ஆதிக்கக் கருத்தியலின் செயல்பாடுகளையும் வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்வதும் அதன் உண்மை உருவத்தை உணர்ந்து செயல்படுவதும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானதே, அதற்கெதிரான அடிமட்ட எதிர்வினைக் கருத்தியலைக் கண்டு கொள்வதும், சமூக மாற்றத்தில் அதன் உண்மையான பங்கை விவரிப்பதும். கருத்தியல் பணி இவ்வகையாக இரு முகம் கொண்டது. ஒன்று கட்டவிழ்ப்பது; மற்றொன்று கட்டுவது. இந்த இரண்டும் இணைந்து செயல்படுவதே பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் விடுதலைக்கு வழி வகுக்கும்.

ஆனால், இன்றைய சமூகங்களில் மாற்றுக் கருத்தியலின் உருவாக்கத்திலும் விரிவாக்கத்திலும் தேவையான கவனம் செலுத்தப்படுவதில்லை என்பதே உண்மை. அடிமட்ட எதிர்வினை அரசியல் வெளிப்பாடுகளும் அன்றாட அரசியலாக நின்று விடுவது கண்கூடு. பெரும்பான்மையான அடிமட்ட அரசியல் – ஆதிக்கக் கருத்தியலின் உட்பட்டே விடுதலையைக் கோரி நிற்பதால், அது வெகுதூரம் செல்லவியலாது நின்று விடுகிறது. அவ்வாறு முன்னேறி செல்ல முயலும் காலத்தில், விடுதலைக்கான அம்சங்களை இழந்து நிற்பதையுமே காண்கிறோம்.

அடிமட்ட எதிர்வினை களும் ஆதிக்கக் கருத்தியலை ஏற்றுக் கொண்டே செயல்படும் அல்லது செயல்படுவதாகத் தோன்றும். இந்நிலையையே சிலர் இன்றைய காலகட்டத்தை கருத்தியலின் இறுதி நிலையாகக் கொள்கின்றனர். அதாவது ஆதிக்கக் கருத்தியல் ஆதிக்கமாகவும், ஏன் கருத்தியலாகவுமே இல்லாமல் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பண்பாடாக மாறிவிட்டதென்று கருதுகின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையும், இவ்வகையான விவரிப்பும் விடுதலைக்கு வழி கோலாது. சென்ற இதழில் எடுத்துக்காட்டியது போல, கருத்தியலை பண்பாடாக, அதாவது ஆதிக்க சக்திகளின் கருத்தியலை அனைவரின் பண்பாடாக முன்வைப்பது ஆதிக்கத்தின் ஓர் உத்தியே அன்றி வேறல்ல.

ஆகவே இந்நிலையினின்று மாறுபட்டு, இன்று பண்பாடு என்று முன்வைக்கப்படுவது பெரும்பாலும் ஆதிக்கச் சக்திகளின் கருத்தியலே என்றும், அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்கெதிரான பல சில அடிமட்டக் கருத்தியல்கள் இருந்தே தீரும் என்பதால், அதனை கோர்வையாகச் சேர்த்து, அரசியல் எதிர்வினைக்குப் பின்புலமாக நிறுத்துவது, விடுதலை கோரும் அறிவியலார் ஆற்ற வேண்டிய அரும்பணியாகும்.

எந்தவொரு சமுதாயத்திலும் ஆதிக்கம் முழுமை பெற்று நிரந்தர நிலையை அடைவதில்லை. சமூகத்துக்குள் ஆதிக்கம் முழுமை பெறாத பல இடைவெளிகள் இருக்கத்தான் செய்கின்றன. அம்மாதிரியான இடைவெளிகளிலிருந்து எதிர்வினைகள் வெடித்தெழும் சாத்தியங்களும் எப்பொழுதும் இருக்கவே செய்கின்றன. ஆகவே மேலோட்டமாகத் தென்படாவிட்டாலும் ஆதிக்கத்தின் அடித்தளத்தில் நீதி பற்றியதொரு பயம் அடர்ந்தே கிடக்கும். ஆதிக்கத்தின் வழக்கமான எதிர்வினைகளிலிருந்து நாம் இதை கண்டுகொள்ளலாம். அடிமட்ட எதிர்வினைகளின் மிகச்சிறிய முன்முயற்சிகளும் ஆதிக்கத்தின் அளவுக்கதிகமான எதிர்வினையை வெளிக்கொண்டு வருவது, அதன் உள்நடுக்கத்தையே காட்டுகிறது.

