று பலரும் புனைந்து கேட்கும் அளவுக்கு கட்சியின் அரசியல் ரீதியான கடைசி வல்லமையாக கலைஞர் தன்னை மாத்திரமே மையப்படுத்திக்கொண்டு தன் வாழ்வின் விளிம்பைத் தொட்டு நிற்கிறார். திமுகவுக்கு இரண்டு சொத்துகள் உள்ளன. ஒன்று திமுகவின் அசையாச் சொத்து - கட்டடங்கள், காசுபணங்களாக. மற்றொன்று அசையும் சொத்து - கட்சித் தொண்டர்களாக. வைகோ இப்போது தனிக் கட்சி நடத்திக்கொண்டிருந்தாலும், கலைஞருக்குப் பிறகு திமுகவின் அசையாச் சொத்தை யார் அனுபவித்தாலும் அதன் அசையும் சொத்து வைகோவின் தலைமையில் திரளக்கூடும் - திரளவேண்டும் என்பதாகப் பலருக்கும் ஒரு மௌனக்கனவு இருந்தது. அந்தக் கனவின் அச்சுறுத்தலால்தான் கருணாநிதியே வைகோவை வெளியேற்றினார். அப்படியும் கலைஞரோடு பகை பாராட்டாமல் அந்தக் கனவுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்த வைகோவே இந்தத் தடவை அதைக் காலால் எத்திக் கலைத்துவிட்டார்.

"இந்தக் கூறுகெட்ட செயலில் தன்னை ஒரு கோமாளியாக அல்லது சூனியக்காரனாகத் தாழ்த்திக் கொண்டுவிட்டார். இதன்மூலம் ஒரு சராசரி மனிதனுக்குரிய நம்பகத் தன்மையைக்கூட அவர் தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டார்”

இதுதான் தேர்தலினூடாகத் தமிழ்வெளியில் பொதுவாக எதிரொலித்த நிராகரிப்பின் மௌனக்குரல். அதிகமாக உயர ஆசைப்படுகிறவர்கள், விழுந்தால் எழ முடியாதபடி அந்த உயரமே முடமாக்கிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் வைகோ எந்த உயரத்துக்கு ஆசைப்பட்டார் என்பது விடையில்லாத கேள்வி.

எல்லோருக்கும்போல எனக்கும் இதில் பாதிப்பும் வருத்தமும் உண்டு. அதனால்தான் இதை எழுதும்படியாகிறது. நான் கட்சிக்காரன் இல்லை என்றாலும், கட்சிக்காரர்களை விட்டு - அதுவும் திராவிடக் கட்சிக்காரர்களை விட்டு என்னால் முற்றும் விலகிச் சென்றுவிட முடியாது. அவர்களோடு நான் எவ்வளவுதான் முரண்பட்டாலும் அவர்கள்தான் என் அடையாளத்தைக் காட்டும் கண்ணாடியாக இருந்தவர்கள். ஒரு இக்கட்டு சூழ்ந்தால் எதிர்காலத்திலும் இருப்பார்கள் என்றொரு நம்பிக்கை. தென்னகத்திலிருந்து தொலைதூர நாடுகளுக்குக் கூலிகளாகக் கடத்தப்பட்டுத் திக்கற்றுப் போய்த் தங்கள் அடையாளங்களைத் தொலைத்தார்களே தமிழர்கள், அப்படியொரு அடையாள அழிப்பு இந்தியாவுக்குள்ளேயே நிறைவேற்றப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்த அச்சம் வரும்போது நான் யாரைப் பற்றிக் கொள்வது? சோ.ராமசாமியையா? சுப்பிரமணியன் சாமியையா? அடையாளம் அழிப்பதே ‘நான் அடிமை’ என என் வாயாலேயே சொல்ல வைக்கத்தானே. இதை முறியடிக்க நினைக்கும்போது கருணாநிதியும் வைகோவும்தானே என் கண்ணுக்குள் வருகிறார்கள். என் அடையாளம் என்பது அவர்களின் அடையாளமும்தான்.

நடைமுறையில் அடையாள அழிப்புக்குத் துணை போகிறவர்களாகவே அவர்கள் அரசியல் நடத்தினாலும் "அடப்போங்கய்யா. நீங்க என் உடன்பொறப்பே இல்லை போ” என்று கத்திச் சண்டைபோடுவதற்கேனும் அவர்கள்தான் என் உடன்பிறப்புகளாய் இருக்கிறார்கள். ஆனாலும் நான் என் சொந்தங்களோடு அந்நியப்படுவது அவர்களின் சிதைவுகளைப் படம் பிடிக்கத்தான். எல்லாருக்கும் எல்லாக் காலத்துக்கும் ஒற்றைக் கோட்பாடு இல்லை என்னும் செயல்பாடே அதை வலியுறுத்துகிறவர்கள் நம்மிடம் காணும் முரண்பாடாகிறது.

தேர்தல் காலம், குதிரைகள் ஓடிய புழுதிக்காடு போல. மலை மலையாய்த் தூசுப்படலம் எழும். தேர்தல் முடிந்து முடிவுகள் தெரிந்த சில நாட்களுள் அந்தப் புழுதி, மழை பொழிந்த நிலம் போல அடங்கிவிடும். அதையும் மீறி சில காயங்கள், சில நியாயங்கள், சில மலினங்கள், சில ஊனங்கள், விபத்தில் சிதைந்த உடல்ரணமாய்ப் பதிவு பெறும். வைகோவின் அணி மாற்றமும், அதற்குப் பின்னான அவர் ஆவேசங்களும், உறவாடல்களும் அத்தகைய விளைவுகளை உண்டாக்குபவை. எதிர்காலத்தில் அதன் சமூகப் பாதிப்பை மறந்தாற்போல நடித்தாலும் மக்கள் மனங்களிலிருந்து அவ்வளவு எளிதாகத் துடைக்க முடியாதவை. இதில் அதிகம் வெளிச்சப்படுவது வைகோவின் ஆளுமை பற்றிய மதிப்பீடு. அவரது நிறம், குணம், மனம் பற்றிய மறு மதிப்பீடு. அடிப்படையில் அவரது தகவமைப்பு பற்றிய புதிய விழிப்புணர்வு.

வைகோவின் அணி மாற்றம் சுயமரியாதை (கண்மூடித்தனமாகத் தலைமைக்குத் துதி பாடத் தொடங்கியதால் திராவிடக் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துவிட்ட மூலக்கூறு?) உள்ள எவரையும் முகஞ்சுளிக்க வைக்கும் என்பதாகத்தான் எனக்குப் படுகிறது. வைகோ முகஞ்சுளிக்கவில்லை எனில் 19 மாத சிறைவாசத்தில் அவருடைய முகத் தசைகள் இறுகிப் போயிருக்கும். ஜெயலலிதாவுடன் அவர் அணி சேர்வது இது முதல் தடவையல்ல. ஆனால் இந்தத் தடவை மனித மாண்புக்குப் பொருந்தாத சூழலில் அது நடந்ததை நம் செல்லப் பிராணிகள்கூட சொல்லிச் சினக்கும். 19 மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். சிறை வாசத்தில் எழுதிய கடிதங்களைத் தொகுத்துப் புத்தகம் தயாரித்திருக்கிறார். புத்தகத்தின் அடிநாதம் ஜெயலலிதா அவருக்கிழைத்த கொடுமை. புத்தகத்தின் பக்கங்களை ஒரு நொடியில் சொற்குப்பைகளாக்கிவிட்டார் அவர். தற்கொலை செய்து கொள்கிறவன்கூட இத்தகைய சுயம்அழித்தலுக்கு சம்மதிக்க மாட்டான். சுயமற்றவனுக்கு வேண்டுமானால் அது சாத்தியமாகலாம்.

அவரைக் கைது செய்த ஆட்சி முடிவுக்கு வந்து, தகுந்த இடைவெளிக்குப் பிறகு இந்த அணி சேர்க்கை நடந்திருந்தால் அது இயல்பாய் இருந்திருக்கும். முறைதலை இல்லாத கூட்டணிகள் என்பது பொதுவான குற்றச்சாட்டாயிருக்குமே தவிர வைகோவுக்கான மாண்பற்ற செயலாகக் கட்டம் கட்டிப் பார்க்கப்பட்டிருக்காது.

"இது கொள்கைக் கூட்டணியல்ல. இடப் பகிர்வுக்கான கூட்டணி” என்றுதான் எல்லாக் கூட்டணிக் கட்சிகளும் சொல்லின. ஆனால் தேர்தல் களத்தில் "ஜெயலலிதா 5 ஆண்டுகளும் நல்லாட்சிதான் நடத்தினார்; அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அவர் ஆட்சியே தொடரப்போகிறது” என்று குடுகுடுப்பைக்காரன் போலக் குறி சொன்னார். தேர்தல் காலத்தில் எல்லாரும் அள்ளிவிடும் ஒலிக்குப்பைகள்தான். ஆனால் வைகோ சொன்னபோது அவரது தன்மானத்தின்மீது அவரே உமிழ்ந்த சொல்லாகிறது. அவர் சிறையில் அடைக்கப்பட்டதை நூறு சதவீதம் நியாயப்படுத்திவிட்டார். ஈழத் தமிழர்களுக்காக அவர் பரிந்து பேசியதை ஈனத்தனமான பயங்கரவாதக் குற்றம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டார். தன்னைத் தண்டித்த ஆட்சியைப்பற்றிய அவரது முந்தைய வாக்குமூலத்தை அப்பட்டமாக மறுதலித்துவிட்டார். குஜராத்தில் ஷேக் ஹஜீரா இப்படி பல்டியடித்ததற்காக சிறைவாசமும் அபராதமும் விதிக்கப்பட்டார். வைகோ மீது அதைவிடக் கொடுமையான பொடா வழக்கே இருக்கிறது. இனி அவர் எதைச் சொல்லி வழக்காடுவார்? தேர்தலுக்காகத்தான் என்றாலும் வைகோ இப்படி தன்னை ஒரு பித்தலாட்டக்காரராக முத்திரை குத்தி கொண்டிருக்க வேண்டியதில்லை.

