நினைவிருக்கிறதா? தனது பதிவு மூப்பை உறுதி செய்ய வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 15.12.2006 அன்று சென்ற எழுத்தாளர் அழகிய பெரியவன், அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக இருந்த அ.கு.சங்கரன் என்பவரால் தாக்கப்பட்டதும், அவமானப்படுத்தப்பட்டதும்.

Azhagiya Periyavan
இதை எதிர்த்தும், கண்டித்தும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள், தமிழகம் முழுவதும் போர்க்கொடி தூக்கின. இதன் உச்சமாக, வேலூரில் பேராசிரியர் அய். இளங்கோவன் தலைமையில் 14.2.2007 அன்று வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரிலேயே, அதிகார வர்க்கம் அதிர அதிர பறையடித்து பறை முழக்கப் போர் நடைபெற்றது. அழகிய பெரியவனை இழிவுபடுத்திய சங்கரன், தான் ஒரு தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்று செய்த பொய்ப் பிரச்சாரம், தோழர்களிடையேயும் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், உண்மையில் அவர் தலித் அல்ல.

ஒரு தலித் எழுத்தாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடும் எதிர்ப்புகள் வெளிப்பட்ட போதும், வேலூர் மாவட்ட காவல் துறையும், அரசு அதிகாரிகளும் நியாயத்திற்கு எதிராகவே நின்றனர். தன்னைத் தாக்கி, அவமதித்து இரண்டு மணி நேரங்களுக்கு மேல் அலுவலகச் சிறையில் அடைத்து வைத்திருந்த அதிகாரி சங்கரன் மீது, அன்றே வேலூர் காவல் நிலையத்தில் அழகிய பெரியவன் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகார் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் தந்த காவல் துறை, அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தது.

ஆனால் மிகவும் அநியாயமாக, குடித்துவிட்டு வந்து அரசுப் பணியை செய்யவிடாமல் தகராறு செய்து தடுத்ததாக அழகிய பெரியவன் மேல் அ.கு. சங்கரன் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தியது. 18.1.2007லிருந்து வழக்கு வேலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. முதல் இரு வாய்தாக்களுக்கு சம்மன் வழங்கப்படவே இல்லை. பின்னர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்க, பிணையில் வந்து வழக்கு நடத்தினார் அழகிய பெரியவன்.

இதற்கிடையில் 18.12.2006 அன்று மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையரிடம் அழகிய பெரியவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற துறை விசாரணையில், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டார் அ.கு. சங்கரன்.

அழகிய பெரியவனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அரசு சாட்சிகளாக 14 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் 10 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும், நடந்த உண்மையை யாருக்கும் பயப்படாமல் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பொய்யாகப் புனையப்பட்ட வழக்கினை நியாயத்தின் வலிமையோடும், தளராத உள்ளத்துடனும் சந்தித்தார் அழகிய பெரியவன். அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் எம்.ஈ. கணபதி, நியாயங்களை நீதிமன்றத்தில் சிறப்பாக எடுத்துரைத்தார். 20.6.2008 அன்று நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வெளியிட்டது. உரிமையைத் தட்டிக் கேட்ட அழகிய பெரியவனுக்கு ‘மாண்புமிக்க விடுதலை'யை (Honorable Acquittal) வழங்கியது நீதிமன்றம். இத்தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கு வெளியிடுகிறோம்.

முன்னிலை : திரு. என். எஸ். சிறீவத்சன், பி.எல்., நீதித்துறை நடுவர் எண்4, வேலூர். சுருக்கு விசாரணை வழக்கு எண்.96/2007. 2008ஆம் ஆண்டு சூன் திங்கள் 20ஆம் நாள் வெள்ளிக்கிழமை. அரசுக்காக, வேலூர் வடக்கு ச ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர், கு.எண்.750/2006 - முறையிடுபவர் (எதிர் ) சி. அரவிந்தன், வ.38, த/பெ. சி. சின்னத்துரை – எதிரி