இதன் மூலம் தெரிவது என்ன? விரிவாக்கப்படாததும் அமிழ்ந்து கிடப்பதுமான எதிர்வினைக் கருத்தியலின் ஆற்றலை, ஆதிக்கம் விரைவில் புரிந்து கொள்வது போல, அடிமட்ட சக்திகள் கூட தெரிந்து கொள்வது இல்லை. ஆகவே ஆதிக்கம் பயப்படும்படியானதும், சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டதுமான கருத்தியல், அடிமட்ட மக்களின் வாழ்விலும் சமூக அரசியல் முன்முயற்சிகளிம் புதைந்து கிடக்கிறது என்று உணர்ந்து செயல்படுவதே முதல் படி.

இரண்டாவதாக, ஆதிக்கக் கருத்தியல் தெளிவாகவும் முழுமையாகவும் தென்படுவது போல், அடிமட்டக் கருத்தியல் தென்படுவதுமில்லை; உணரப்படுவதுமில்லை. அடிமட்டக் கருத்தியல் உதிரியாகவே வெளிப்படும் என்று சிலர் கருதுகின்றனர். இது, ஓரளவுக்கு மட்டுமே உண்மையாகும். அடிமட்டக் கருத்தியலின் கூர்மையையும், ஆழ அகலங்களையும் இடையிடையே தோன்றும் அடிமட்ட அறிவியலாரின் உரைகளிலும் எழுத்துக்களிலும் காணலாம்.

இதனாலேயே ஆதிக்கம் அடிமட்ட அறிவியலாரை அப்புறப்படுத்தி, சாதாரண மக்களைத் தன் பக்கம் இழுப்பதில் ஆர்வம் காட்டுகிறது. தவிரவும் ஆதிக்கக் கருத்தியலின் உள் பலமே, அதனை எவ்வளவு தூரம் அடிமட்டத்தார் உள்வாங்கிக் கொண்டனர் என்பதில் அடங்கியிருக்கிறது. ஆகவே, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் எழுச்சிகள் கூட, ஆதிக்கக் கருத்தியலுக்குட்பட்டே, வெறுமனே பொருளாதார மேம்பாட்டை நோக்கிப் போராடுகிறது. உழைக்கும் மக்களின் எழுச்சியின் பின்புலமானதும் பக்கபலமானதுமான அடிமட்டக் கருத்தியலை வெளிக்கொணர்ந்து நிலைநாட்டி, அதனை அவர்களே ஏற்றுக் கொள்ளும்படி செய்வது எளிதல்ல. ஆனால் அது மிகத் தேவையான ஒன்று.

மூன்றாவதாக, அடிமட்டம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அமைதி காப்பதால், அடிமட்டம் ஒரு வாயில்லா ஜீவனென்றும் அதன் கருத்துக்களையும் தேவைகளையும் மேல்மட்டமே உச்சரிக்க வேண்டுமென்றும் சிலர் வாதிடுகின்றனர். இந்த நிலையிலிருந்து, சமூக – அறிவியல் களத்தில் அடிமட்டக் கருத்தியல் என்ற போர்வையில், பல ஆதிக்கக் கருத்தியல்களே உலவுகின்றன. ஆனால், நாம் முன்கூறியபடி ஆதிக்கம் எந்தவொரு கால கட்டத்திலும் முழுமை பெறுவதில்லை என்பது உண்மையானால், அடிமட்டமும் முழுமையாக அமைதி காப்பதில்லை என்பதை உணரலாம். திமிறி எழும் சில கணங்கள் அடிமட்டத்தின் வாழ்வில் நேரிடவே செய்கின்றன. இம்மாதிரியான கணங்களில் எழும் கருத்துக் குவியல்களும் அவற்றை உச்சரிக்கும் அடிமட்ட அறிவியலாருமே, போலி கருத்தியல்களைத் தோலுரித்துக் காட்டக் கூடிய திறமை கொண்டவராகின்றனர். இதனாலேயே அடிமட்டத்தின் ஆழத்திலிருந்து சுயமாக எழும் எழுத்துக்களும் பேச்சுக்களும், மாற்றத்திற்கானதொரு அரசியலையும் கருத்தியலையும் உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். இவர்களையும், இவர்களது கருத்துக் குவியல்களையும் தோண்டியெடுத்து, காலத்திற்கேற்றபடியும், ஆதிக்கக் கருத்தியலுக்கு எதிர்வினையாகவும் முன்னிலைப்படுத்திக் கொண்டாடுவது, மாற்றத்திற்கான எதிர்வினைக் கருத்தியலின் கடமையேயாகும்.