அவர் தேர்தல் களத்தில் திமுகவைத் தோலுரித்துக் காட்டும் தனிமனிதப் படையாக வலம் வந்தார். கருணாநிதிக்கெதிராகவும், மாறன் குழுமத்திற்கெதிராகவும் கடும் குற்றச்சாட்டுகளைப் புள்ளி விவரங்களோடு அடுக்கடுக்காக அள்ளி வீசினார். அக்குற்றச்சாட்டுகளில் ஒன்றிரண்டு தகவல் பிழைகள், மிகை படல்கள் இருக்கக்கூடும். மற்றபடி அவை அனைத்தும் உண்மை, உண்மை, உண்மை என்று வெகு பாமரத்தனமாக முரசறைந்து சாட்சியம் சொல்லவே தோன்றும். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அவர் ஆற்றிய நற்பணி என்று அவரைப் பாராட்டி மகிழலாம். ஆனால் நமக்கு அது அவ்வளவு எளிதாய் இல்லை. ஏனெனில் அவ்வளவு குற்றச்சாட்டுகளும் ஒரு பித்தலாட்டக்காரரின் வாக்குமூலம். குற்றங்குறைகளைச் சொல்வதற்குக்கூட ஒருவருக்குத் தகுதி வேண்டியுள்ளது. வெளிப்படையாக நிகழும் முறைகேடுகள்கூட நிரூபிக்கப்பட்டால்தான் குற்றங்கள். இல்லையென்றால் அவை பழிதூற்றல்தான். வைகோவைப்போலத் தன்மீதே மரியாதை இல்லாத ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு முகமதிப்பில் எந்த நம்பகத்தன்மையும் இருக்க முடியாது. நிரூபணம் என்று வந்துவிட்டால் தாமதப்படுத்துவதன் மூலமே வழக்கைத் தள்ளுபடி செய்ய வைத்துவிடலாம் என்று ஜெயேந்திரரிலிருந்து எத்தனை பேர் கம்பீரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கருணாநிதிக்கு மட்டும் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடுமா.

சட்ட மன்றத் தேர்தலில் கருணாநிதியிடம் வைகோ கூடுதலாகக் கேட்டது ஒரே ஒரு இடம்தான். அதைக் கொடுத்திருக்கலாம். கொடுத்திருந்தால் அவர் அலம்பல் பண்ணியிருக்க மாட்டார். எல்லாக் குற்றங்களையும் மூடி மறைத்திருப்பார், இல்லையா? தனக்குத் தெரிந்த குற்றங்களை மூடி மறைக்கிறவன் குற்றங்களுக்கு உடந்தையாயிருந்தவன்தானே. தனக்கு உதவாதபோது குற்றங்களை அம்பலப்படுத்துகிறவன் அச்சுறுத்திப் பழிவாங்குகிறவன்தானே.

வைகோ ஒன்று செய்திருக்கலாம். "நீ ஒரு சீட் போட்டுத் தரலேன்னா உன் வண்டவாளத்தையெல்லாம் போட்டு ஒடைச்சிறுவேன்” என்று கருணாநிதியை "பிளாக்மெயில்” செய்திருக்கலாம். செய்யக்கூடியவர்தான் என்பதை இப்போதுதான் காட்டியிருக்கிறார். ஆனால் செல்வமும் செல்வாக்கும் புரளும் சீமாட்டியிடமிருந்து ஒரு இடத்திற்குப் பதில் 13 இடங்கள் கூடுதலாகக் கிடைத்ததால் வெளியே வந்து குற்றம் சொல்லத் தொடங்கி விட்டார். அவர் உண்மைகளையே சொன்னாலும் அவை அவதூறுகளாகவே அறியப்படும். அதுமட்டுமல்ல. காட்டிக் கொடுத்த கருங்காலி எனப் பெயர் பெறுவதும் இப்படித்தான். ஜெயலலிதா என்னும் செல்வாக்குள்ள பெண்மணி மட்டும் உதவிக்கு வராமல் போயிருந்தால், ஒன்று கருணாநிதி கொடுத்த இடங்களைப் பெற்றுக் கொண்டு கூட்டணியில் நீடித்திருப்பார். அல்லது அமர்ந்து பேசிய நாற்காலியை உதைத்தெறிந்துவிட்டு வெளியே வந்து தன்னந்தனியாக நின்று தேர்தலைச் சந்தித்திருப்பார். ஏற்கனவே அப்படிச் செய்தவர்தான். இவ்விரண்டில் எதைச் செய்திருந்தாலும் அவர் தன்னுடைய "நல்ல அரசியல்வாதி” என்னும் பிம்பத்தை இன்னும் அதிக மதிப்புடன் உயர்த்திப் பிடித்திருப்பார். தமிழகம் அதற்காகப் பெருமைப்பட்டிருக்கும்.

ஜெயலலிதா அவரை சிறையில் மாத்திரம் அடைக்கவில்லை. அவருடைய பிம்பத்தையும் சிதைத்துச் சின்னாபின்னப் படுத்திவிட்டார். இந்த வீழ்ச்சிக்குத் தகுதியுடையவர்தான் என்பதை வைகோவும் ஒரு தேர்ந்த நடிகனைப்போல நிரூபித்து விட்டார்.

வைகோ தனிக்கட்சி தொடங்கியதிலிருந்து தன் எதிராளிகளை ஓரளவு கண்ணியமாகவே விமர்சித்திருக்கிறார். இந்தத் தடவைதான் அவர் எந்த எல்லைக்குள்ளும் நில்லாமல் திமுக என்னும் எதிராளியை எதிரியாகவே பிரகடனம் செய்து துவைத்தெடுத்திருக்கிறார். கருணாநிதியையும் மாறன் குழுமத்தையும் காறித்துப்பாத குறையாக கடித்துக் குதறியிருக்கிறார். சன் குழுமம் சில லட்சங்களில் தொடங்கி, இன்று பல்லாயிரம் கோடிக்குச் சொந்தமாகும் வரை காத்திருந்து வளரவிட்டு, பேரம் படியாததால் கடித்துக் குதறியிருக்கிறார். சொல்லப் போனால் மக்களுக்குத் தெரியாத எதையும் இவர் புதிதாகச் சொல்லி விடவில்லை. இவர் பங்குக்குப் புள்ளி விவரங்களை இணைத்திருக்கிறார் என்பதுதான் புதுமை. இதை ஏன் அவர் இதற்குமுன் செய்யவில்லை? சொல்லவில்லை?

கருணாநிதியின் மேல் ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்தமானபடி குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்கு அவர் முற்றும் தகுதியுள்ளவர் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. இதிலுள்ள நல்லம்சம் என்னவெனில் அவர் கடும் உழைப்பாளியாக அறியப்படுவதே. குற்றச்சாட்டுகளையோ பாராட்டுகளையோ உழைப்பாளிகள்தான் அறுவடை செய்ய முடியும். உழைக்கும் உடம்பில்தான் வியர்க்கும். பிணத்துக்கென்ன பிரிதோர் அழுக்கு?

அவர் மேல் என்னைப் போன்றவர்களின் குற்றச்சாட்டு என்னவெனில், "இவ்வளவு உழைப்பும் உறுதியும் தப்பிக்கும் திறனும் உள்ளவர், தன் குடும்பத்துக்கிணையாக தமிழையும் தமிழ்நாட்டையும் அடிநிலை மக்களையும் வளர்த்தெடுக்கவில்லையே” என்பதுதான். "இந்தச் சாதிய சமூகத்தில் இவரால் மட்டுமே செய்து முடிக்க முடியும் என்று நம்பப்பட்ட பல சமூகச் சமத்துவப் பணிகளைப் புறந்தள்ளிவிட்டு, அந்த இடத்தைத் தன் குடும்ப சாம்ராஜ்யப் பட்டறையாக மாற்றிக்கொண்டுவிட்டாரே” என்பதுதான்.

பார்ப்பனர்களின் குற்றச்சாட்டு, தாங்கள் கோலோச்ச வேண்டிய ரேடியோ, தொலைக் காட்சி, பத்திரிகை ஆகிய துறைகளில் ஒரு சூத்திரன் ஏகபோக முதலாளியாகிவிட்டானே என்பதாயிருக்கிறது. முதலாளியானது சன் குழுமம்தான் என்றாலும் அதிலிருந்து கருணாநிதியை யாரும் கழற்றிவிடத் தயாராயில்லை. சன் குழுமம் கண்டுள்ள அசுர வளர்ச்சியின் ஓர் அங்கமாக சில மாதங்களாக காலை, மாலை பத்திரிகைகளைப் பொதுச் சந்தையின் பிரபல விற்பனைப் பண்டமாக விநியோகம் செய்து, இந்தத் துறையில் ஏற்கெனவே கொட்டை போட்டுக்கொண்டிருந்த எல்லார் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டுவிட்டது. கால்வைக்கும் திசையெல்லாம் பிறரை அண்ட விடாது ஏகபோகம் செய்யும் அதன் அதிவேக வளர்ச்சியானது தொழில் உலகத்தைத் திக்குமுக்காட வைப்பதாகத்தான் உள்ளது. ஆகவே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அதைத் தொலைத்துக் கட்டிவிடத் துடிக்கிறார்கள் பலரும். அதற்கேற்றாற்போல் தயாநிதி மாறன் டாடாவை மிரட்டினார் என்றொரு குற்றச்சாட்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எழுப்பியது. அதன்மேல் பார்ப்பன ஆசீர்வாதம் சங்கரராமனின் ரத்தாபிஷேகம்போலப் பெருகியது.

