நால்வர்ண அமைப்பு நடைமுறைச் சாத்தியமானது என்றே கொண்டாலும் கூட, அது மிகுந்த கேடுவிளைவிக்கும் அமைப்பு என்றே நான் கூறுவேன். பார்ப்பனர்கள் அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்; சத்ரியர்கள் ஆயுதம் தரிக்க வேண்டும்; வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும்; சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும் என்கிற பிரிவினை, பார்வைக்கு தொழில் பிரிவினை போல தோன்றுகிறது. இந்தக் கோட்பாடு சூத்திரர்கள் இன்னின்னதைச் செய்யத் தேவை இல்லை என்று கூறுகிறதா அல்லது செய்யக் கூடாது என்று ஆணையிடுகிறதா என்பது ஒரு சுவாரசியமான கேள்வி ஆகும். நால்வர்ண அமைப்பின் ஆதரவாளர்கள் சூத்திரர்களுக்கு முதல் அர்த்தத்தையே கற்பிக்கின்றனர்.

மற்ற மூன்று வர்ணத்தாரும் சூத்திரனுக்கு ஆதரவாக இருக்கும்போது, சூத்திரன் ஏன் தமக்கென சொத்து சம்பாதிக்க அல்லல்பட வேண்டும் என்கிறார்கள். சூத்திரன் எழுதப் படிக்க தேவைப்படும்போது பார்ப்பனரிடம் செல்ல முடியும் என்கிற நிலையில், தான் கல்வி பெற வேண்டும் என்று சூத்திரன் ஏன் கவலைப்பட வேண்டும் என்கிறார்கள். சூத்திரனைப் பாதுகாப்பதற்கு சத்திரியன் இருக்கையில் சூத்திரன் தன்னைக் காத்துக் கொள்ள ஆயுதம் தரிக்க ஏன் ஆசைப்பட வேண்டும் என்கிறார்கள்.

இந்த விளக்கப்படி, நால்வர்ண அமைப்பு, சூத்திரனை பராமரிப்புக்கு உட்பட்டவர்களாகவும் மற்ற மூன்று வர்ணத்தாரையும் அவனுடைய காப்பாளராகவும் பார்க்கிறது. இந்த விளக்கப்படி, நால்வர்ணக் கோட்பாடு - எளிய, ஏற்றம் தருகிற, வசீகரமான கோட்பாடாகத் தோன்றுகிறது. வர்ணக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் சொல்வதுபோல, அக்கோட்பாட்டின் உண்மையான கருத்தோட்டம் இதுதான் என்றால், அந்த அமைப்பு நம்பகமானதும் அல்ல; நாணயமானதும் அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது.

பார்ப்பனர்கள் அறிவைப் பெருக்கவும், சத்திரியர்கள் போர்த்திறனை வளர்க்கவும், வைசியர்கள் பொருளாதார முயற்சிகளில் ஈடுபடவும் தவறினால் என்ன நடக்கும்? இதற்கு மாறாக, இந்த மூன்று வர்ணத்தாரும் தத்தம் வேலைகளை கவனித்துக் கொண்டு, சூத்திரருக்கோ அல்லது இந்த மூன்று வர்ணத்தாரும் ஒரு வர்ணத்தார் மற்ற வர்ணத்தாருக்கோ செய்ய வேண்டிய கடமையை அலட்சியப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். அந்த நிலையில், சூத்திர வர்ணத்தவருக்கு மற்ற மூன்று வர்ணத்தவரும் நியாயமாக அளிக்க வேண்டிய ஆதரவை அளிக்க மறுத்தாலோ அல்லது சூத்திரரை அடக்கியே வைத்திருக்க மற்ற மூன்று வர்ணத்தாரும் கைகோத் துக் கொண்டாலோ என்ன நடக்கும்?

சார்புப் போக்கை ஏன் உருவாக்க வேண்டும்?