நான்காவதாக, அடிமட்டக் கருத்தியல் எங்கும் எப்பொழுதும் ஒரே சீராக சமூகத்துள் வெளிப்படுவதில்லை. அடிமட்ட சமூகக் குழுக்கள் ஆதிக்கத்துள் பல்வேறு நிலைகளிலும் கோணங்களிலும் தளைப்பட்டு கிடப்பதால், அவர்களிடமிருந்து எழும் கருத்தியல் துணுக்குகளும் சீராகவோ, ஒருமுகத்தன்மை கொண்டோ இருப்பதில்லை. இதனால் அடிமட்டக் கருத்து வெளிப்பாடுகளுக்குள், செயல் அளவில் முரண்பாடுகள் எழுவது இயல்பு. இந்த செயல் அளவிலான முரண்பாடுகளை, கருத்தியல் அளவிலான முரண்பாடுகளாகக் காட்ட விழைவதும், ஆதிக்கத்தின் அருஞ்செயலே. மேலோட்டமான அல்லது செயல் அளவிலான முரண்பாடுகளையும் கடந்து அவர்களது ஒட்டுமொத்தமான அரசியல், பொருளாதார அடிப்படையில், கருத்தியல் ஒற்றுமையைத் தேடி வெளிக்கொணர்வது இன்றைய தேவையாகும். இதனால் அடிமட்டத்துக்குள் செயல் அளவிலாக ஏற்படும் முரண்பாடுகளை மூடிமறைக்க வேண்டுமென்பதோ அல்லது அவற்றைக் கண்டுகொள்ளாமலிருக்க வேண்டுமென்பதோ பொருளல்ல.

செயல் அளவிலான முரண்பாடுகள் செயல் அளவிலேயே அரசியல் செயல்பாடுகளின் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும். ஆனால், செயல் அளவிலான முரண்பாடுகளை கருத்தியல் அளவிலான முரண்பாடாக நோக்குதலோ அல்லது மாற்றுதலோ முறையன்று. ஆதலால் காரிய அளவிலான செயல்பாடுகளும் கருத்தியல் வெளிப்பாடுகளும் ஒரே இயங்கியலுக்குள் வராமல் ஓரளவுக்குத் தனித்தனியே செயல்பட வேண்டுமென்பதே கருத்து. கருத்தியல் விரிவாக்கமும் தெளிவாக்கமும் அன்றாட அரசியலையே ஒட்டிச் செல்லாமல், அதன் பக்கபலமாக, ஆனால் தனித்து இயங்க வேண்டும் என்பதே உண்மையான தேவை.

அய்ந்தாவதாக, எல்லா கருத்தியல்களையும் போலவே அடிமட்டக்கருத்தியலும் அந்தந்த காலத்திற்கும், இடத்திற்கும் ஆதிக்க – அடிமட்ட தொடர்புகளுக்கும் உட்பட்டே வெளிப்படும். அதாவது, ஆதிக்கத்தின் பாதிப்பு அடிமட்டத்திலும் ஏற்படும் என்பதால் அடிமட்டத்திலிருந்து எழும் எதிர்வினைக் கருத்தியல் நூற்றுக்கு நூறு விழுக்காடு, தூய்மையாகவும், ஆதிக்கத்தின் பாதிப்பு அற்றதாகவும் இருக்க வேண்டும் என்று கோருவது வரலாற்றிற்கு எதிரிடையானது. அடிமட்டக் கருத்தியலின் தூய்மையையும் அதன் தன்னியல்பாக எழும் தன்மையையும் தீர்மானிக்க வேண்டியது, மேல்மட்டத்தினர் அல்ல. மாறாக, அடிமட்டத்தினரே. அவர்கள் தம் சமூக, அரசியல் செயல்பாடுகளின் மூலம் தமது கருத்தியல்களைக் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடிமட்டக் கருத்தியலின் உச்சரிப்புகளில் குறை காண்பது, ஆதிக்க அறிவியலாளரின் ஆனந்தமான பொழுதுபோக்கு. இதற்கு முன்னால், அடிமட்ட அறிவியலார் வாயடைத்து நிற்பதும் கண்கூடு. அடிமட்ட அறிவியலாரின் கருத்துக்களில் உள்ள குறைகளை நிலையாகக் கொண்டாட வேண்டுமென்பது பொருளல்ல. அப்படிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது சுயமான, செயல்பாடுகளின் அடிப்படையிலான விமர்சனத்தின் மூலமாகவே இருக்க வேண்டும் அடிமட்டக் கருத்தியலின் உச்சரிப்புகளில் பல, ஆதிக்க மொழியிலேயே வெளிவருவது இயல்பு, தவிர்க்க முடியாதது. ஆனால் இம்மாதிரியான ஆதிக்க மொழியிலேயே வெளிப்படும் அடிமட்டக் கருத்தியலின் சமூகப் பொருள் மாறுபட்டே நிற்கும் என்பது உணரப்படுவதில்லை; அல்லது ஆதிக்கம் இம்மாதிரியான வேறுபட்ட பொருள் வெளிப்பட விடுவதில்லை.