“உண்மையில் வழக்கு சம்பவம் நடைபெற்றவுடனேயே, வழக்கு சம்பவத்தினைப் பற்றி புகார் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு புகார்தாரர் செய்யாமல், புகாருக்கு அடுத்த நபர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, வடிவமைத்து தயார் செய்ததாக கூறியுள்ளது, முற்றிலும் தவறானது என்று நீதிமன்றம் கருதுகிறது. வழக்கு சம்பவம் நடைபெற்றவுடனேயே, புகார்தாரர் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் நிலையில், உண்மையில் புகார் உடனடியாக கொடுத்திருக்க வேண்டும். எனவே, புகாரில் உள்ள சங்கதிகளைப் பரிசீலனை செய்த போது வழக்கின் எதிரி குடித்துவிட்டிருந்ததாகக் கூறியுள்ளார். ஆனால், எதிரி குடித்திருந்தாரா? இல்லையா? என்பதற்காக எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்து, அரசு தரப்பில் சான்றிதழ் எதுவும் முன்வைக்கப்படவில்லை. எனவே வழக்கில் அடிப்படை ஆவணமான புகாரே ஜோடனை செய்து பிறகு தரப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது. மேற்படி புகாரும், முதல் தகவல் அறிக்கையில் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கருதுகிறது.

மேலும் வழக்கின்பாற் அன்றைய நிலையில் சம்பவம் நடக்கும் போது, காவல் நிலைய தலைமைக் காவலர்கள் பணிபுரிந்து வந்துள்ளார்கள். மேற்படி அவர்களை நீதிமன்றம் முன்னர் அரசு தரப்பில் சாட்சிகளாக விசாரிக்கப்படாதது ஒரு மிகப்பெரும் குறையே. எனவே, சம்பவம் உரிய நேரத்தில் நடைபெற்று, உரிய நபர்கள் முன்னிலையில் நீதிமன்றம் முன்னர் சாட்சிகளாக விசாரிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாகவே நீதிமன்றம் கருதுகிறது. புகார் குறித்தே நீதிமன்றம் முன்னர் நிறைய சந்தேகம் உருவாகியுள்ளது.

அடுத்தபடியாக சம்பவ நிகழ்வு பற்றி ஆராய வேண்டியது அவசியமாகிறது. கடந்த சம்பவத்திற்கு யார் வழக்கின்பாற் வியாஜ்ஜிய மூலம் என்பதனையும் பரிசீலனை செய்ய வேண்டியதாக உள்ளது. சம்பவம் நடந்த 15.12.2006 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றதாக இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள கூற்று. வழக்கின்பாற் சம்பவம் குறித்து அரசு சாட்சி 1 (அ.கு. சங்கரன்) ஆனவர் அவரது குறுக்கு விசாரணையின் போது, மேற்படி நீதிமன்றம் முன்னர் கூறியுள்ள சங்கதிகளின்படி பரிசீலனை செய்ததில், சம்பவம் குறித்து, வழக்கின்பாற் எதிரியானவர் அ.சா.1அய் பார்த்து ‘நீ ஒரு யூஸ்லெஸ் ஆபிசர், குருட்டுப் பயலே' என்று திட்டியதாகக் கூறியுள்ளார். மேலும் 2 மணி நேரம் அ.சா.1வின் அலுவலகப் பணியினை செய்யவிடாமல் அவதூறாகப் பேசியதாகவும், அடித்ததாகவும் கூறியுள்ளார்.

சம்பவத்தினை அன்றைய பணியிலிருந்த இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஜெயக்குமார், ராமமூர்த்தி, ராஜேந்திரன், பிரபாகரன், அலுவலக உதவியாளர் சம்பத் மற்றும் தற்காலிக இளநிலை உதவியாளர் வரதராஜ் ஆகியவர்கள் நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளனர். எனவே இவர்களின் சாட்சியங்களைப் பரிசீலனை செய்தவரையில், அனைவருமே பிறழ் சாட்சிகளாக நீதிமன்றம் முன்னர் சம்பவத்தினை தொடர்புபடுத்தாது, அரசு தரப்பிற்கு உதவும் வகையில் சட்சியங்கள் அளிக்கவில்லை. எனவே அ.சா.1வும் குறுக்கு விசாரணையின் போது சம்பவம் குறித்து யார் யார் விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் தான் "லிஸ்ட்' போட்டுக் கொடுத்ததாகக் கூறியுள்ளார். மேலும் அ.சா.1இன் அறையில் உட்புறத்தில் காஞ்சனா, சுருக்கெழுத்தாளரின் கணினி அறை உள்ளதாக அ.சா. 1 தெரிவித்துள்ளார். வழக்கின்பாற் சம்பவத்தினை நேரடியாக கண்ணுற்றுப் பார்க்க வாய்ப்புள்ள சாட்சி இவர்.

