மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்பட்டால் அந்த அரசை மக்களால் தூக்கி எறிய முடியுமா? மக்களால் உருவாக்கப்பட்ட அரசு உலக முதலாளிகளுக்கு விரோதமாக நடந்தால் அந்த அரசை தூக்கி எறிய முடியுமா? நிச்சயமாக முடியும். அரபு, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர்களுக்கும் குழப்பங்களுக்கும் அரசியல் கலவரங்களுக்கும் கொடூர பஞ்சத்துக்கும் இதுதான் காரணம். எந்தவொரு மூன்றாமுலக அரசும் உலக முதலாளிகளுக்கு எதிராக இயங்கினால், அந்த அரசு வரலாற்றிலிருந்து தூக்கி எறியப்படும். அந்நாடு தரைமட்டமாக்கப்படும். அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும். அந்நாட்டு அதிபர்கள் கொல்லப்படுவார்கள். இப்பலியிலிருந்து தப்பிக்கத்தான் இந்திய அரசு ஒட்டுமொத்தமாக தன்னை உலக முதலாளிகளின் சார்பு அரசாக மாற்றிக் கொண்டு வருகிறது. கிடைத்தவரை லாபம் என்று முதலாளிகளிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு நம் அரசியல்வாதிகள் இந்தியாவை உலக முதலாளிகளின் நவீன காலனியாதிக்கத்துக்குக் கொண்டு செலுத்துகிறார்கள்.

சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த வேளையில் நம் நாட்டில் அறவழிப் போராட்டத்திற்கு கொடுக்கப்படும் மரியாதையும் கௌரவமும் என்ன? தங்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் ஆண்டுக்கணக்காகப் போராடும் நம் எளிய இந்திய கிராம மக்கள் திரும்பத் திரும்ப தோல்வியை சந்திப்பது எப்படி? நர்மதா அணைக்கட்டை எதிர்த்து 20 வருடங்களுக்கு மேலாக பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக சாத்வீகமாகப் போராடும் மேதா பட்கர் 20 நாட்கள் தொடர் உண்ணாவிரதமிருந்தும் அவரின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மணிப்பூரிலிருந்து சிறப்பு ஆயுதப்படைப் பிரிவை மத்திய அரசே திரும்பப் பெறு. எங்களை அமைதியாக வாழவிடு என ஆறாண்டுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதமிருக்கும் இரோம் சர்மிளா இன்று அஹிம்சை வழிப் போராட்டத்தின் ஒற்றை மனச்சாட்சியாய் நிற்கிறார். கேரளா, பிளாச்சிமடாவில் கொக்கோ கோலா கம்பெனியை எதிர்த்துப் போராடும் மைலம்மா, கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து தமிழகக் கடலோர கிராமங்களில் போராடிக்கொண்டிருக்கும் மீனவர்கள் என்று கட்சி அரசியலுக்கு வெளியே நின்று தங்கள் வாழ்வுரிமைக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் இந்திய கிராமப்புற மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு கிடைக்கும் வெற்றி என்பது பாதிக்கபட்டவர்களுக்கு வெறும் நிவாரணம் என்பதோடு முடக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் நாட்டின் வளத்தை கொள்ளையடிக்கவும் சுற்றுச்சூழலை நாசமாக்கவும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கவும் முதலாளிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு எதிரான அமைதியான போராட்டங்களும் ஊர்வலங்களும்கூட மிகக் கடுமையாக அரசு போலீஸ் படைகளைக் கொண்டு ஒடுக்குகிறது.