எனவே அடிமட்டக் கருத்தியலின் தன்மைகளைப் புரிந்து கொள்வதும் அதன்கூறுகளை எடுத்துக் கோர்வையான சிந்தனையாகத் தொகுப்பதும் பொருள் கோள் முறைப்பயிற்சியேயாகும். மேலோட்டமாக, அடிமட்டக் கருத்தியலின் குறைகளாகத் தென்படுபவை பல. இம்மாதிரியாக, ஆதிக்க மொழி மூலம் உச்சரிப்பதின் விளைவேயன்றி வேறல்ல. பழக்கத்திலிருக்கும் சொற்களும், சொற்றொடர்களும் ஆதிக்கத்திற்கு தொடர்பில்லாத, நடுநிலைப் பொருள்கள் அல்ல. அவை யாவும் ஆதிக்கத்தின் ஓர் அம்சமே. இம்மொழியை எதிர்வினையாக அடிமட்டக் கருத்தியலின் உருவாக்கத்தில் பயன்படுத்தும்போது பொருள் மாறுபட்டும், சொல் திரிந்தும் வெளிப்படுவது இயல்பே. ஆகவே, அடிமட்டக் கருத்தியலின் உருவாக்கம் என்பது, அதனை உச்சரிக்கும் புதியதொரு மொழியின் உருவாக்கமும் ஆகும்.

ஆறாவதாக, அடிமட்டக்கருத்தியல் எப்பொழுதுமே ஒரு விமர்சனக் கருத்தியலாகவே வெளிப்படும். விமர்சனம் என்ற சொல்லின் ஆழத்தை முறையாகப் புரிந்து கொள்வது முக்கியம். விமர்சனம் என்பது ஓர் அறிவியல் உத்தி, முழுமையான கண்ணோட்டம், தன்னைச் சுற்றிய சமூகத்தில் கொடுக்கப்பட்டவை – சமூக உறவுகள், உற்பத்தி முறைகள், பகிர்ந்தளிக்கும் செயல்பாடு – தானõகவே ஏற்பட்டவைஅல்ல. ஆதிக்கத்தின் நலனுக்காக, ஆதிக்கச் சக்திகளால் ஏற்படுத்தப்பட்டவை. ஆகவே அவற்றைத் தள்ளிவிட்டு அனைவரின் நலனுக்காக மாற்றியமைத்து, வேறொரு அறிவியல் கண்ணோட்டத்தை முன்னிலைப்படுத்துவதே விமர்சனக் கண்ணோட்டம். மரபு வழிவரும் அறிவியல் ஆதிக்க அறிவியல். அது சமூக உறவுகளை விளக்கவே பயன்படுவது. அதற்கு மாறாக, விமர்சன அறிவியல் அடிமட்ட எதிர்வினை அறிவியல். அது, சமூக உறவுகளின் பகுத்தறிவுக்கு மாறான தன்மையை உணர்ந்து, அதனை பகுத்தறிவுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் உந்துதலை தன்னகத்தே கொண்ட சமூக அறிவியல். இம்மாதிரியான விமர்சனத்தின் உள்ளிருத்தலைக் கொண்டே அடி மட்டக் கருத்தியலை இனங்கொண்டு கொள்ளலாம்.