நீதிமன்றம் முன்னர் காஞ்சனா என்பவர் முன் விசாரணையின் போது பணியிலிருந்த போது தோராயமாக 12.00 மணி இருக்கும் என்றும், அ.சா.1இன் ரூமிற்கு பக்கத்தில் கம்ப்யூட்டர் ரூம் இருக்கும் என்றும், சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது அ.சா.1க்கும், எதிரிக்கும் (சி. அரவிந்தன்) தகராறு நடந்து கொண்டிருந்தது என்றும், அ.சா.1 எதிரியை "யூஸ்லெஸ்' என்று திட்டிவிட்டதாகவும் அப்போது எதிரி எவ்வாறு அப்படி திட்டலாம் என்று கேட்டபோது, அங்கிருந்தவர்கள் அனைவரும் எதிரியை சமாதானப்படுத்தியதாகக் கூறி பிறழ் சாட்சியாக மாறியுள்ளார்.

எனவே இந்த சாட்சியின் பாற் பரிசீலனை செய்தவகையில் வழக்கு குற்றத்திற்கு வியாஜ்ஜியமூலமாக இருந்தவர் அ.சா. 1 தான் என்பது தெரிய வருகிறது. மேலும் இவர் மட்டும் இவ்வாறு கூறவில்லை. பிறழ் சாட்சியாக மாறியுள்ள அனைவரும் முதன் முதலில் அ.சா. 1 தான் எதிரியை திட்டியதாகக் கூறி பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளார்கள். எனவே அனைத்து சாட்சிகளுக்கும், அ.சா. 1க்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை. மேலும் எதிரிக்கும், சாட்சிகளுக்கும் இடையே எந்தவிதமான தகராறும் இல்லை. எனவே இவர்களின் சாட்சியங்கள் ஒத்து ஒருமித்த சாட்சியங்களாக உள்ளன. மேற்படி அ.சா. 1 வேலை தடைப்பட்டதற்கும், அ.சா.1ம் காரணம் என்று கூறியுள்ளார்கள்.மேலும் அ.சா.1 குறுக்கு விசாரணையின் போது துறை நடவடிக்கை காரணமாகத் தான் அவரை மாறுதல் செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், மேற்படி சம்பவம் உண்மையில் இவரது செயல்களினாலும் நடைபெற்றுள்ளது என்பதற்கும், மேலும் வழக்கு உருவாக இவரும் ஒரு வியாஜ்ஜிய மூலமாக இருந்துள்ளார் என்பதற்கும் நீதிமன்றம் முன்னர் போதிய ஆதாரம் உள்ளது.

மேற்படி வழக்கில் குமார நெடுஞ்சேகரன் என்பவர் தனிப்பட்ட சாட்சியாக விசாரிக்கப்பட்டுள்ளார். அவரும் நீதிமன்றம் முன்னர் பிறழ் சாட்சியாக மாறியுள்ளார். மற்ற இரண்டு முக்கிய பார்வை மகஜர் சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக உள்ளார்கள். எனவே வழக்கின்பாற் உரிய முறையில் சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டு, உரிய நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், நீதியின் பாற் பிறழ் பட்டு, புலன் விசாரணை செய்துள்ளதாகவும், எனவே அந்தப் புலன் விசாரணை பாகுபாட்டு நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிமன்றம் முடிவு செய்கிறது. எனவே வழக்கின்பார் எதிரி பேரிலான குற்றமானது அரசு தரப்பில் சாட்சிய சங்கதிகளுடன் சந்தேகத்திற்கு இடமின்றி சரிவர நிரூபணம் செய்யப்படவில்லை என்று முடிவு செய்து, வழக்கில் எதிரி குற்றவாளி இல்லை என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

முடிவில் வழக்கின் எதிரி இந்தியதண்டனை சட்டப் பிரிவு 353 இன் படியான குற்றத்திற்கு குற்றவாளி இல்லை என்று முடிவு செய்து எதிரியை கு.வி.மு.ச. 255(1)இன் படி விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.”
Pin It