சூத்திரனின் அறியாமையை ஆதாயம் ஆக்கிக் கொள்ளப் பார்ப்பவன், பார்ப்பனராக இருந்தால் - சூத்திரனின் நலன்களைக் காப்பது யார்? அதுபோன்ற நிலையில் வைசியன், சத்திரியன் ஆகியோரின் நலனைக் காப்பது யார்? சூத்திரனைக் கொள்ளையடிக்கப் பார்ப்பவன் சத்திரியனாக இருந்தால், சூத்திரனின் சுதந்திரத்தைக் காப்பது யார்? அல்லது அதுபோன்ற நிலையில் பார்ப்பனரையும் வைசியரையும் காப்பது யார்? ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பை பரஸ்பரம் சார்ந்து இருப்பது தவிர்க்க முடியாதது. ஒரு வகுப்பு மற்ற வகுப்பை முற்றாகச் சார்ந்து இருப்பதுகூட, சில நேரங்களில் அனுமதிக்கப்படக் கூடியது ஆகலாம்.

ஆனால், உயிராதாரமான தேவைகளுக்கும்கூட ஒருவர் மற்றவர்களைச் சார்ந்து இருக்கும்படி ஆக்கிவைப்பது ஏன்? ஒவ்வொருவரும் கல்வியறிவு பெறவேண்டும். ஒவ்வொருவரும் தற்காப்புக்கான சாதனங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தம்மைத்தாமே காத்துக் கொள்ளவதற்கான தலையாய தேவைகள் இவையே. அண்டை வீட்டுக்காரன் கல்வியறிவும் ஆயுதமும் பெற்றிருப்பதானது, கல்வி அறிவும் ஆயுதமும் பெற்றிராத ஒருவனுக்கு எந்தவகையில் உதவ முடியும்? மொத்தக் கோட்பாடுமே அபத்தமாக ஆகிறது. இந்தக் கேள்விகளைக் கேட்க நால்வர்ண அமைப்பின் ஆதரவாளர்கள் தயங்குவதாகத் தோன்றுகிறது. ஆனால், இந்தக் கேள்விகள் மிகவும் அடிப்படையான கேள்விகள் ஆகும்.

ஆண்டான் - அடிமை உறவு முறையே நால்வர்ணம்

"வெவ்வேறு வகுப்பினருக்கு இடையே உள்ள உறவு முறை, பராமரிப்புக்கு உட்பட்டவனுக்கும் பராமரிக்கிறவனுக்கும் இடையே உள்ள உறவு முறைதான்'' என்பதுதான் நால்வர்ண அமைப்பின் உள்ளடக்கம் என்று, அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இது உண்மையானால், காப்பாளர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து பராமரிப்புக்கு உட்பட்டவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு, இது எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். நால்வர்ண அமைப்பின் அடிப்படையான உறவுமுறை, உண்மையில் பராமரிக்கப்படுபவனுக்கும் காப்பாளனுக்கும் உள்ள உறவுமுறையோ என்னவோ தெரியாது.

ஆனால், நடைமுறையில் அது ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ள உறவுமுறைதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வர்ணங்களும் தமக்கு இடையிலான பரஸ்பர உறவில் அவ்வளவு திருப்தி இல்லாமல் இருந்தாலும், ஒருவருக்கொருவர் சமரசம் செய்துகொண்டு போக முடிகிறது. பார்ப்பனர்கள் சத்திரியர்களை முகஸ்துதி செய்தார்கள். பார்ப்பனனும் சத்திரியனுமாக சேர்ந்து கொண்டு, வைசியனைச் சுரண்டி வாழ்வதற்காக வைசியனை வாழவிட்டார்கள். ஆனால், இந்த மூன்று வர்ணத்தவருமே சூத்திரனை நசுக்குவதில் ஒத்துப் போனார்கள். மநுவின் சட்டங்களைவிட கேவலமானது எதுவுமில்லை

சூத்திரன் சொத்தைத் தேடி அலைய அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால், அதற்கு அனுமதித்தால் அவன் மற்ற மூன்று வர்ணத்தாரையும் சார்ந்து இல்லாமல் போவான். சூத்திரன் கல்வி அறிவு பெறாமல் தடுக்கப்பட்டான். ஏனென்றால், கல்வி அறிவு பெற்று விட்டால் தன் நலன்களைப் பற்றி அவன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவான். சூத்திரன் ஆயுதந்தரித்துவிட்டால், தன்னை ஆளுகின்ற மூன்று வர்ணத்தாரின் அதிகாரத்துக்கும் எதிராக அவன் கிளர்ந்தெழுவான். சூத்திரர்கள் இந்த ன்று வர்ணத்தாராலும் இப்படித்தான் நடத்தப்பட்டார்கள் என்பதற்கு, மநுவின் சட்டங்களைவிட கேவலமான சட்டங்கள் எதுவுமே இல்லை. அவை எல்லாம் மநுவின் சட்டத்துக்கு முன் தூசுதான். மக்களில் பெரும் பகுதியினர் தாம் அனுபவிக்கிற சமூகக் கொடுமைகளை ஏன் சகித்துக் கொண்டிருக்கின்றனர்? உலகில் உள்ள மற்ற தேசங்களில் சமூகப் புரட்சிகள் நடந்து வந்துள்ளன. இந்தியாவில் ஏன் சமூகப் புரட்சிகள் நடக்கவில்லை? இந்தக் கேள்வியை நான் எனக்குள் இடைவிடாமல் கேட்டு வந்தேன்.