சோ துள்ளிக் குதித்துச் சொன்னார், "தயாநிதி மாறன் அமைச்சராயிருந்தால் இனி ஒருத்தருமே தொழில் நடத்த முடியாது” என்று. சுப்பிரமணியன்சாமி சொன்னார், "தயாநிதி ரௌடியைப் போல மிரட்டியிருக்கிறார்” என்று. ஞாநி சொன்னார், "உடனே ராஜிநாமா செய்திருக்க வேண்டும் - அந்த வெட்க உணர்ச்சியெல்லாம் அவர்களுக்குக் கிடையாது” என்று. குருமூர்த்தி சொன்னார், "சன் டிவிக்காக, தயாநிதியால் இயக்கப்படுவதுதான் தொலைத் தொடர்பு அமைச்சகம்” என்று. தினமணி நாளிதழ், அந்தச் செய்தி வந்த நாளிலிருந்து தன் முகமூடிகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு கருணாநிதிக்கு எதிரான தொனிஅரசியலைக் கைக்கொண்டு விட்டது. இதில் ஒரு கூடுதல் தகவலாக டாடா நிறுவனத்தார் மகா கண்ணியத்தோடு தொழில் செய்கிறவர்கள் என்று நற்சான்று வேறு வழங்குகிறார்கள். அதாவது சன் குழுமம் போல அற்பர்கள் நடத்தும் நிறுவனம் அல்ல என்று அதற்கு அர்த்தம். பேட்டை ரௌடிகள் எல்லா தில்லுமுல்லுகளையும் செய்துவிட்டு நம் கண் முன்னாலேயே பிறகொருநாள் கண்ணியவான்களாகத் திரிவதில்லையா? அந்தக் கதைதான் எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும். இதில் டாடா என்ன, சன் என்ன?

எந்த ராட்சச நிறுவனமும் அரசியல் செல்வாக்கில்லாமல் வளர்ந்ததாக வரலாறில்லை. அரசாங்கக் கோழிமுட்டை அம்மியையே உடைக்கும் என்பது முக்காலத்து உண்மை. தொழில் நிறுவனங்கள் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டுப் பதில் பெறுவதற்காக உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்த கதையை நாம் அண்மையில் பார்த்தோம். தொழிலதிபர்கள் பலர் மாநிலங்களவை உறுப்பினர்களாக எதற்காக வருகிறார்களாம்? எப்படி வருகிறார்களாம்? அண்மையில், மாநிலங்களவை உறுப்பினராக முயன்ற தொழிலதிபரை - 25 ஆண்டுகள் கர்நாடகத்திலேயே தொழில் செய்து, தன் வருமானத்தை அங்கேயே முதலீடு செய்து வாழும் தொழிலதிபரை புகழ் பெற்ற கன்னட எழுத்தாளரான யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி "அவர் மண்ணின் மைந்தர் இல்லை” என்று சொல்லி எதிர்த்து நின்று தோற்றாரே அதெல்லாம் என்ன அரசியல்? அமைச்சர்கள் பலர் தொழில் நிறுவனங்களின் அரவணைப்பாளர்களாகத் தின்று கொழுப்பது நிறுவனங்கள் தோன்றிய காலத்திலிருந்து தொடரும் நாய்ப் பிழைப்புதான். ஆகவே கருணாநிதியும் தயாநிதி மாறனும் தங்களுக்குப் பிரியமான நிறுவனங்களை அரவணைப்பதில் துறவிகளாய் இருப்பது பற்றி விவாதித்துக் கொண்டிருப்பது, போக்கிரிகளின் மத்தியில் விவாதிக்கிறவர்கள் தங்களை முட்டாள்களாகப் புனைந்து கொள்வதற்குச் சமம்.

அதற்கு மாறாக ஒன்று செய்யலாம். அவர்கள் எந்தெந்த முறையற்ற வழிகளில் செல்வாக்கைப் பயன்படுத்தினார்கள், பிறர் வயிற்றில் அடித்தார்கள், அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டங்கள், பின்னடைவுகள், பொது வாழ்வின் பணிஇழப்புகள் என்ன எனப் பட்டியலிட்டு, அவர்களை விசாரணைக்குட்படுத்துவதே ஊருக்குழைப்பவர்கள் செய்யக்கூடிய யோகம். இந்த விஷயத்தில் வைகோ, தன்னையே தகுதி நீக்கம் செய்து கொண்டுவிட்டதன் மூலம் அந்த யோகத்தை வெறும் கேலிக்கூத்தாக்கிவிட்டார் என்பது நம் வாதம். ஒரு விஷயத்தில் வைகோவை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அவர் எங்கே, எவரோடு உறவாடுகிறாரோ, அங்கே, அவர்களுக்குக் கண்மண் தெரியாத ஆதரவை வாரி வழங்குவார். இது ஒருவகை அடியாள்தனம் மாதிரி. ஆனால் வைகோவுக்கு தன் நம்பகத்தன்மையை நிரூபிக்கும் சரணாகதி - சுயம் கொல்லும் சரணாகதி.

பார்ப்பனர்கள் இப்போது அலறுகிறார்களே, அது நியாயம் என்றுதானே படுகிறது? ஆனால் அவர்கள் ஏன் எல்லா அநியாயங்களுக்கும் குரல் கொடுப்பதில்லை? சில மாதங்களுக்கு முன் வெளியூர் தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகப் பொய்க் கணக்கு காட்டி தொலைத்தொடர்பு நிறுவனத்தை - அதாவது அரசாங்கத்தைப் பல ஆயிரங்கோடிகளுக்கு அம்பானி நிறுவனம் ஏமாற்றியதே? அப்போது இந்தப் பார்ப்பனர்கள் ரிலையன்ஸ் கம்பெனிக்கு எதிராக இந்த அலறு அலறவில்லை. குஜராத்தில் மோடி அரசு போக்குவரத்துக்கு இடைஞ்சலாயிருப்பதாகச் சொல்லி தர்காக்களை இடித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறவர்களைச் சுட்டுத் தள்ளுகிறதே, அதைப் பார்த்து இவர்கள் "ஐயோ” என்று அலறுவதில்லை. வேண்டுமானால் சுட்டுத்தள்ளச் சொல்லித்தான் அலறுவார்கள். ஆக, அவர்களுக்கு வேண்டுமென்றால் அயோக்கியத்தனங்களை ஆதரிக்கிறவர்கள்தான். அதே எதிர்அலைவரிசைதான் வைகோவினுடையதும்.

பார்ப்பனர்களின் தர்ம நியாயங்கள் தொழில்படும் விதத்தைச் சுட்டிக்காட்டத்தான் இதைச் சொன்னோமே தவிர, சன் குழுமத்தின் கழிசடைத்தனமான செயல்பாடுகளை உச்சிமோந்து மெச்சி மகிழ்வதற்கல்ல. இந்தியாவில் பார்ப்பனர்களைப் பகைத்துக் கொண்டோ அல்லது அலட்சியப் படுத்திவிட்டோ எந்தத் தொழில்-வணிக நிறுவனமும் நிம்மதியாக இயங்கிவிட முடியாது. இன்றைக்கு வரை செலாவணியிலிருக்கிற எழுதப்படாத விதி இது. இதில், சூத்திர நிறுவனமெனில் பார்ப்பன தர்மங்களுக்குத் தெண்டனிட்டுக் கொள்வதில் கூடுதல் கவனம் வேண்டும். சமூக அறங்களைப் போதிக்கிறவர்களாகவும் பரப்புகிறவர்களாகவும் பராமரிக்கிறவர்களாகவும், மீறுகிறவர்களைத் தண்டிக்கிறவர்களாகவும் காட்டிக் கொடுக்கிறவர்களாகவும் வழிக்குக் கொண்டு வருகிறவர்களாகவும் பார்ப்பனர்களே இன்னமும் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள். பார்ப்பன ஆளுமையில் ஊடகங்கள் திருமால் கை சங்கு சக்கரம் போல இன்னமும் வலிய ஆக்டொபஸாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சன் குழுமத்தைப் பொறுத்தவரை அது ஒரு பார்ப்பன நிறுவனம் போலத்தான். நடைமுறை வழக்கத்தில், நிர்வாக மேலாண்மையில், கலாச்சாரப் பரிவர்த்தனையில், நட்புக்கும் ஆலோசனைக்குமான வட்டத்தில் எனப் பார்ப்பனியம் பரந்த அளவில் கோலோச்சும் நிறுவனம். அங்கே யாகம் செய்யப்படுகிறதா, சங்கராச்சாரி சேவிக்கப்படுகிறாரா எனத் தெரியவில்லை. இதைவிட முக்கியமான விஷயம், மாறன்கள் பார்ப்பனப் பெண்மணியின் புதல்வர்கள்; பார்ப்பனப் பெண்ணரசிகளின் கணவன்மார்கள். இந்தப் பரிணாமத்தில் அவர்களுக்குள்ள ஒரே அசௌகரியம் அவர்கள் கருணாநிதியின் பேரன்களாயிருப்பதுதான். சொல்லப்போனால் இது ஒன்றே போதும் பார்ப்பனர்களின் வன்மத்துக்கு. நமக்குள்ள விவஸ்தையில்லாத உறவென்பது, கருணாநிதியை பார்ப்பனர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதுதான்.

