குஜராத் இனப்படுகொலைகள் நடந்த பிறகும் இந்துத்துவ அமைப்புகள், தலித்துகளிடையே பல புதிய திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கினர். அண்மையில் விசுவ இந்து பரிசத் இந்துத்துவாவை பின்பற்றும்படி, குஜராத்தில் உள்ள தலித் அமைப்புகளுக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள பாலடியிலிருந்து வி.எச்.பி.யினர் வெளியிட்டுள்ள கடிதம் இவ்வாறு கூறுகிறது : “இந்துத்துவா கருத்தியலை ஏற்காத அம்பேத்கரிய ஹரிஜனங்கள் இதன் மூலம் புரிந்து கொள்ளட்டும். நாங்கள் உங்களை எவ்வகையிலும் இந்த மண்ணுடன் உறவாட அனுமதிக்க மாட்டோம். இந்துத்துவா உண்மையான இந்துக்களின் கருத்தியல். அது எவ்வகையிலும் ஹரிஜனங்களை ஏற்காது.

அம்பேத்கரிய அரிஜனங்கள், பங்கிகள், பழங்குடிகள், தீண்டத்தகாத சூத்திரர்கள் என அம்பேத்கரை ஏற்கும் எவருக்கும் -இந்தியாவில் இந்துத்துவத்தை விமர்சித்துப் பேசவும், எழுதவும் உரிமை இல்லை. இப்பொழுது இந்துத்துவா தெளிவடைந்து விட்டது. இது அம்பேத்கரின் தொண்டர்களுக்கும், தீண்டத்தகாத அரிஜனங்களுக்கும் பாடம் கற்பிக்க வேண்டிய தருணம். அவர்களின் உதவிக்கு துலுக்கர்கள் கூட வரமுடியாது ("பனாஸ்கந்தா தலித் சங்காதன்' அமைப்புக்கு வந்த கடிதத்திலிருந்து).

இது மிகவும் வெளிப்படையான மிரட்டல். வி.எச்.பி.யின் நிலைப்பாட்டுடன் சங் பரிவாரின் துணை அமைப்பாக தலித்துகள் மாறிவிட வேண்டும் என்பதே அதன் நோக்கம். குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில், தலித்துகளையும் பழங்குடியினரையும் இந்துத்துவ அமைப்புகள் அடியாட்களாக பயன்படுத்திக் கொண்டதை நாம் பார்த்தோம். பா.ஜ.க.வின் கூட்டாளியான மாயாவதி, நரேந்திர மோடிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தார். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., சங்பரிவார் ஆகியவற்றின் இந்த புதிய நிலைப்பாடுகள் எந்த அடிப்படையில் நிகழ்கின்றன?

தலித் அமைப்புகளின் தலைமை குஜராத்தில் சிதறுண்டு, மிகவும் பலவீனமாக உள்ளது. 1980 மற்றும் 1985இல் இடஒதுக்கீடு சார்ந்து நிகழ்ந்த வன்முறையில் ஏராளமான தலித்துகள் தாக்கப்பட்டனர். இந்த வன்முறைக்கு பிறகு சங்பரிவார் தனது நிலைப்பாடுகளை மாற்றி, தலித்துகளை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் ஈடுபடுத்த முடிவு செய்தது. ஆனால் தலித்துகளை இந்துமயப்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. சமூகப் படிநிலையை, சாதிய சமன்பாடுகளை சிதைக்காமல் இந்துக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது தான் அவர்களின் நோக்கம்.
ஒருபுறம் இடஒதுக்கீட்டு உரிமைகளை அனுபவித்து முன்னேற்றம் கண்டுள்ள தலித்துகள் பலர், தங்களை மட்டுமே இந்தப் படிநிலையில் உயர்த்திக் கொள்ள முயல்கின்றனர்.