விமர்சனத்தின் உட்கிடக்கை அடிமட்டக் கருத்தியலின் முக்கிய அம்சமெனில், அவ்விமர்சனம் வாழ்ந்து பட்ட போராட்டத்தின் மூலம் கண்டுணரப்பட்ட விமர்சனமாக இருக்க வேண்டும். உழைப்பில் உயிர் வாழும் மக்களின் அனுபவங்களின் நடுவிலிருந்து எழும் விமர்சனமாக இருக்க வேண்டும். அதாவது, சில அறிவாளிகள், புத்தகவாசிப்பின் மூலம் கண்டுணர்ந்து, அடிமட்டத்தின் மீது திணிக்கும் விமர்சனமாக இருந்துவிடக்கூடாது. புறத்திலிருந்து திணிக்கப்படும் விமர்சனம் எவ்வளவுதான் அறிவியலுக்கு ஒத்தபடியாயிருப்பினும் ‘உண்மை'யாகவே இருப்பினும் விடுதலையைத் தேடி நிற்கும் உழைக்கும் மக்களின் மனதில் எதிரொலிக்காது. அதாவது, அடிமட்டத்தின் கருத்தியலாக அது அமையாது. பல தீவிரமானதும் அடிமட்டத்திற்காகவே என்று பேசப்படும் கருத்தியல்களும் வேர்கொள்ள இயலாமல் போவதும் இதனால்தான்.

ஏழாவது, ஆதிக்கத்தை நோக்கி எதிர்ப்படும் அடிமட்டக் கருத்தியல் எப்பொழுதுமே, எங்குமே, ஆதிக்கத்தால் விழுங்கிவிடப்படும் ஓர் இக்கட்டான நிலையினின்று செயல்படுகிறது. இதனால் அடிமட்டக் கருத்தியல் தனது எதிர்த்தன்மையையும் தனித்தன்மையையும் காத்துக் கொள்ள வேண்டி, இடைவிடா விழிப்புணர்வுடன் செயல்பட நிர்பந்திக்கப்படுகிறது. இந்த இடைவிடா விழிப்புணர்வு இரண்டு வழிகளிலாவது வெளிப்பட வேண்டும். ஒன்று, தொடர்ந்து, ஆதிக்கத்தின் புள்ளிக்குப்புள்ளி எதிராகச் செயல்படும் படியாக, முறைப்படுத்துதல் - உச்சரிப்பும் - மறு உச்சரிப்பும். ஆதிக்கக் கருத்தியல், எவ்வாறு ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, இடைவிடா மாற்று, மறு உச்சரிப்பில் ஈடுபடுகிறதோ, அதேபோல் அடிமட்டமும் தனது எதிர்த்தன்மையைத் தக்க வைப்பதற்காகவும் எப்பொழுதுமே ஒருபடி முன் செல்வதற்காகவும் மறு உச்சரிப்பில் ஈடுபட வேண்டும்.

இரண்டு, இது அடிமட்டக்கருத்து, இது ஆதிக்கக் கருத்து என்று ஒரு வரையறுப்பைத் தெளிவாக்கிக் கொண்டே வரவேண்டும். ஆதிக்க - அடிமட்டக் கருத்துக்களை ஒற்றுமைப்படுத்துதல் ஆதிக்கத்தின் இயல்பானால், அவை இரண்டையும் விடாமல் வேற்றுமைப் படுத்திக் காட்டுவது அடிமட்டக் கருத்தியலின் தேவையாகிறது. இதன் காரணமாகவே, அடிமட்ட அன்றாட அரசியலும் அடிமட்டக் கருத்தியல் உச்சரிப்பும் சிறியதொரு இடைவெளி விட்டே இயங்க வேண்டியுள்ளது. செயல் அளவில் அடிமட்டமும் ஆதிக்கமும் ஒட்டியோ வெட்டியோ செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆனால் கருத்தியல் அளவில் அவை இரண்டும், ஆனால் சிறப்பாக அடிமட்டக் கருத்தியல் வளைந்து கொடுக்காத ஒன்றாக செயல்பட்டாலே, அதன் வரலாற்று இலக்கு வெற்றியடையும். இதனால், கருத்தியலை உச்சரிக்கும் அறிவியலாருக்கும், அடிமட்ட எதிர்ச்செயல்பாடுகளில் இயங்கும் அரசியலாருக்கும் இடையிலான தொடர்பு மிகவும் நாசூக்காகவே வெளிப்படும்.