நான் இந்த மதிப்பீட்டை வைகோவின் நூலிலிருந்து நேரடியாகத்தான் தொடங்கியிருக்கிறேன். நூலின் விடுபட்டுப்போன கடைசிப் பக்கங்களை முன்கூட்டியே மதிப்பிட்டுக் கொண்டதுதான் இதிலுள்ள முறைமாற்றம். மற்றபடி நூல் அதன் சமகாலத்தில் வைகோவை மதிப்பிடுவதற்குப் போதுமான ஆவணமாகவே விளங்குகிறது. நூலின் பல சிறப்பம்சங்களைக் கட்சிக்காரர்கள் பட்டியலிடக்கூடும். நாம் அதன் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு 50, 60 புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பலனை இந்த ஒரு நூலைப் படிப்பதன் மூலமே பெற்றுவிட முடியும் என்பது இதன் சிறப்பம்சம். ஒவ்வொருவரும் சுதந்திரத்தின் மீது, தேசத்தின் மீது, சண்டையிட்டாவது நிறுவப்படும் சமாதானத்தின் மீது, நீதி நேர்மையின் மீது பற்றுகொண்ட லட்சியக் குடிப்பிறவியாக வளர வேண்டும் என்பதை நூல் முழுதும் வைகோ தன் கனவாகவே பதிவு செய்திருக்கிறார். புத்தி சொல்லும் அதிகாரமுள்ள பொது மனிதர்களின் வரம்புக்குட்பட்ட விஷயம் இது. இங்கே வைகோவின் சொற்கள் சரசரவென, அருவியென, அடைமழையெனப் பொழிகின்றன. ஆழங்காணலின் மூச்சுக் கவசமாக, மொழியை யோசித்து யோசித்துப் புதிதாகத் தேடியடைகிற கருத்தோட்டங்களால் செறிவூட்டுகிற தேவை அவருக்குத் தென்படவில்லை.

"காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு(ம்) பாப்பா”க்களுக்கு அவரது அறிவுத் திரட்டல்கள் படியிறக்கம் செய்யப்பட்டுள்ளன. தான் படித்த நூல்களை மீட்டுருவாக்கித் தருவதில் வைகோவின் ஆற்றல் பிரமிக்க வைக்கிறது. ஒரு கதை சொல்லி, ஒரு பிரவசனக்காரர், ஒரு கூத்துக் கலைஞர் எப்படித் தன் சொற்களுக்காகத் தடுமாறுவதில்லையோ, அதுபோன்றதொரு ஆற்றொழுக்கு வைகோவின் வார்த்தைப் பிரவாகத்தில் நீந்திச் செல்கிறது. பள்ளி, கல்லூரிப் பருவங்களிலேயே தான் பங்கேற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளுக்குக் கணக்கற்ற வரலாறுகளையும் மேற்கோள்களையும் மனப்பாடமாகவே தொகுத்திருப்பார் போல. சிறைநிழல் இளைப்பாறலில் தன்னால் முடிந்தவரை அவற்றை மீட்டெடுத்துத் தன் தோழர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

அவரது அரசியல் வாழ்வே மாணவப் பருவத்தில் கற்றுத் தேர்ந்த பேச்சாற்றலின் மேல்தான் கட்டியெழுப்பப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது போதுமா எனில், திராவிடக் கட்சியினர்க்குப் போதுமானதாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதிலுள்ள ஓர் எதிர்மறை அம்சம், சிறை வாழ்க்கை தனக்கு அரிதில் கிடைத்த ஓய்வாகவும் தானாய்ப் புகழ் வரும் வழியாகவும் அவர் கருதியிருக்க மாட்டார் என்றே நம்பலாம். அப்படி கருதாத பட்சத்தில் சிறைபட்டதன் தாக்கமாக மனப்பெருவெளியில் அவர் தனது அரசியல் தேடலையாவது நிகழ்த்தியிருக்க வேண்டும். அதன் நீட்சி, அரசியலுக்கான தத்துவத் தேடலாக முளை விட்டிருக்கும். அவ்வாறு எதுவும் நிகழவில்லை.

படிக்கும் காலத்தில் முதல் மாணவனாகத் திகழ்ந்தவர் வைகோ. ஒரு கட்சித் தலைவரான பின்னும் அந்தக் கற்றலின் துறைசார் துல்லியமே அவரை வழி நடத்துவதை நூல் பளிச்செனப் புலப்படுத்துகிறது. ஐன்ஸ்டீன் போன்ற மேதைகள் படிப்பிலும் பணியிலும் துப்பு கெட்டவர்களாகத்தான் தெரிந்தார்கள் என்பதைப் பரவசப்படுவதற்குரிய விதிவிலக்காகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். சுயசிந்தனையாளர்களும் விதிவிலக்கானவர்கள்தாம். நல்ல தலைவர்கள்கூட விதிவிலக்காகத்தான் முளைத்தெழுகிறார்கள்.

பொது அறத்திலும் நடத்தையிலும் ஒரு ராணுவ ஒழுங்கு இருக்க வேண்டும் என்பது வைகோ என்னும் அரசியல் கட்சித் தலைவரின் வில்லங்கமில்லாத அமைப்புச் சூத்திரமாகிறது. "ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் எடுத்துக்காட்டு கூற வேண்டுமெனில் இனிமேல் மதிமுகவைச் சொல்லலாம்” என்பது வைகோவின் வைரக்கனவு வரிகள். ஒழுங்கும் கட்டுப்பாடும் பழக்கமாக வேண்டுமே தவிர அவையே பணிகளாகி விடுவதில்லை என்பது இங்கே நினைவு கூரப்படவில்லை. இவ்வாறாக, ஒரு மரபான திராவிடக் கட்சியின் பிசிறில்லாத செதுக்குச் சிற்பமாகத் திகழ்வதில் அவர் அதிதீவிரக் கவனம் கொண்டவராகவே அறியப்படுகிறார்.

நூல் வெகு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. நல்ல தாள், நல்ல அச்சு, தன்வரலாறு போன்ற தோற்றம் தரும் குடும்பப் பாங்கான அரசியல் படத் தொகுப்பு, மேலுறையிட்ட காலிகோ அட்டை, உறுதியான கட்டுமானம். அரசியல் தலைவரின் புத்தகம் என்றாலும் அதிக விலை என்று சொல்ல முடியாது.

நூல் "கண்ணகி பதிப்பகம்” என்னும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. மெரினா கடற்கரையிலிருந்து இரவோடு இரவாக அகற்றப்பட்டு, இப்போது பேச நாதியற்றுக் காணாமலே போய்விட்ட கண்ணகி சிலைதான் பதிப்பகத்தின் முத்திரைச் சின்னமாக நூலின் மேலுறையில் அச்சிடப்பட்டுள்ளது. முகப்பு முழுதும், முதிர்ச்சியே ஓர் அழகாய்த் தெரியும்படி ஒப்பனை செய்தெடுக்கப்பட்ட வைகோவின் படம். அதன் வலது கீழ்ப்புறத்தில் சிறைக்கூண்டினுள் ஒடுங்கி அமர்ந்து கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் வைகோ. முதன்முதலில் புத்தகத்தைக் கையில் வாங்கியபோது அந்தப்படத்தின் மீதே பார்வை சிக்குண்டது. மனம் தளும்பிக்கொண்டு வந்தது. இந்தியாவே வெட்கமற்றுப் பார்த்துக் கொண்டிருந்த முடிவற்ற அலைக்கழிப்புப் பயணங்களும் கால்கடுக்கும் விசாரணைகளுமான நீண்ட சிறை வாழ்வு நினைவில் நிழலாடியது. எனக்கு அது ஒரு நெகிழ்வான தருணம். மறுமுறை புத்தகத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டபோது மீண்டும் அதை உற்று நோக்கத் தோன்றியது. கிளிக் கூண்டில் சிறகு துணிக்கப்பட்ட பறவையாக "எனக்கு எப்ப நல்ல காலம்?” என்று கேட்கும் தொலைக்காட்சி விளம்பரக் கிளியாக அது உருமாற்றம் பெற்றிருந்தது.

காலம் எவ்வளவு கருணையற்ற வள்ளல் என்று கவலை கொள்வதொன்றுதான் மிச்சமாயிருந்தது. நூல் மேலுறையின் உள்மடிப்புகளில் புகழ்பெற்றவர்களின் பொன்மொழிகள் அச்சிடப்பட்டுள்ளன. அவை வாசிக்க நன்றாயிருந்தாலும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. இவ்வகை அலங்காரம் ஒரு தலைவனை வெறும் வகுப்பறைவாதியாகப் படம் பிடித்துக் காட்டவே பயன்படும். ஊசித் துவாரத்தில் ஒட்டகம் தெரியுமானால், அப்போது ஒட்டகத்தைவிட ஊசித்துவாரம்தான் பெரிது என்னும் உணர்வு முன்னிறுத்தப்பட வேண்டும். விமானத்தின் இறக்கைகள் அதில் பயணிக்கிறவர்களின் கண்ணுக்குப் புலப்படாத பன்முகச் சிறகுகளைவிடச் சின்னஞ்சிறியவையாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த நூலைப் படிக்குமுன் நான் படித்து முடித்திருந்தது "எதிர்ப்பும் எழுத்தும்” என்னும் நூல். மெக்சிகோவின் சியாபாஸ் பகுதியில் இயங்கும் ஜபடிஸ்டா இயக்கத்தின் துணைத்தளபதி மார்க்கோஸைப் படம் பிடித்துக் காட்டும் நூல். மார்க்கோஸ் பற்றி நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: "ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய், இலக்கியப் பேழையாய், தெளிவு மிக்க கோட்பாட்டாளராய், படைக்களத்தில் காணக்கிடைக்கும் அரிய வகை சிந்தனையாளராய் அவர் திகழ்கிறார். அவரோடு நம் தலைவர்களை ஒப்பிடும்போது வெறுமையில் மூச்சுத் திணறுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை”.

