இந்தியா விடுதலை பெற்ற பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எதுவும் சாதி வாரிக் கணக்கெடுப்பாக இல்லை. வெள்ளையர்கள் ஆண்ட போதும், இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த மையால், 1941 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பே எடுக்கப்படவில்லை. எனவே, இப்போது நம்மிடம் உள்ள சாதிக் கணக்குகள் அனைத்தும் 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவைதான். அதை அடிப்படையாகக் கொண்டே, ஒவ்வொரு சாதியினரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தம் சாதிக் கணக்கைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டுச் சொல்கின்றனர்.

இச்சூழலில், இப்போது தொடங்கியிருக்கும் கணக்கெடுப்புப் பணியில் சாதிவாரி எண்ணிக்கை துல்லியமாகக் குறிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை வலுத்திருக்கிறது. ஆளும் கட்சியான காங்கிரசோ அக்கோரிக்கையை ஏற்கமுடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மிக அரிதான தருணங்களில் ஒன்றாக இடதுசாரிகளும், பா.ஜ.க.வினரும் ஒருங்கிணைந்து அதனை வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற அவைகளையே பலமுறை ஒத்திவைக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

விடுதலை பெற்ற இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய்படேல்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று தன் எதிர்ப்பை மிக அழுத்தமாகப் பதிவு செய்த முதல் மனிதர். அவரைப் பகைத்துக் கொள்ள விரும்பாத தலைமை அமைச்சர் நேருவும் அதற்கு உடன்பட்டார். இன்றுவரை அதே நிலை நீடிக்கிறது.

சாதியையும், சாதி ஆதிக்கத்தையும் ஒழிக்க முடியாத நாட்டில், சாதிக் கணக்கெடுப்பை மட்டும் ஒழித்து விடுவது என்ன சூரத்தனமோ நமக்குத் தெரியவில்லை. இன்று சில நாளேடுகள், சாதிவாரிக் கணக்கெடுப்பு சாதி அரசியலுக்குத்தான் பயன்படும் என்று எழுதுகின்றன. இப்போது நாட்டில், சாதியோ, சாதி அரசியலோ சற்றும் இல்லை என்பதுபோல் இருக்கிறது அவர்கள் தரும் எச்சரிக்கை. பிறப்பில், திருமணத்தில், தொழிலில் - ஏன் - சாவில் கூட சாதி இருக்கும்போது, இட ஒதுக்கீட்டில் மட்டும் ஏன் கூடாது சாதி என்பதுதான் நம் வினா. சாதி எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று ஜனநாயகவாதிகள் கோருவது, சாதியைக் காப்பாற் றுவதற்காக அன்று. சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் சாதியின் பெயரால்தான் பெற முடியும் என்பது அக்கோரிக்கையின் அடித்தளம்.

இப்போது விட்டால் இன்னும் பத்தாண்டுகள் பொறுத்திருக்க வேண்டும். அதற்குள் சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் என்ன மாற்றங்கள் வேண்டுமா னாலும் வரலாம். ஏற்கனவே நம் உரிமைகளை இழந்த காலம் மிகுதி. இனியும் காலந்தாழ்த்துவது அறிவுடைமை ஆகாது. ஆதலால் சாதிவாரிக் கணக்கெடுப்பு கண்டிப்பாய் வேண்டுமென்று, மக்களாட்சியில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஓரணியில் நின்று உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய காலகட்டம் இது.

- இளைய சுப்பு

Pin It