இவர்களின் மேநிலையாக்கத்திற்கு ஏராளமான வாய்ப்புகளை இந்துத்துவ கருத்தாக்கங்கள் வழங்கி வருகின்றன. புதிய சமூக அடையாளங்களை உருவாக்குவது, பண்பாட்டுத் தளங்களை உருவாக்குவது என இவர்களின் இந்த திட்டங்கள் தலித்துகளில் சிறு பகுதியினரை பாதித்துள்ளது. வேறு ஒரு தளத்தில் ஆசாராம் பாபு, பாண்டுரங்க சாஸ்திரி ஆகியோர் தங்களை பொதுவானவர்கள் போல் சித்தரித்துக் கொண்டு அலைகிறார்கள். மனுஸ்மிருதியை தங்களுக்குள் மறைத்துத் திரியும் இவர்கள் -தலித்துகள், பழங்குடியினரின் குடியிருப்புகளில் ஊடுருவியுள்ளது கவலைக்குரிய செய்தியாகும்.

‘சாமாஜிக் சம்ராஸ்டிரா மஞ்ச்' என்கிற அமைப்பு, இந்துக்களை ஒன்றுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. சாதியப் படிநிலைகளின் சவால்களை இந்துத்துவா பல வழிகளில் எதிர் கொள்கிறது. இந்துக்களை ஒன்றுபடுத்துவது என்றால், தற்பொழுதுள்ள எல்லா சமத்துவமற்ற நிலைகளையும் அங்கீகரிப்பது என்பதுதான் பொருள். அதனை நீங்கள் கேள்விக்கு உட்படுத்த இயலாது. உலகமயத்துக்குப் பிந்தைய சூழலில் லட்சக்கணக்கான இளைஞர்கள், தொழிலாளர்கள் வேலையின்றி இருப்பது, இந்துத்துவா சக்திகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அவர்கள் தலித்துகளைக் கொண்டே பெரும்படை அமைத்து, குஜராத் படுகொலையில் களம் இறக்கினார்கள்.

இந்துத்துவாவிற்கு தலித் கேள்விகளுடன் மிகவும் சிக்கலான உறவே உள்ளது. 19ஆம் நூற்றாண்டின் இடையிலிருந்து மெல்ல தலித் எழுச்சி தொடங்கியது. தலித்துகள் கல்வி, தொழிற்சாலை எனப் பொது வெளிக்குள் நுழையத் தொடங்கியது, ஆதிக்கச் சாதியினர் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த போக்குகளை வழிநடத்திய ஜோதிராவ் புலே தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலைத் தொடுத்த நிலப்பிரபு -மதவாத கூட்டணிதான் இந்திய தேசிய காங்கிரஸின் உருவாக்கத்தையும் எதிர்த்தது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலப்பிரபுத்துவ -பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள் களம் கண்டன. இது சமூக, அரசியல் தளங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அது தலித்துகள் வரையிலும் வந்து சேர்ந்தது. ஆதிக்கசாதி கோபம் மெல்ல கருத்து வடிவம் பெற்றது. அவை பின்னர் இந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ். என இந்து ராஜ்ஜியத்தை அடையும் இயக்கங்களாகத் தொடங்கின. நிலப்பிரபுத்துவ பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை காப்பது மற்றும் சாதிய சமன்பாட்டை மாறவிடாமல் அப்படியே வைத்திருப்பது தான் இவர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது.

குழப்பமான மொழியில் பேசுவது, இந்த இயக்கங்களின் தந்திரங்களில் ஒன்று. நாம் அனைவரும் இந்துக்கள், அதனால் நம்முன் உள்ள பிரச்சனைகளை விவாதிக்க வேண்டாம். முதலில் நம் எதிரிகளான முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் ஒழித்துக் கட்டுவோம் என்பதுதான் அவர்களது வழிமுறை. இந்தக் காலத்தில்தான் ஒருபுறம் அம்பேத்கரின் எழுச்சியும், மனுஸ்மிரிதியின் எரிப்பும் நடைபெறுகிறது. மறுபுறம்
தெளிந்த இந்துத்துவ கொள்கை எழுச்சி பெறுகிறது.