இந்த நூல் கைக்குக் கிடைத்தபோது நான் வாசித்துக்கொண்டிருந்தது காந்தியடிகளின் "சத்திய சோதனை.” அதை நான் முழுமையாகப் படித்தது தற்பொழுதுதான். அதையும் இதையும் மாறிமாறிப் படித்து ஏறக்குறைய ஒன்றாகவே முடித்தேன். தலித் பிரச்சினையில், அம்பேத்கரை எதிர்கொள்வதில் காந்தியின் போதாமையை நான் கடுமையாக உணர்ந்திருக்கிறேன். ஆயினும் அவரைத் தலைவராக்கியது எது என்பதை "சத்தியசோதனை” மிக நுணுக்கமாக உணர்த்தியது. அந்த மனிதரின் எளிமை ஒருவகையில் அசாத்தியமானது. இன்னொரு வகையில் வெகு பாமரத்தனமானதும்கூட. இனி பசுவின் பாலை அருந்துவதில்லை எனத் தீர்மானித்து அதைத் தவிர்க்கிறார். பின்னர் ஒருசமயம் நோயுற்றபோது மருத்துவர் அவரைப் பால் அருந்தச் சொல்கிறார். காந்தி தன் சத்தியத்தைக் காக்கும் பொருட்டு அதை ஏற்க மறுக்கிறார். "நீங்கள் பசுப் பால்தானே அருந்துவதில்லை என்று உறுதி எடுத்தீர்கள். ஆட்டுப் பால் அருந்தலாம் அல்லவா?” என்று மடக்குகிறார் சரோஜினி நாயுடு. "ஆமாம், நான் அருந்தலாம்தானே” என்று அவரும் ஒத்துக்கொள்கிறார். "என்ன வினோதமான கிறுக்கு மனிதர்” என்று பரிகசிக்கத்தான் தோன்றுகிறது. ஆனால் அவர் எதை நம்புகிறாரோ, அதைச் சோதிப்பதிலும் கடைபிடிப்பதிலும் பிறருக்குப் போதிப்பதிலும் அவர் காட்டிய உறுதியும் ஒருமையுணர்வும் அல்லவா அந்தக் கிறுக்கரைத் தவிர்க்க முடியாத தலைவராக்கியது.

"சிறையில் விரிந்த மடல்கள்” ஊடாக வைகோ என்னும் தலைவரைச் சந்தித்தபோது எனக்கேற்பட்ட ஏமாற்றம் சொல்லிக் கொள்ளும்படியானதுதான். அரசியல் பழிவாங்கலாக 577 நாட்களைச் சிறையில் கழித்திருக்கிறார். அது ஓர் அற்புதமான திறப்பை அவருள் உண்டாக்கியிருக்க வேண்டும். அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக- அதுவும் ஏற்றத்தாழ்வு மலிந்த இந்தியச் சமூக ரீதியாக அவரிடம் புதிய விழிப்புகள் துளிர்த்திருக்க வேண்டும். கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒரு தத்துவ ஞானியாகவே சமைந்திருக்கலாம் என்றாலும் குறைந்த பட்சம் சாத்தியப்படும் ஒரு தத்துவத்தின் விளிம்பையாவது தன் எழுத்தில் தொட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. அவர் எப்போதோ படித்ததைப் பற்றியும் புதிதாகப் படித்ததைப் பற்றியும் கதைச் சுருக்கங்கள் எழுதியுள்ளார். மீதி நேரத்தில் கைப்பந்து ஆடிக் களித்திருக்கிறார். சிறையை விட்டு வெளியே வந்ததும் அதன் ஞாபகத்தையே தொலைத்துவிட்டு முன் எப்போதும் நிகழ்த்தியிராத வம்பளப்பு அரசியலில் திளைத்திருக்கிறார்-அதுவும் தனக்கெதிராக சாட்சியம் அளித்தபடியே. திராவிடக் கட்சி அரசியலில் இதற்கு மாறாகவெல்லாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்தான். ஆனால் வைகோ இந்த முட்டாள்தனங்களின் நடுவேதான் தலைவனாக நின்றுகொண்டு தன்மானம், சத்தியம், தலை வணங்காமை, ஒழுங்குமுறை என்றெல்லாம் சத்தம் போட்டுக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

என் ஏமாற்றம் எதிர்பாராததல்ல என்பதால் விழுங்கிக்கொள்வது கடினமாயில்லை. அதனால்தான் இந்த மதிப்பீட்டைச் சமகால அரசியலின் பகுப்பாய்வாகத் தொடர முடிகிறது. நூல் முழுதும் குதித்தோடும் நடையழகில் மயங்கியபோது நான் நினைத்தேன்: அண்ணாவைப்போல், கலைஞரைப்போல் இவர் மட்டும் சினிமாவுக்குள் நுழைந்திருந்தால் அவர்களைவிடவும் வெற்றிகரமான கதைவசனகர்த்தாவாகப் புகழ் பெற்றிருப்பார் என்று. ஆனால் காலம் மாறிவிட்டதால் கருணாநிதியாலேயே திரும்பக் காலூன்ற முடியாத அந்தத் துறையில், அதே பாணியைப் பின்பற்றும் வைகோவுக்கும் அதுதானே நேரும் என்றும் மறுயோசனை ஓடியது. எல்லாத் துறைகளிலும் காலமாற்றம் நேரும். ஆனால் திராவிடக் கட்சி அரசியல் மட்டும் அன்று பிறந்த மேனிக்கே இருந்து, தேய்ந்து, இற்று, அழியும்.

 

நூலைப் படித்து முடித்தபோது வைகோவின் ஒன்றிலொன்று பொருந்தும்படியான இரண்டு சித்திரங்களை அவதானிக்க முடிந்தது. ஒன்று, கட்சி அரசியலில் வைகோ கருணாநிதியின் அச்சு அசலான நகலாகவே இருக்கிறார். இரண்டு, கருணாநிதியிடமிருந்து தோள் மாற்றிக்கொண்டவராக திராவிடக் கட்சிகளின் ஒட்டுமொத்த முற்றெச்சமாக இவரே திகழ்கிறார்.

அடிப்படையில் இவர் ஒரு தலைவராயிருப்பதன் தத்துவம் என்ன என்னும் கேள்வியைத் தவிர்த்துவிடலாம். ஏனெனில், திராவிடக் கட்சிகள் என்றில்லை, எல்லாக் கட்சித் தலைவர்களையுமே- ஜனநாயகக் கம்யூனிஸ்டுகளையும் சேர்த்தே- பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி இது. வைகோவைப் பொறுத்தவரை ஒரு நல்ல தலைமையின் துணையிருப்பில் பந்தயக் குதிரை போன்றதொரு சாகச வீரனாகச் செயல்படுவதில் முழுமை பெறுவார் என்று கணிக்கத் தோன்றுகிறது. ஒரு தலைவன் கட்சியைத் தன் கட்டளையால் வழிநடத்த வேண்டும். கட்சி தன் கட்டளையால் தலைவனைத் தண்டிக்கக் கூடாது. அப்படி நேர்ந்தால் அந்தக் கட்சி, தலைவனுக்கேற்படும் தலைகுனிவுகளையும் சேதாரங்களையும் பற்றிக் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவொரு "பொறுக்கித் தின்னும்” கூட்டமாயிருக்கும்.

கட்சி அரசியல் களத்தில் கருணாநிதிதான் வைகோவை ஒளிப்புள்ளியின் கீழ் வெளிச்சப்படுத்தினவர். ஆனால் அதன் பிறகு வைகோவின் கைதட்டல் பெறும் உணர்ச்சிகரப் பேச்சுகளும் ஊடகக் கவனம் பெறும் அதிரடி நடவடிக்கைகளும் கருணாநிதியை எச்சரித்திருக்க வேண்டும். எனவே, அவர் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வைகோவை அந்நியப்படுத்தினார்; தள்ளிவைத்தார்; புறக்கணித்தார். இந்தப் புறக்கணிப்புகளைப் பற்றிய ஆதாரங்களை, கருணாநிதி அவர் மேல் காட்டிய அக்கறைபோல் பொய்த்திரை போட்டுக்கொண்டு புத்தகம் விவரிக்கிறது. உதாரணமாக, மொழி பற்றிய அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தும் உறுப்பினர்கள் பட்டியலிலிருந்து கருணாநிதி அவர் பெயரை நீக்கிவிட்டார். ஆனால் வைகோ அதில் கலந்துகொண்டு கொளுத்தி சிறை சென்றார். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை மாநில அரசு பறித்தது. வைகோ மாநிலங்களவை உறுப்பினரானதால் பதவி பறிக்கப்படவில்லை. கருணாநிதிக்கும் வைகோவுக்கும் இடையிலான உறவும் பிரிவும் பற்றி இச்சம்பவம் மூலம் விரிவாக ஊகித்தறியலாம். வைகோ மிசாவில் கைதானபோது முரசொலியில் வந்த பெயர்ப் பட்டியலில் அவர் பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது....

இரண்டு சிறுவர்கள்- சகோதரர்கள். பெரியவன் சின்னவனுக்கு பசியறிந்து ஒரு ரொட்டித் துண்டைக் கொடுக்கிறான். சின்னவன் இயல்பாகவே அண்ணன் மேல் பாசம் வைத்துள்ளான். அவன் சொல்லிக் கொடுப்பதைப் பற்றிக்கொள்கிற பிள்ளை. ஆனால் பெரியவனோ அதைப்பற்றி அக்கறை கொள்ளாமல் தம்பியைக் குட்டிக்கொண்டும் திட்டிக்கொண்டுமே செல்கிறான். கடைசியில் ஒருநாள் தன்னைப் பின்னாலிருந்து தாக்கத் திட்டமிட்டதாகக் கூறி அவனைக் காணடித்துவிடுகிறான். அந்தச் சகோதரர்களாகத்தான் கருணாநிதியும் வைகோவும் எனக்குத் தெரிகிறார்கள். வைகோவின் தீராத பிரச்சினை என்னவெனில், அரசியல் ரீதியாக கருணாநிதிதான் அவருக்கு இன்னமும் அண்ணனாக இருக்கிறார். இது ஒரு வகை மரபணு உறவு போல. அவரே மறுக்க நினைத்தாலும் அவரது மொழி அப்பட்டமாக இதைத் திணிக்கிறது.

திமுகவை விட்டு வெளியேறியவர்கள், வெளியேறக் காரணமாயிருந்த கருணாநிதியை எதிர்த்தே அரசியல் நடத்தினார்கள். ஆனால் வைகோ மட்டும் சொந்த வீட்டுக்குப் போகும் பெண் மறுகிமறுகித் தன் பெற்றோர்களைப் பற்றிக்கொள்ள முனைவதுபோல் கருணாநிதியோடு திருப்பித் திருப்பித் தொடர்பு வைத்துக்கொண்டவர்.