எட்டாவதாக, ஆதிக்கத்தை நோக்கிச் செயல்படும் அடிமட்டக் கருத்தியல் உதிரியானதாக, தொடர்பற்றதாக, அண்மைக் காலத்திலானது என்றும், புறத்திலிருந்து கடன் வாங்கப்பட்டதென்றும் மேல்மட்டத்தினரால் காட்டப் பெறும் சந்தர்ப்பத்தில், உண்மையில் அது, வரலாற்றுத் தொடர்ச்சி கொண்டதாகவும், ஆழ்மட்டத்தில் கோர்வையானதாகவும், ஆதிக்கம் செலுத்தப்படும் எல்லா இடங்களிலும் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ வெளிப்படுவதாகவும், ஆதிக்கத்தை விடக்கூர்மையான தொலைநோக்கு கொண்டதாகவும், இறுதியாக பண்பாட்டின் உண்மையான அடித்தளமாகவும் முறைப்படுத்தப்பட வேண்டும். மேலாதிக்கத்தின் வேர்கள் வரலாற்றிலும், பூகோளத்திலும் ஊன்றப் பெற்றிருப்பதால், அடிமட்டக் கருத்தியலின் இலக்கும் அவற்றை நோக்கியே அமைய வேண்டும். இதற்கான ஆழ்ந்த அகன்ற வரலாற்று, பண்பாட்டியல் ஆய்வுகள் தேவை. இவ்வகையான ஆய்வுகளும், மரபியல் வழிவந்த ஆய்வுகளாக இல்லாமல் மக்கள் பங்கு பெறும், பெருவாரியாக நிர்ணயிக்கும் ஆய்வு களாக வெளிப்படவேண்டும்.

மேற்கூறியவற்றால் வெளிப்படும் ஓர் உண்மை என்னவென்றால், அடிமட்டக் கருத்தியல் என்பது பெரும்பாலும் , உருவாக்கப்பட வேண்டியதொன்று. காலந்தோறும் காலத்திற்கேற்றவாறு மறு உச்சரிப்பு செய்யப்படவேண்டிய தொன்று. இதனை எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாகவும் அகலமாகவும் எடுத்துச் செல்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவே அடிமட்ட அரசியல் வெற்றி பெறும். பெற்ற வெற்றிகளும் நிலைப்படும். இறுதியாக, அடிமட்டம் என்பதும் ஓர் அறிவியல் கருத்துப்படிமமே. செயல் அளவில் அடிமட்டம் பலதரப்பட்டது. முரண்பாடுகளின்றி நிர்ணயிக்க இயலாதது. எது அடி? எது மட்டம்? எந்த மட்டத்திலிருந்து அடி தொடங்குகிறது, ஆதிக்கம் முடிவடைகிறது.

இக்கேள்விகள் யாவும் செயல்பாடுகள் மூலம் அரசியலில் நிர்ணயிக்கப்படுபவை. இவற்றைக் கருத்தளவில் முடிவு செய்வதென்பது எளிதானதல்ல. அதுவும் படிநிலைப்படுத்தப்பட்ட சமூக அமைப்பு கொண்ட இந்தியா போன்ற தேசங்களில் இக்கேள்வி மிகச்சிக்கலாகிறது. இதனை நிர்ணயிக்கும் போது, ஆதிக்கம் என்பது என்ன? அது ஒருதரப்பட்டதா? இல்லை பலதரப்பட்டதா? ஓர் பண்பாட்டில் ஒரு ஆதிக்கமா அல்லது பல, அதுவும் உள் முரண்பாடுகளைக் கொண்ட ஆதிக்கங்களா? ஒரு ஆதிக்கம், அதற்கு எதிரிடையான ஓர் அடிமட்டம் என்று பேசப்பபடும் பொழுது, அதன் பொருள் என்ன? இதற்கான விவரங்களை, குறிப்பிட்டதொரு சமுதாயத்தை முன்வைத்தே ஆராய முடியும். சாதிய சமுதாயத்தின் முரண்பாடுகளை ஆய்வு செய்யும் சந்தர்ப்பத்தில் இக்கேள்விகளை மறுபடியும் எழுப்புவோம்.

-இன்னும் வரும்
Pin It