இந்து ராஷ்ட்டிரத்தை அடையும் இலக்கை சுதந்திரப் போராட்டத்திற்கு இணையாக அவர்கள் முன்வைத்தார்கள். சுதந்திரப் போராட்டம் என்பது, சமத்துவமான ஜனநாயக இந்தியாவை கனவாகக் கொண்டது. இந்துத்துவ இயக்கங்கள் அம்பேத்கரை நேரடியாக எதிர்க்காமல் அவரது சில (தீண்டாமை ஒழிப்பு) நோக்கங்களை மட்டும் தனதாக்கிக் கொண்டன. அம்பேத்கரின் ஜனநாயகக் கனவுகளை கடும் இந்துத்துவ மொழியில் சாடின.
1990 இல் மண்டல் அறிக்கை நடைமுறைப்படுத்தப்படும் சூழலில் 3ஆவது முறையாக இந்துத்துவம் தன்னை பலப்படுத்திக் கொண்டது. ராமன் கோயில், மத யாத்திரைகள் என ஆதிக்க சாதியின் அணிதிரட்டல் நடந்தது. அது மண்டலுக்கு எதிராக திசை திரும்பியது.

வாஜ்பாய் வெளிப்படையாகவே கூறினார்: அவர்கள் ‘மண்டலை' கொண்டு வந்ததால், நாங்கள் கையில் ‘கமண்டல'த்தை ஏந்தினோம். அரசியலில் மதத்தை கலந்தது, பாபர் மசூதி இடிப்பு, பம்பாய் கலவரங்கள் என இவைகளின் மீது பயணித்துதான் -பா.ஜ.க. தன்னுடைய செல்வாக்கு சரியும் பொழுதெல்லாம் -நாட்டை குருதியில் தோயச் செய்கிறது. இதுவே அவர்களின் நடைமுறையாக உள்ளது. இதுபோல் சமூக, பண்பாட்டு, அரசியல் தளங்களில் தொடர்ந்து குரோத மனநிலையுடன் அது செயல்பட்டு வருகிறது.

இந்துத்துவ கருத்தியல், ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் நலன்களுக்காகவே இயங்குகிறது. அதில் தலித் நலன்களும் அடக்கம். அம்பேத்கர் முஸ்லிம்களுக்கு எதிரானவர், அவர் அவர்களது தேசப்பற்றை சந்தேகித்தார் எனப் பல அவதூறுகளை அவர்கள் பரப்பி வருகிறார்கள். பாகிஸ்தான் குறித்த எண்ணங்கள் என்கிற அம்பேத்கரின் கட்டுரையின் பல பத்திகளை மேற்கோள் காட்டி, அதற்கு தவறான விளக்கங்களையும்
கொடுத்து வருகிறார்கள். அவரது புத்தகத்தை முழுவதுமாகப் படித்தால், எத்தனை நுட்பமாக அவர் பிரிவினை குறித்து ஆராய்ந்துள்ளார் என்பதை நாம் அறியலாம்.

அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், இந்துத்துவத்திற்கும் அம்பேத்கரின் கருத்தியலுக்குமான உறவை பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். இந்துத்துவ கொள்கைகளை தீர்மானிக்கிற அந்த உயர் பதவியில் அமர்ந்ததும் அவர் இவ்வாறு கூறினார் : “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது. மேற்கத்திய விழுமியங்களின் அடிப்படையில் அது உருவாக்கப்பட்டது. ஆகையால், நாம் அதைப் புறந்தள்ளிவிட்டு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும். அது இந்து மத நூல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.'' அம்பேத்கர் மனு ஸ்மிருதியை எரிக்கிறார்; அதற்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குகிறார்.

ஆனால், சுதர்சன் இதற்கு நேர் எதிர் திசையில் பயணிக்கிறார். இன்று காலமெல்லாம் இந்துத்துவாவையும் அதன் இயக்கத்தையும் தோலுரித்து அம்பலப்படுத்திய அம்பேத்கரையும், அவரது எழுத்துக்களையும் -ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் மேற்கோள் காட்டி தவறான விளக்கங்களை அளித்து வருகின்றன. அம்பேத்கர் இப்படி தவறாக உருவகப்படுத்தப்படுவதை தலித் அமைப்புகள் போதிய அளவு கண்டிக்கவில்லை. குறுகிய கால அரசியல் நலன்களில் அவர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள்.
Pin It