ஏன் அப்படி?

இந்தக் கேள்விக்கான அனுமான விடைகள் எதுவும் உவப்பாய் இருக்கப் போவதில்லை. ஆனால் உண்மையாய் இருக்கப் போவதில்லை என்று சொல்ல வைகோ எந்த நம்பகத் தன்மையையும் விட்டுவைக்கவில்லை.

சன் தொலைக்காட்சிக்கு வைகோ என்றொரு அரசியல் கட்சித் தலைவர் தமிழ்நாட்டில் இருப்பதே தெரியாது. அப்படியொரு அருவருப்பான புறக்கணிப்பைத் திட்டமிட்டுச் செய்துவருகிறது. இது கருணாநிதிக்கும் தெரியும். (கருணாநிதியாலும் சரிப்படுத்த முடியவில்லை என்பதை வைகோ கடைசியாகக் கண்டறிந்ததுகூட அவரது அணி மாற்றத்துக்குக் காரணமாயிருக்கலாம்.) இப்படி தெரிந்தே செய்யும் புறக்கணிப்புக்காகவே அவர் திமுகவைத் தன் முதல் அரசியல் எதிரியாகத் தள்ளி வைத்திருக்க வேண்டும். தனித்து நின்று தன்னைத் தவிர்க்கமுடியாத கட்சியாக வளர்த்தெடுத்திருக்க வேண்டும். அதற்கொரு இடைக்கால ஏற்பாடாக வேண்டுமானால், திமுகவால் வெளியேற்றப்பட்டவரால் தொடங்கப்பட்ட கட்சி என்னும் வகையில் அதிமுகவோடு கூட்டணியைத் தொடர்ந்திருக்கலாம். (அரசியல் நாம் நினைக்கிற மாதிரி அவ்வளவு எளிய சூத்திரத்திற்குள் அடங்குவதில்லை என்று சொல்வதானால், பிறகு தன்மானம், நேர்மை என்னும் சவடால்களையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு எதார்த்தக் கழிசடை அரசியல் நடத்தலாம்தானே. எங்களுக்கெதற்கு எதிர்பார்ப்பு?) அதை விட்டுவிட்டு கருணாநிதியோடு ஏன் உறவு வைத்துக்கொள்ளவேண்டும்?

அதற்கொரு காரணம், தன்னைக் கருணாநிதியின் நகலாகவே பார்த்துப் பழகிவிட்டதால் தான் ஒரு மூலப்பிரதி என நிறுவத் தோன்றவில்லை. நிலவு, என்ன முயன்றாலும் இந்த நிலத்தை விட்டுத்தொலைக்க முடியாதல்லவா. அல்லது, என்றாவது ஒருநாள் திமுகவைக் கைவசப்படுத்திவிடலாம் என்று ஒரு மனக்கணக்கு இருந்திருக்க வேண்டும். அதற்கொரு முகாந்திரமாக கலைஞரோடு தீராப் பகை என்றில்லாமல் தொட்டும் தொடாமல் உறவு வைத்துக்கொண்டிருக்க வேண்டும். தற்போது ஒரேயடியாய் முறித்துக்கொண்டு வந்ததற்குக் காரணம் மாறன்கள் குறுக்கீட்டிலிருந்து கட்சியை வென்றெடுக்கவே முடியாது என்னும் புதிய ஞானோதயம் பிறந்துவிட்டதாக இருக்கலாம்.

எப்படியானாலும், கருணாநிதியை விட்டு இப்போது பிரிந்தது ஒரு பிரச்சினையே அல்ல. அதை வைகோவுக்கே உரிய கௌரவத்தோடு, அல்லது கலைஞருக்கே உரிய தந்திரத்தோடு செய்திருக்கலாம். ஆனால் சிறை வைத்தவர்களோடே சல்லாபம் என்பதுதான் அபத்தத்தின் உச்சம். இது ஒருவகையில் அடியாள் பணிக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டதுபோலத்தான். காளிமுத்து போன்ற தனியாட்கள் அதைச் செய்யலாம். ஆனால் வைகோ போன்ற ஒரு கட்சித் தலைவர் அதைச் செய்யலாமா?

காளிமுத்து வைகோவின் நண்பர். "திமுகழகம்தான் எனது உயிர் என்று மதுரையில் மாலையில் அறிக்கை கொடுத்துவிட்டு ரயில் ஏறி சென்னை வந்து நேரடியாக எம்ஜியார் தோட்டத்துக்குச் சென்று அதிமுகவில் சேர்ந்தவர் காளிமுத்து” என்பது வைகோவின் வாசகம். ஆக, காளிமுத்து வைகோவை போயஸ் தோட்டத்துக்கு அழைத்தது மட்டுமல்ல. நுழைவதற்குத் தன்னை முன்னுதாரணமாகவும் வழங்கியுள்ளார். காளிமுத்துவுக்கு அவரது அழகுத் தமிழ்வசவுக்கேற்பவே கட்சியில் பதவியும் தகுதியும் நிர்ணயிக்கப்படும். கடைசியில் அவருக்குப் பதிலியாகத்தான் வைகோ போய்ச் சேர்ந்தார். அவருக்கிட்ட பணி கருணாநிதி குழுமத்தைப் புரட்டிப் புரட்டி அடிப்பது. அதைக் கச்சிதமாகச் செய்து முடித்தார். அதைக் காசு வாங்கிக்கொண்டு செய்தாரா, அல்லது இலவசமாகச் செய்தாரா என்பது முக்கியமல்ல. அது ஒரு அடியாள் வேலை என்பதுதான் முக்கியம். அவர் தன் கட்சி சார்பில் பேட்பாளர்களை நிறுத்தி வைத்தார். "எங்களை வெற்றிபெறச் செய்தால் மக்களுக்கு இன்னின்ன பணிகள் செய்வோம்” என்று ஒருவார்த்தை சொல்லவில்லை. ஒப்டைத்த வேலையை மட்டுமே கச்சிதமாகச் செய்து முடித்தார்.

வைகோவின் ‘சிறையில் விரிந்த மடல்களி’லிருந்து மாதிரிக்காக இது:

"பட்டாபிசேகத்துக்கே கட்டளை பிறப்பித்தார் காகபட்டர். அதைவிடக் கொடும் இழிவு அன்றோ "திராவிட இயக்கம் சரிதத்தில்” இன்று நடப்பது; கொலு பீடத்தில் யார்? கோட்டையில் கொட்டம் அடிப்பது யார்? எவருடைய உழைப்பில்? அடிவருடிகளாக, கொத்தடிமைக் கூட்டமாகச் சிங்கத் திருநாட்டின் செல்வங்கள் சீரழிந்து போனதால். காகபட்டரே முடியைத் தன் தலையில் சூடிக்கொள்ளும் காட்சியை அண்ணா கனவில்கூடக் கற்பனை செய்து இருக்க மாட்டாரே. கொலுபீடத்திலேயே காகபட்ட நர்த்தினி. ஆம். நர்த்தகி ஒருவர் காகபட்டர் ஆகிவிட்டாரே. இன்று மமதைமொழி புகலும் மகுடதாரி.... வெட்கம், வெட்கம் வேலாகப் பாய்கிறது நெஞ்சில் இந்நிலையைப் பற்றிய நினைப்பு.”

அந்த ‘வெட்கம்’தான் மீண்டும் அரியணை ஏறிட வேண்டும் என்று வேலை செய்தார் வைகோ. வெட்கம் யாருக்கு? இச்சொற்கள் ஒலிக்குப்பைகளல்லாமல் வேறென்ன?

அந்த மொழியைப் பாருங்கள். அண்ணா, கலைஞர், காளிமுத்து, வைகோ- யார் பேரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். பழமையின் சின்னம். செவிப்பறை கிழிகிற மாதிரியான முரசறைதலில், வரிகளிடையே ஒளிந்திருக்கும் படைப்பாளியின் இதயத் துடிப்பை வாசகன் வருடிக்கொடுக்கவே வாய்ப்பில்லை.

மனிதர்கள் இப்படியெல்லாம்கூட நடந்து கொள்வார்களா? மனிதர்கள் நடந்துகொள்வார்களோ என்னவோ. திராவிடக் கட்சிக்காரர்கள் நடந்துகொள்வார்கள். அதற்குச் சான்றுதான் வைகோ.

இங்கே புரட்சிப் புயல் இப்படிச் சுழன்றடித்துக் கொண்டிருந்த வேளையில் ஈழத்தில் தமிழர்கள் குண்டு வீசித் தாக்கிக் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை (10-5-2006) 147 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உலகம் பதறியது. ஆனால் வைகோ வாய் திறக்கவில்லை. யாருக்கும் கடிதமும் எழுதவில்லை. ஜெயலலிதாவுக்குப் பிடிக்காதென்பதால் அதைச் செய்யவில்லை. சேதுசமுத்திரத் திட்டம் செயல்படுகிறது. தனக்குத்தான் அதில் முதல் பங்குண்டு என்பதைக்கூட தேர்தல் காலத்தில் மக்கள் மனத்தில் பதிய வைக்கவில்லை. பின்னர் கட்சியை எப்படி வளர்ப்பது? செம்மொழிக்காகக் குரல் கொடுத்ததை இப்போதல்லவா சொல்லிக்கொள்ள வேண்டும்? கொள்கைக் கூட்டணி அல்ல என்று சொல்லிய பின்னும், ஜெயலலிதாவுக்குப் பிடிக்காததைச் சொல்வதில்லை என்றால் அவர் செய்து முடித்தது அரசியல் அடியாள் சேவகம் என்று சொல்லக்கேட்டு வருத்தப்படலாமா? தமிழ் மக்கள்தாம் தலை குனிய வேண்டும் தாங்கள் எப்படிப்பட்ட தலைவர்கள் கையில் வசமாகச் சிக்கியிருக்கிறோம் என்று. ஈழப்புலிகளை இந்து நாளேடு "கொலைகாரக் கும்பல்” என்று மகுடம் சூட்டி மகிழ்கிறது. வைகோவுக்கு அதில் வருத்தம் இருக்கலாம். ஆனால் காட்டிக்கொள்ள வில்லை. நெடுமாறன்கள்தாம் நெஞ்சு பதறுகிறார்கள். ‘இந்து’ என்.ராம் வைகோவின் நண்பர். இருவருக்கும் இடையே நட்பு நசுங்கவில்லை, பாருங்கள். படிக்கிற காலத்தில் அவரது தந்தையின் பிரதிபலிப்பாக ராஜாஜியைத்தான் வைகோ ஒரு தலைவராக அறிவார். பின்னர்தான் கலைஞர் அவருக்குத் தலைவராகியிருக்கிறார். கலைஞருக்கும் அவர் மூதறிஞர்தானே.