இது பாட்டாளிகளின் கட்சி. உழைக்கும் வர்க்கத்தின் பங்காளிகள் நாங்கள். சமதர்ம சமுதாயத்தின் சகாக்கள் நாங்கள். ஏகாதிபத்தியத்திற்குச் சாவுமணி அடித்து சங்கு ஊதும் ஒரே கட்சி எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்க அரசோ ஏழை விவசாயிகளின் 900 ஏக்கர் விளைநிலங்களைப் பிடுங்கி இந்திய முதலாளி டாட்டாவுக்கு பாட்டாவாக்குகிறது. இந்தப் பாட்டாளிக் கட்சியை எதிர்த்து முதலாளி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் போராட்டத்தில் இறங்கியுள்ளது. அங்குள்ள விவசாயிகள் எங்களுக்குச் சோறுதான் வேண்டும். காரு வேண்டாம் என்று சட்டியுடன் போராடுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் 25 நாள் பட்டினிப் போராட்டத்தினால் கூட ஆளும் இடதுசாரி அரசாங்கத்தின் கொள்கை முடிவை மாற்ற முடியவில்லை.

புதுச்சேரி கடற்கரையில் செயற்கைத் துறைமுகத்தை உருவாக்க புதுவை அரசு தனியாருக்கு 2700 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. மீனவக் கிராமங்களில் கடல்நீர் உட்புகும் அபாயம், கடல் மாசடைவதால் மீன் வளம் அழியும் அபாயம், நிலத்தடி நீர் உப்பாக மாறும் அபாயம், சுற்றி வாழும் 10ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப்படும் அபாயம் என அபாயங்கள் தொடர்கின்றன. மீனவர்களும் விவசாயிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அரசின் முடிவை எதிர்த்து புதுவையில் போராடி வருகின்றனர். மக்கள் பிரச்சினைக்காக கட்சி அரசியல் சாராத மக்கள் போராடினாலும் இங்கு நியாயம் கிடைப்பதில்லை. எதிர்கட்சி அரசியல்வாதிகள் போராடினாலும் நியாயம் கிடைப்பதில்லை. அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக நாட்டின் வளத்தை, இறையாண்மையை முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் கொள்கை முடிவுகளை எப்படி திரும்பப் பெற வைப்பது? இந்திய ஜனநாயக நாட்டில் மக்களுக்கான வாழ்வுரிமையை நிலைநாட்டிக்கொள்ள என்ன விலைக் கொடுக்க வேண்டும்? நமக்கான நீதியை எந்த நீதிமன்றத்தில் போய் வாங்க வேண்டும்?

காந்தியின் கொள்கையான கிராம மேம்பாட்டை, கிராமப் பொருளாதாரத்தை, அஹிம்சையை பின்பற்றும் ஒரு நாடு என்று உலக அரங்கில் மார்த்தட்டிக் கொள்ளும் நம் அரசியல்வாதிகள் விவசாயிகளுக்கும், தலித்-பழங்குடி மக்களுக்கும், மீனவர்களுக்குமான தூக்குக் கயிற்றை காந்தியின் ராட்டினத்தில் நூற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

உத்திர பிரதேச மாநிலம் நிதாரியில் மொஹிந்தர்சிங் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளைத் தொடர்ந்து மாநிலத்தின் பிறப்பகுதிகளிலும் குவியல் குவியலாக எலும்புகள் கண்டெடுக்கப்படுகின்றன. பெண் குழந்தைகள் காணாமல் போவதென்பது பாலியல் சந்தைக்காக என்ற வலுவான கருத்து சமூகத்தில் ஊடகங்களாலும் அரசாலும் உருவாக்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோதிகள் மனித உறுப்புக்களை கொள்ளையடிக்கும் ஒரு பெரும் முதலாளிக்கூட்டம் இந்தியா முழுவதும் இயங்கி வருவதை அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது. குழந்தைக் கடத்தலில் தொடர்புடைய சமூக விரோதிகள் மற்றும் தனியார் மருத்துவ நிறுவன கொள்ளைக் கூட்டத்தினரை அரசும் வெகுசன ஊடகங்களும் காப்பாற்ற முயற்சிப்பதும் உண்மைகள் வெளிவராமல் அரசால் தடுக்கப்படுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏழைக் குழந்தைகளை பிஞ்சிலேயே அழித்துவிட்டு 2020ல் அப்துல் கலாம் ஏழைகளற்ற வல்லரசு இந்தியாவை உருவாக்குவார் போலிருக்கிறது.

Pin It