ஒரே ஒரு விடைதான் எனக்குக் கிடைத்தது. கேடுகெட்ட இந்த நால் வர்ண அமைப்பின் காரணமாக இந்துக்களில் தாழ்த்தப்படும் சாதியினர், எந்த நேரடி நடவடிக்கையிலும் இறங்க முடியாதவர்களாக முடக்கப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்க முடியாது. ஆயுதம் இல்லாமல் அவர்களால் கிளர்ச்சி செய்ய முடியாது. அவர்கள் எல்லாருமே கலப்பை பிடிப்பவர்கள். இன்னும் சொன்னால், கலப்பையை மட்டுமே பிடிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர்கள். கலப்பைக் கொழுவை வாளாக மாற்றிக் கொள்ள அவர்களுக்கு எப்போதுமே அனுமதி அளிக்கப்பட்டதில்லை. அவர்களிடம் துப்பாக்கி இல்லை. எனவே, அவர்களை அடக்கி ஒடுக்க விரும்பிய அனைவருக்குமே அவ்வாறு செய்வது சாத்தியமாயிற்று. அப்படியே நடக்கவும் நடந்தது.

நால்வர்ண அமைப்பின் காரணமாக, தாழ்த்தப்பட்ட சாதியினரால் கல்வியறிவு பெற முடியவில்லை. எனவே, தங்கள் விடிவுக்கான வழியைப் பற்றி எண்ணவோ, அறியவோ அவர்களால் முடியாமல் போனது. தாழ்த்தப்பட்ட நிலையில்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். அந்த நிøலயிலிருந்து வெளியேறுவதற்கான வழி அவர்களுக்குத் தெரியாது. அதற்கான கருவியும் அவர்களிடம் இல்லை. எனவே, நிரந்தரமான அடிமைகளாக இருப்பதே தங்கள் ‘தலை எழுத்து' என்று அவர்கள் சரணாகதி அடைந்து விட்டனர்.

இந்தியாவில்தான் ஆயுதம் மறுக்கப்பட்டது

அய்ரோப்பாவிலும் கூட வலுத்தவர்கள் நலிந்தவர்களை சுரண்டினர். சரியாகச் சொன்னால், கொள்ளையடிக்கத்தான் செய்தார்கள். ஆனால், சுரண்டலை எதிர்த்து நலிந்தோரால் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு, நால்வர்ண அமைப்பு மூலம் இந்துக்கள் வெட்கங் கெட்ட முறையில் சூழ்ச்சியாக - நலிந்தோரை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பது போன்ற ஏற்பாடு எதுவும் அய்ரோப்பாவில் இல்லையே!

வலுத்தவர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் இடையே ஏற்படுகிற சமூகப் போர்கள் எப்போதுமே இந்தியாவில் நடந்ததைவிட, மிக மிகக் கடுமையாக அய்ரோப்பாவில் நடந்து வந்துள்ளன.

ஆனாலும்கூட, அய்ரோப்பாவில் நலிந்த பிரிவினர் ராணுவத்தில் பணியாற்ற உள்ள உரிமையில் - தங்கள் பவுதீக ஆயுதத்தையும், போராட்டத்தில் தங்கள் அரசியல் ஆயுதத்தையும், கல்வியில் தங்கள் தார்மீக ஆயுதத்தையும் பெற்றே வந்திருக்கிறார்கள். விடுதலைக்கான இந்த ன்று ஆயுதங்களையும் நலிந்த பிரிவினர் பெறமுடியாமல் அய்ரோப்பியாவில் வலுத்தவர்கள் தங்களிடம் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்தியாவிலோ நால்வர்ண அமைப்பின் மூலம் இந்த மூன்று ஆயுதங்களும் மக்களுக்குக் கிடைக்காதபடி மறுக்கப்பட்டன.