 

தமிழ் நாட்டில் பார்ப்பனரல்லாதார் கட்சிகள்தாம் திராவிடக் கட்சிகள் என்று அறியப்படுகின்றன. இந்த அறிதலை ஆகப்பெரும் அழிநெருப்பில் போட்டு ஆகுதியாக்கியவர் பார்ப்பன வல்லமைச் சின்னமான ஜெயலலிதா. அவர் வகித்த முதல்வர் பதவி, காலம் வழங்கிய கொடையா, அல்லது கட்சி வழங்கிய கொடையா எனில், நிச்சயமாகக் கட்சிக்குக் காலம் வழங்கிய கொடை என்றுதான் சொல்லவேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியும், பார்ப்பன முற்றதிகாரச் சின்னமாகத் தன்னை வளர்த்துக்கொண்ட ஜெயேந்திரரின் வீழ்ச்சியும் கட்சிக்குக் காலம் நல்கிய பரிசல்லாமல் வேறென்ன? காலம் வேறொரு பார்ப்பனரை முதலமைச்சராக அனுமதிக்காது என்பதை நன்கறிந்துதான், ஜெயேந்திரரையே வீழ்த்தியவராயினும் அதைப் பொருட்படுத்தாது ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என்று பிராமணர் சங்கம் சுற்றறிக்கை விட்டு கட்டளையிட்டது. எனவே, ஜெயலலிதாவைத் தவிர்க்கமுடியாத விதிவிலக்காக ஏற்றே, தமிழ்நாடு தன் வரலாற்றை எழுதிக் கொள்கிறது.

பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதோர் மேல் இரண்டு சமூக அழுத்தங்களை வழக்குகளாகத் திணித்தார்கள். ஒன்று, பார்ப்பனர்கள் உயர்பிறப்பாளர் என்று நம்பச் செய்வதான வழக்கு. நீண்ட கலாச்சாரத் தாக்குதல்களாலும் எண்ணற்ற பொய்ப் புனைவுகளாலும் அதை ஓர் உளவியல் சார்ந்த நம்பிக்கையாகவே விதைத்து, முடிவில் வென்றனர். பார்ப்பனரல்லாதோரில் செல்வாக்கு பெற்ற சாதியினரே தங்களை "சற்சூத்திரர்கள்” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு பார்ப்பனர்களின் மேன்மைவாதம் வேதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இந்த வெற்றியைத் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே பெற்றுவிட்டார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. தொல்காப்பியம், தமிழ்ச் சமூகத்தின்மேல் பார்ப்பனக் கலாச்சாரத் தாக்கத்தின் வெற்றியையையும் பார்ப்பன சமூகஅறத்தின் ஏற்பையும் இலைமறைகாயாக அங்கீகரித்துக்கொண்டு எழுதப்பட்ட முதல் நூலாகும். அது தமிழுக்கு எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் என்பதைவிட பார்ப்பனச் சாரம் படிந்த தமிழ் வாழ்வைச் சித்திரமாக்கிப் பார்ப்பனர்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட ஒப்புதல் ஆவணம் என்றே சொல்லலாம். (இதைப் பிரிதொரு சமயம் விரிவாகப் பேசலாம்).

இரண்டாவது வழக்கு, பார்ப்பனர்கள் தமிழ்ச் சமூகத்தில் அதிகாரப் பங்காளிகளாய் உரிமை கோருவது பற்றியது. இதில் பார்ப்பனர்கள் அவ்வளவு எளிதாகவும் நிரந்தரமாகவும் வெற்றி பெற்றுவிட முடியவில்லை. இரு குழுக்களும் அதிகாரத்தை பங்குபோட்டுக் கொள்வதில் கடும் மோதல்களும், சமரசங்களும், சாதிகளின் அணிமாற்றங்களும் தொடர்கதையாய் நிகழ்ந்து வந்துள்ளன.

அதிகாரம் என்பது மனிதனுக்கு நிலத்தில் முளைத்திருக்கக் கிடைத்த வேர். அதை இழக்க எந்த மனிதனும் விரும்புவதில்லை. சராசரி மனிதன் சுதந்திரத்தை விட்டுக்கொடுத்தேனும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே விரும்புகிறான். எனவே, இரண்டாவது வழக்கைப் பார்ப்பனர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க பார்ப்பனரல்லாதோர் உடன்பட்டதில்லை. இதிலுள்ள முதன்மையான அம்சம் என்னவெனில், பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதோருக்கும் இடையே தொடர்ந்து வரும் சண்டை அடிப்படையில் அதிகாரப் போட்டி பற்றியதுதானே தவிர பிறவி உயர்வு தாழ்வுப் பிரச்சனை பற்றியதல்ல.

அந்நியர் ஆட்சிக்காலங்களில், அதிகாரத் தரகர்களாகச் செயல்படுவதில் பார்ப்பனர்களே எப்போதும் உச்சம் பெற்றிருந்தனர். இதைச் சகித்துக்கொள்ள முடியாமல் போனதால், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இதற்கோர் முடிவுகட்ட எண்ணி, பார்ப்பனர்களுக்கு எதிராக வெளிப்படையாகக் கட்சி கட்டியவர்கள் நீதிக்கட்சியினர். அவர்கள் முயற்சி வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தையே வென்றெடுத்தனர். உடன்நிகழ்வாய், அவர்களுக்கு உறுதுணையாகவும் ஆலோசகராகவும் இருந்ததோடு, தீர்ந்துபோனதாகக் கருதப்பட்ட முதல் வழக்கை - அதாவது பார்ப்பனர்கள் உயர்பிறப்பாளர்கள் என்ற கற்பிதத்தைக் கடுமையாக கேள்விக்குள்ளாக்கி, மோதிச் சிதைத்து, சமூக இயங்குதளத்தில் சமத்துவத்தையும் சமதர்மத்தையும் நிலைநாட்டுவதற்காகப் பெரும் போர் தொடுத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. இதற்கு முன்பாகவே தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சினை

தாழ்த்தப்பட்டவர்களாலேயே முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. அயோத்திசாதர் அக்கட்டத்தைச் சார்ந்த எழுத்துப் போராளியாய் அறியப்படுகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், தலித் பிரச்சனையைப் புறக்கணித்துவிட்டுப் பார்ப்பன எதிர்ப்பை வென்றெடுக்க முடியாது என்பதைப் பெரியார் தன் பொதுவாழ்வுச் சூத்திரமாக முன்மொழிகிறார். பொதுப்புலத்தில் தலித் பிரச்சனையைப் பெரிய அளவில் பேசுபொருளாக்கியவர் பெரியார் என்பதால்தான், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் மோதலில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கான பிரச்சினைகளின் விழிப்புணர்வோடு பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பெருமளவு பங்கு பற்றினர். அதே வேளையில், தலித் மக்கள் தங்கள் மேம்பாட்டை வேண்டி சிறுசிறு குழுக்களாக ஆங்கில அரசுக்கு விண்ணப்பங்கள் அனுப்புவதை இயக்கப் பணியாகச் செய்துவந்திருக்கின்றனர்
.
பார்ப்பனர்கள் எப்போதும் ஆளும் வர்க்கத்தின் பக்கம்தான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வர். ஆகவே, அவர்கள் பார்வைக்கு வரும் பிரச்சனைகளை எப்போதும் ஒற்றைத் தன்மையுள்ளதாய் உருமாற்றிக்கொண்டே அணுகுவார்கள். ஆட்சியதிகாரத்தில் உள்ளோர்க்கு இந்த ஒற்றைத்தன்மை அணுகுமுறைதான் அதிகாரத் திமிரோடு கூடிய எளிதான தீர்வுமுறையாகத் தோன்றுகிறது. ஆளப்படுவோர் எப்போதும் பன்மைத்தன்மை கொண்ட பார்வையுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களே ஆள்கிறவர்களாக மாறிவிட்டால் தங்கள் பன்மைத்துவத்தை வெறும் பேசுபொருளாகக்கூட நினைவுகூர மறந்து விடுவார்கள். அதிகாரத்துக்கு ஒற்றைக் குரல்தான் உண்டு. அதனால்தான் பார்ப்பன அதிகாரத்துக்கு எதிராகப் போராடிய நீதிக்கட்சியினரை விடவும், அவர்களின் வழித்தோன்றல்களாகச் செயல்பட வந்த திராவிடக் கட்சிக்காரர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதும் இந்திய சமூகத்தின் கழிச்சடைத்தனங்களுக்கு தீர்வுகாணும் பன்மைத்துவப் பார்வையைச் செழுமைப்படுத்தத் தவறியவர்களாய் ஒற்றைதன்மைவாதிகளாகவே திரிந்து போனார்கள்.