நால்வர்ண அமைப்பைவிட, மனிதர்களை இழிவுபடுத்தும் சமூக அமைப்பு எதுவும் இருந்துவிட முடியாது. பயன்தரும் செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ள முடியாதவாறு மக்களை மரங்களாக்கி - முடமாக்கி மூலையில் கிடத்தும் அமைப்பு நால்வர்ண அமைப்பு. நான் ஒன்றும் மிகைப்படுத்திக் கூறவில்லை. என் கூற்றுக்கு வரலாறு ஏராளமான ஆதாரங்களைத் தருகிறது.

இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரே ஒரு காலகட்டம்தான் சுதந்திரமும் பெருமையும் புகழும் கொண்டதாக இருக்கிறது. அது மவுரியப் பேரரசின் காலமே. மற்ற காலங்களில் எல்லாம் தேசம் தோல்வியில் துவண்டு கிடந்தது. அது ஏன்? மவுரியர் காலத்தில் நால்வர்ண அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. மக்களில் பெரும்பான்மையினரான சூத்திரர்கள், அப்பொழுதுதான் தங்களுக்குரிய நிலையை எட்டினார்கள் - நாட்டின் ஆட்சியாளராக ஆனார்கள். இந்த நாட்டின் பெரும்பான்மையினரான மக்களின் அவல நிலைக்குக் காரணமான நால்வர்ண அமைப்பு மேலோங்கிய காலம் - தோல்வியும் அறியாமை இருளும் மேலோங்கிய காலம்.

18

நால் வர்ணத்தை எவரேனும் ஆதரிக்க முடியுமா?

நால்வர்ண அமைப்பு புதியதல்ல. வேதங்களைப் போலவே பழமையானது. நால்வர்ண அமைப்பை ஆதரிக்க வேண்டும் என்று ஆரிய சமாஜத்தார் கூற அதுவும் ஒரு காரணம். கடந்தகால அனுபவங்கøளக் கணக்கில் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், ஒரு சமூக அமைப்பு என்கிற முறையில் நால்வர்ண அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு தோல்வியடைந்து விட்டது. எத்தனையோ முறை பார்ப்பனர்கள் சத்திரியர்களைக் கருவறுத்திருக்கிறார்கள். எத்தனையோ முறை சத்திரியர்கள் பார்ப்பனர்களைக் கருவறுத்திருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கும் இடையிலே ஏற்பட்ட சண்டைகள் - மகாபாரதத்திலும் புராணங்களிலும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. பார்ப்பனரும் சத்திரியனும் தெருவில் சந்தித்துக் கொள்ளும்போது முதலில் வணங்க வேண்டியவன் யார்? யார் முதலில் வழிவிட வேண்டும்? பார்ப்பானா? சத்திரியனா? என்பது போன்ற அற்ப விஷயங்களுக்காகக் கூட, அவர்களுக்குள் சச்சரவு இருந்து வந்திருக்கிறது.

பார்ப்பனர்களுக்கு சத்திரியர்களும் சத்திரியர்களுக்கு பார்ப்பனர்களும் பரஸ்பரம் உறுத்தலாக இருந்து வந்துள்ளனர். அதுமட்டுமா? சத்திரியர்கள் கொடுங்கோலர் ஆனார்கள். நால்வர்ண அமைப்பின் கீழ் ஆயுதம் தாங்கும் உரிமை இல்லாத மக்கள், சத்திரியர்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தங்களை விடுவிக்குமாறு - எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டார்கள். சத்திரியர்களை ஒழிப்பது என்னும் புனிதமான நோக்கத்திற்காகவே மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்ததாக ‘பாகவதம்' கூறுகிறது. பல்வேறு வர்ணங்களுக்குள்ளும் போட்டியும் பகையுமே இருந்து வந்தது நன்கறியப்பட்டு இருக்கிற இந்த நிலையில், ‘நால்வர்ண அமைப்பு என்பதே நம் முடைய குறிக்கோள்' என்றும், அல்லது இந்து சமூ கத்தை சிறப்பாக வடிவமைப் பதற்கான லட்சிய வடிவம் என்றும் எப்படிக் கூறுகிறார்கள்?
Pin It