இந்த விஷயத்தில் நீதிக்கட்சியினர் மரியாதைக்குரியவர்களாகவே செயல்பட்டார்கள் என்பதை நாம் பெருமையோடு நினைவு கூரலாம். நீதிக்கட்சியினர் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கினார்கள். தலித்துகளை அமைச்சர்களாக அமர்த்தினார்கள். சமூக நீதிக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். ஆயினும் இப்பணிகள் யாவும் அவர்களுடைய தலையாய பணியாகிய பார்ப்பனர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதினூடாக மேற்கொண்ட கிளைப்பணிகளாகவே அமைந்தன. ஆளுங்கட்சியாகப் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டாலும் அடிப்படையில் அவர்கள் ஆதிக்க சாதியினராகத்தான் அறியப்பட்டார்கள். சாதிப் பிரச்சனைகளை கையிலெடுப்பதும் சாதியொழிப்பை முதன்மைப்படுத்துவதும் பார்ப்பனர்களுக்குப் போலவே ஆளும் சூத்திரர்களுக்கும் தள்ளிவைக்க வேண்டிய பிரச்சினைகளாகவே இருக்கின்றன. இவ்விஷயத்தில் திராவிடக் கட்சிக்காரர்கள் தெரிந்தே தவறிழைக்கிற மோசமான ஏமாற்றுக்காரர்களாகவே தங்களை நிறுவிக்கொண்டுள்ளார்கள்.

பார்ப்பனர் ஷ் பார்ப்பனரல்லாதார் என்னும் எதிர்வை அரசியல் படுத்தியவர்களும், பார்ப்பனர்களிடமிருந்து அதிகாரத்தை வென்றெடுத்தவர்களும் சமூகப்படி நிலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டிய புள்ளி. பார்ப்பனர்கள் இந்த ஆதிக்க சாதிகளை இழிபடுத்தினார்கள் என்பது உண்மை. ஆனால் இந்தச் சூத்திரர்கள் தலித் சாதியினரை இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் விலங்குகளைப் போல அடித்து உதைத்துக் கொல்லவும் செய்கிறார்கள். ஆதிக்க சாதியினர் இதற்குப் பரிகாரம் தேடாமல், தங்கள் சூத்திரப் பட்டத்தைப் போக்கிக்கொள்ள முடியாது என்று சொன்னவர் பெரியார். அன்னிய ஆட்சிதான் என்றாலும் ஆங்கில ஆட்சியில் கிடைத்த பொதுப்பலனாக, உலகளாவிய கருத்துகளோடு தொடர்புகொள்ளும் சாளரங்கள் ஆங்கில மொழியால் திறந்து வைக்கப்பட்டன. இதைப் பயன்படுத்திக்கொண்டு பெரியார் தன்னுடைய சுயமரியாதை இயக்கத்தவருக்கு உலகம் தழுவிய அறிஞர்கள்- சிந்தனையாளர்களின் கருத்துகளையெல்லாம் கட்டுரைகளாக வெளியிட்டு அறிமுகப்படுத்திவைத்தார்.

மரபான ஆதிக்க சாதி மனிதர்களிடம் பெரியார் மனித மாண்பைப் போற்றும் கருத்துகருவூலங்களை ஊட்ட முயன்றது, சமூக வனத்தில் ஒட்டுமாங்கன்றுகளை நட்டுவைப்பதைப் போன்ற செயலாய் இருந்தது. இந்தக் கன்றுகளில் அடிப்போத்து, பண்ணைச் சமூகத்தின் அதிகாரச் சாதிப் பண்புள்ளது. மேல்போத்து, சமத்துவ சமூகம் படைக்கும் கருத்தூட்டம் சார்ந்தது
.
இதில் அசல் ஒட்டுமாமரமாக விளைச்சலைத் தந்தவர் பெரியார் மட்டுமே. அவரை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் பெரியாரின் சீடர்கள் என்று பெருமை தேடிக்கொள்ள முனைந்தார்களே தவிர, பண்பில், பழக்கத்தில், செயல்பாட்டில் எல்லாம் அடிப்போத்திலிருந்து கிளைத்த மரபான சாதியவாதிகளாகவே முற்றிப் போனார்கள். மரபான ஆதிக்கச் சாதிக்காரர்களைப்போலவே பழமையை நேசிக்கிறவர்களாய், பழமையை மறுவாசிப்புக்கு உட்படுத்துவதைப் பற்றி யோசிக்க மறந்தவர்களாய், "ஆயிரங்காலத்துக்கு முற்பட்ட என் பாட்டன் என்னைவிட அறிவு மிகுந்தவன்” என்று நம்பிக் கோவண அழுக்கை ரசிக்கிறவர்களாய் மாறிப்போனார்கள். சோழர்களின் காலம் பொற்காலம் என்றும், களப்பிரர்கள் காலம் இருண்டகாலம் என்றும், தொல்காப்பியமே தமிழின் அசலான சாரம் என்றும், தாங்கள் என்றோ படித்ததைக் கிளிப்பிள்ளைகள் போலச் சொல்லித் திரிகிறார்கள்.

அவர்கள் இன்றும்கூட எப்போதோ வாயில் போட்டுக்கொண்ட சுயிங்கத்தை வெறும் சவ்வாகத் தொடர்ந்து மென்று கொண்டிருப்பதைப்போல, புரட்சிக்கருத்துகளையும் புரட்சியாளர்களையும் பேசுபொருளாக உதிர்த்துக் கொண்டிருக்கிறவர்கள்தான். பெரியாரிடமிருந்து சேமித்த பெயர்ப் பட்டியலை மட்டுமே பயன்படுத்தி புது யுகத்தைச் சேர்ந்தவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் ஏமாற்று வித்தை அது. அதற்கும் மேலாக, அவர்கள் அடிப்படையில் நேர்மையற்றவர்கள். சொற்களுக்கு பொருளுண்டு என்பதையே மறந்துபோனவர்கள். பெரியாரை விட்டு வெளியேறி அரசதிகாரப் போட்டியில் பங்கேற்க முடிவுசெய்தபோதே தங்களிடம் எஞ்சியிருந்த நல்லம்சங்களையும் தொலைத்து விட்டார்கள். அதிகாரத்தை விரட்டிப் பிடிக்கிறவனுக்குத் தத்துவம் ஒரு பொருட்டல்ல. தத்துவமின்மையையே தத்துவமாகக் கொண்டுவிட்ட கூக்குரல்காரர்கள்.

ஒரு சான்றுக்காக இதைச் சொல்லத் தோன்றுகிறது: அவர்கள் பெரியாரோடு தங்கியபோது "கடவுள் இல்லை” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். பெரியாரை விட்டு விலகி வந்து அதிகாரத் தேடலில் இறங்கிய உடனே "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று மாற்றிக் கொண்டார்கள். இந்த மாற்றத்தைக் கண்டடைய அவர்கள் என்ன சிரமத்தை அல்லது தத்துவத்தை பேசித் தீர்த்தார்கள்? எத்தனை பேரைக் கலந்து ஆலோசித்தார்கள்? எத்தனை இரவுகள் மனங்குழம்பித் தவித்தார்கள்? இது எவ்வளவு பெரிய தலைகீழ் மாற்றம்? ஆனால் அவர்களுக்கோ வெறும் சொல் புரட்டு மாத்திரமே.

"மாற்றான் வீட்டு மல்லிகையும் மணக்கும்” என்றாராம் அண்ணா. அவர்தான் "அவள் படிதாண்டா பத்தினியுமல்ல. நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல” என்று தத்துவம் பேசியவர். ஆகவே மல்லிகை மணம் கூட ஒரு தத்துவம் போலத்தான். மல்லிகை, பூ மட்டுமல்ல; பூவையும்கூட என்பதுதானே நடைமுறை வரலாறு? பொதுவாழ்வில் அசிங்கங்களையெல்லாம் குத்தகையெடுத்து கொட்டிக் கவிழ்த்தாற்போல் பேச்சல்லாம் பொருளற்ற ஒலிக் குப்பைகளாய்க் கொட்டிக் கவிழ்த்துக் கைதட்டல் பெற்றுப் பூரித்து மகிழ்கிறவர்கள். இப்போது அவர்கள் ஆதிக்க சாதிகளின் மரபான அதிகாரத்தை ருசித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைவிட எதை மறந்தார்கள் என்பது வரலாறாகக்கூடும்.

அதிகாரத்தை ருசிக்கும் தத்துவமற்றவர்களுக்கு தங்கள் இயங்குவெளியில் இடைவெளிகளும் வெற்று வெளிகளும் நிறைய கிடைக்கும். அவற்றை புத்திசாலித்தனமாக நிரவிச் செழுமை கண்டவர் கலைஞர் கருணாநிதி - அது சொந்த சாம்ராஜ்யச் செழுமை. மற்றவர்கள் சொற்குப்பைகளால் அவற்றை நிறைக்க முயல்கிறவர்கள், வைகோ உட்பட.

இந்தத் தேர்தலில் கலைஞர்தான் தமிழ்நாடே என்பதுபோல எல்லாரும் - அவர் தரப்பைச் சேர்ந்தவர்களும் சரி, எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்களும் சரி- எல்லாருமாகச் சேர்ந்து அவரைக் கொண்டாடிவிட்டார்கள். இந்த நாடு எவ்வளவு வறுமைப்பட்டுப் போய்விட்டது என்று வருத்தமாய் இருக்கிறது.

கருணாநிதியை ஆதரித்தவர்களுக்கு அவர் கடவுள்போல. எதிர்த்தவர்களுக்கு அவர் சாத்தான்போல.
கடவுளுக்கு நிகரானவன் ஒரே ஒருவன்தான்; ஆன்மீகவாதிகளைக் கேட்டால் சொல்வார்கள்,
அவன் சாத்தானைத் தவிர வேறெவனாய் இருக்க முடியும்?

வைகோவுக்கு நிகரானவர்கள் முக்குகளெங்கும் மலிந்து கிடக்கிறார்கள் - திராவிடக் கட்சிகளின் உச்ச முற்றெச்சங்களாய்.

Pin It